Breaking News

அரசியல் கைதிகளின் வழக்கை இன்று விசாரணைக்கு எடுக்குமாறு இடையீட்டு மனு



உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மூன்று தமிழ் அரசியல் கைதிகளின் மனுக்களை இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளுமாறு, மேல் முறையீட்டு நீதிமன்றத்திடம் நேற்று அவர்களின் சட்டவாளர் இடையீட்டு மனு ஒன்றின் மூலம், கோரிக்கை விடுத்துள்ளார்.

அனுராதபுர மேல்நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்ட தமது வழக்குகளை வவுனியா மேல்நீதிமன்றத்துக்கு மாற்றி உத்தரவிடக் கோரி, மூன்று அரசியல் கைதிகளின் சார்பில் மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் கடந்த புதன்கிழமை மனுத்தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனு நேற்றுமுன்தினம் விசாரணைக்கு அழைக்கப்பட்ட போது, மனுதாரர்கள் தரப்பில் யாரும் முன்னிலையாகியிருக்கவில்லை.

இந்த நிலையிலேயே நேற்று மனுதாரரின் சட்டவாளர் இடையீட்டு மனுவொன்றை தாக்கல் செய்தார்.

அதில்,நேற்றுமுன்தினம் கூடுதல் பட்டியலில் இந்த வழக்கு சேர்க்கப்பட்டிருந்த விபரம், மனுதாரரின் சட்டவாளருக்குத் தெரியாது என்றும், அதனால் வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது, அவர்கள் தரப்பில் யாரும் முன்னிலையாகவில்லை என்பதால் உத்தரவுகள் எதுவும் பிறப்பிக்கப்படவில்லை என்று கூறப்பட்டுள்ளது.

இதனால் நீதிமன்றத்துக்கு ஏற்பட்ட இடையூறுகளுக்காக மன்னிப்புக் கோருவதாகவும், இந்த வழக்கை இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளுமாறும், அந்த மனுவில் கோரப்பட்டுள்ளது.

அனுராதபுர சிறைச்சாலையில் உண்ணாவிரதப் போராட்டத்தை முன்னெடுத்து வரும், அரசியல் கைதிகளான, இராசதுரை திருவருள், மதியரசன் சுலக்சன், கணேசன் தர்சன் ஆகியோரின் சார்பிலேயே இந்த மனுவை அவர்களின் சட்டவாளர் தாக்கல் செய்துள்ளார்.