மக்கள் வழங்கிய ஆணையிலிருந்து தமிழரசுக் கட்சி வெளியேறி விட்டது
மத்திய குழு கூட்டத்தை அடுத்து சுரேஷ் குற்றச்சாட்டு
மக்கள் வழங்கிய ஆணையிலிருந்து தமிழரசுக் கட்சி வெளியேறி விட்டது. உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தலை எவ்வாறு எதிர்கொள்வது என்பது குறித்து கட்சியின் அரசியல் குழு கூடி தீர்மானிக்கும் என்று ஈ.பி.ஆர்.எல்.எவ். கட்சியின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்தி ரன் தெரிவித்துள்ளார். ஈ.பி.ஆர்.எல்.எவ். மத்திய குழுக் கூட்டம் நேற்று கட்சியின் தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரன் தலைமையில் வவுனியா இந்திரன் விடுதியில் ஐந்து மணித்தியாலங்கள் நடைபெற்றது.
வடக்கு கிழக்கு மாகாணங்களின் எட்டு மாவட்டங்களையும் சேர்ந்த மத்திய குழு உறுப்பினர்கள் இதில் கலந்து கொண்டிருந்தனர்.
சமகால அரசியல் சூழ ல்கள், புதிய அரசியலமைப்பு தொடர்பான இடைக்கால அறிக்கை, அதில் உள்ள பல்வேறு விடயங்கள் உட்பட பல விடயங்கள் கலந்துரையாடப்பட்டதாக கூட்டம் முடிவடைந்ததன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கட்சியின் தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார்.
செய்தியாளர்களுடனான இந்தச் சந்திப்பில் கட்சியின் செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமாகிய சிவசக்தி ஆனந்தன், மட்டக்களப்பில் இருந்து வருகை தந்திருந்த மத்திய குழு உறுப்பினர் ஆர்.துரைரத்தினம், மன்னாரில் இருந்து வருகை தந்திருந்த ஆர்.குமரேஸ் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
இந்த மத்திய குழு கூட்டம் குறித்து சுரேஸ் பிரேமச்சந்திரன் மேலும் தெரிவித்ததாவது:
சமகால அரசியல் சூழல் பற்றியும், புதிய அரசியலமைப்புக்கான இடைக்கால அறிக்கை, இந்த விடயங்களில் தமிழ்த்தேசிய கூட்டமைப்பு தொடர்பில் தமிழரசுக்கட்சி மேற்கொண்டு வருகின்ற நடவடிக்கைகள் குறித்து பல்வேறு விமர்சனங்கள் முன்வைக்கப்படடன.
மாகாண சபைத் தேர்தல் பாராளுமன்றத் தேர்தல்களின் தேர்தல் அறிக்கையில் வடக்கு கிழக்கு மாகாணங்கள் இணைக்கப்பட்டு ஒரு மாகாணமாக இருக்க வேண்டும், தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமை அங்கீகரிக்கப்பட வேண்டும், தமிழ் மக்களுடைய சுயநிர்ணய உரிமை மற்றும் இறையாண்மை என்பன ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும்,
தமிழ் மக்களுக்கு முழுமையான அதிகாரப் பகிர்வுடன் கூடிய ஒரு சுயாட்சி உருவாக்கப்பட வேண்டும் என்பது போன்ற விடயங்களைக் குறிப்பிட்டு தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு அதற்கான மக்கள் ஆணை பெறப்பட்டது, ஆனால், தமிழ் மக்களுடைய முக்கியமாக இந்தக் கொள்கைகள் எல்லாம் கைவிடப்பட்டுள்ளன.
குறிப்பாக புதிய அரசியலமைப்புக்கான இடைக்கால அறிக்கையில் வடகிழக்கு இணைப்பு என்பதும், சமஸ்டி என்பதும் கைவிடப்பட்ட நிலையில், கூட்டமைப்புக்கு மக்கள் கொடுத்த ஆணையில் இருந்து தமிழரசுக்கட்சி வெளியேறியிருக்கின்றது என்பதை மத்திய குழு கூட்டத்தில் கலந்து கொண்டிருந்தவர்கள் சுட்டிக்காட்டினார்கள்.
இவ்வாறான சூழல் என்பது ஆரோக்கியமான விடயமல்ல. தங்களுடைய எதிர்காலம் உரிமைகள் தொடர்பாக கூட்டமைப்பு ஒரு முழுமையான தீர்மானத்திற்கு வரும் என்று தமிழ் மக்கள் எதிர்பார்த்துள்ள போதிலும்,
தமிழரசுக்கட்சி கூட்டமைப்பில் உள்ள ஏனைய கட்சிகளுடன் ஆலோசிக்காமல் அவர்கள் தனித்து தான்தோன்றித்தனமான முறையில் முடிவுகள் எடுப்பதன் ஊடாக கொள்கைகள் அனைத்தும் கைவிடப்பட்டிருக்கின்றது என்பதும் கூட்டத்தில் சுட்டிக்காட்டப்பட்டது.
அது மட்டுமல்லாமல், மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகள் காணாமல் ஆக்கப்பட்டவர்கள் விடயம் அரசியல் கைதிகள் விடயம் என்பவற்றுக்குத் தீர்வு காணப்படாமை குறித்தும் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன.
அரசியல் கைதிகள் விடயத்தில் குறைந்தபட்சம் அனுராதபுரத்தில் உள்ள அவர்களுடைய வழக்குகளை மீண்டும் வவுனியாவுக்கு மாற்ற முடியாமல் இருக்கின்றது. இந்த விடயத்தில்கூட தங்களுடைய நிலைப்பாட்டை மாற்ற முடியாதவாறு, அரசாங்கம் அரசாங்கம் உறுதியாக இருப்பது போன்ற நிலைமைகள் மிகவும் கண்டிக்கப்பட வேண்டும் என்ற கருத்தும் முன்வைக்கப்பட்டது.
அரசாங்கம் கூறுகின்ற நல்லெண்ணம் எல்லாம் அரசாங்கத்தினாலேயே குழிதோண்டி புதைக்கப்படுகின்றது என்ற கருத்தும் எமது மத்தியகுழு தோழர்களினால் முன்வைக்கப்பட்டது.
அது மட்டுமல்லாமல் நேற்றைய தினம் வவுனியாவுக்கு விஜயம் செய்த ஜனாதிபதி அவர்களினால் நாமல்கம, கலாபோகஸ்வௌ போன்ற இடங்களில் யுத்தத்திற்குப் பிற்பாடு, சிங்களப் பகுதிகளில் முக்கியமாக அம்பாந்தோட்டை போன்ற பகுதிகளில் இருந்து கொண்டு வந்து குடியேற்றப்பட்ட அதாவது தமிழ்க்கிராமங்களை கபளீகரம் செய்து சிங்கள மக்களுக்கு தாரைவார்த்துக் கொடுப்பது போன்று, அந்தக் காணிகளுக்கு காணி உறுதிகள் வழங்கப்பட்டிருக்கின்றது.
தமிழ் மக்களுடைய பிரதேசங்கள் இந்த நல்லாட்சி அரசு என்று சொல்லப்படுகின்ற இந்த அரசாங்கத்தில்கூட எந்தவிதமான மாற்றங்களும் இல்லாமல் என்னென்ன விடயங்களை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தமிழ் மக்களுக்கு விரோதமாகச் செய்தாரோ, அதே விடயங்களுக்காக, தமிழ் மக்களுடைய காணிகளுக்கு சிங்கள மக்களுக்கு காணி உறுதிகள் வழங்கும் நடவடிக்கை நேற்று நடைபெற்றுள்ளது.
இந்த நிகழ்வில் சுமந்திரன், செல்வம் அடைக்கலநாதன் ஆகியோர் கலந்து கொண்டிருந்தமையானது, இவர்கள் எல்லோரும் சேர்ந்து தமிழ் பூமியை சிங்கள பூமியாக மாற்றுவதற்கு அரசுடன் உடந்தையாகப் போகின்றார்களா என்ற கேள்வியும் மத்திய குழு உறுப்பினர்களினால் முன்வைக்கப்பட்டது, ஆகவே நடக்கின்ற விடயங்கள் ஆரோக்கியமான விடயங்களல்ல.
முக்கியமாக கூட்டமைப்பு என்ற பெயரில் தமிழரசுக்கட்சி மிகவும் தான்தோன்றித்தனமான முறையில் இந்த விடயங்களைக் கையாள்வதுடன் அந்த விடயங்களை தமிழ் மக்களுக்கு விரோதமான முறையில் செயற்பாடுகளை முன்னெடுத்துச் செல்கின்றது என்ற அடிப்படையில் இது தொடர்பான முடிவுகளை ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி விரைவாக எடுக்க வேண்டும் என்றும் மத்திய குழு உறுப்பினர்கள் சுட்டிக்காட்டியிருக்கின்றார்கள்.
இதனையடுத்து, இது தொடர்பாக ஆராய்ந்து சரியான முடிவு எடுப்பதற்காக கட்சியினுடைய மாநாடு டிசம்பர் மாதம் நடத்தப்பட வேண்டும் என்ற தீர்மா னம் எடுக்கப்பட்டிருக்கின்றது. இந்த விடயம் குறித்து அரசியல் சபையும் முடி வுகளை மேற்கொள்ளும் என்றும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அதேசமயம் உள்ளுராட்சி சபைகளுக்கான தேர்தல்கள் நடத்தப்படலாம் என்றி ருந்தாலும் அது பின்போடப்படலாம் என்ற நிலைமை இருக்கின்றது. இது பற்றி யும் கலந்துரையாடப்பட்டது.
உள்ளுராட்சி சபைகளுக்கான தேர்தலை எவ்வாறு எதிர்கொள்வது என்பது குறித்து கட்சியின் அரசியல் குழு கூடிமுடிவெடுக்க வேண்டும் என்று தீர்மா னிக்கப்பட்டிருக்கின்றது என்றார் சுரேஸ் பிரேமச்சந்திரன்.








