நீதிக்காக காத்திருந்த இரு தாய்மார் மரணம்
சட்டத்தரணியின் உருக்கமான வாதத்தில் கண் கலங்கிய நீதிவான்
ஐந்து மாணவர்கள் உள்ளிட்ட 11 பேர் கடத்தல் விவகாரத்தில், தமது பிள் ளைகள் மற்றும் உறவுகள் காணாமல் ஆக்கப்பட்டமைக்கு நீதி கிடைக்கும் என காத்திருந்த இரு தாய்மார்கள், காணாமல்போன உறவுகளின் ஏக்கத்திலேயே மரணமடைந்துள்ளதாக பாதிக்கப்பட்டோர் தரப்பில் மன்றில் ஆஜராகும் சட்டத்தரணி அச்சலா செனவிரத்ன கோட்டை நீதிவான் லங்காஜயரத்னவின் கவனத்துக்கு நேற்று கொண்டு வந்தார்.
ஐந்து மாணவர் உள்ளிட்ட 11 பேர் கட த்தல் விவகாரம் தொடர்பில் வழக்கு விசாரணை நேற்று கோட்டை நீதி வான் லங்க ஜயரத்ன முன்னிலை யில் விசாரணைக்கு வந்த போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
இதன்போது அது தொடர்பில் ஆழ்ந்த அனு தாபங்களை தெரிவித்த நீதிவான் லங்கா ஜயரத்ன, விசாரணைகள் தற்போது துரிதமாக இடம்பெறுவதாகவும், இயன்றவை விரைவாக நீதியைப் பெற்றுக்கொடுக்கவே தான் முயற்சிப்பதாகவும் கண் கலங்கிய நிலையில் தெரிவித்தார். ஆரம்பத்தில் சட்டத்தை அமுல் செய்வதில் தாமதங்கள் இரு ந்தை ஒப்புக்கொண்ட நீதிவான் தற்போது சந்தேக நபர்கள் பலர் கைதாகியுள்ள நிலையில் அந் நிலைமை மாற்றமடைந்துள்ளதாகவும், தாய்மார் இருவர் நீதிக்கான ஏக்கத்திலேயே மனம் வருத்ததுடன் உயிரிழந்திருக்கலாம் எனவும் அது தொட ர்பில் தான் கவலையடைவதாகவும் நீதிவான் சுட்டிக்காட்டினார்.
நேற்று வழக்கு விசாரணைகள் ஆரம்பமான போது பாதிக்கப்பட்ட தரப்பின் சட்டத்தரணி அச்சலா செனவிரத்ன, விஷேட கருத்துரையை முன்வைத்து பின்வருமாறு கூறினார்.
கனம் நீதிவான் அவர்களே,
இந்த வழக்கில் சந்தேக நபரான தஸநாயக்கவுக்கு எந்த நோயும் இல்லை என சட்ட வைத்திய அதிகாரியின் அறிக்கையூடாக தெளிவாகியுள்ள நிலையில், அவர் நீதிமன்றை தவறாக வழி நடாத்தி தொடர்ந்தும் கடற்படை வைத்தியசாலையில் தங்கியுள்ளார்.
ஏன் அவருக்கு மட்டும் இப்படி விஷேட சலுகை வழங்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் நீதிமன்றம் கவனத்தில் கொண்டு ஆராய வேண்டும்.
இவர்களுக்கு இப்படி வரப்பிரசாதம் கிடைக்கும் நிலையில், தமது பிள்ளைகளை பறிகொடுத்த தாய்மார் இருவர் நீதிக்காக ஏங்கிய நிலையிலேயே இதுவரை உயிரிழந்துள்ளனர்.
ஏற்கனவே ஒரு தாய் மரணமடைந்த நிலையில் கடந்தவாரம் தனது இரு பிள்ளைகள் விடயத்தில் நீதி கிடைக்கும் என ஒவ்வொரு முறையும் நீதிமன்ற படியேறி, நீதிக்காக காத்துக் கிடந்த மேரி வசந்தா பீரிஸ் அல்லது யசோதரா எனும் தாய் உயிரிழந்துள்ளார்.
இவ்வாறு தாய்மார் உயிரிழக்கும் போது அவர்களுக்கு கிடைக்க வேண்டிய நீதி தொடர்ந்து தாமதமடைந்துகொண்டே செல்கிறது. என தெரிவித்தார்.
இதன்போது அதற்கு பதிலளித்த நீதிவான் லங்கா ஜயரத்ன, தற்போது விசாரணைகள் சரியாக இடம்பெறுகின்றன.
ஹெட்டி ஆராச்சியை கைது செய்யாது இந்த வழக்கை அடுத்த கட்டம் நோக்கி நகர்த்துவது கடினமானதாகும். இயன்றவரை சீக்கிரம் நீதியைப் பெற்றுக்கொடுக்கவே நான் முயற்சிக்கின்றேன்.
அந்த தாய்மார் இறப்பதற்கு தமது பிள்ளைகள் தொடர்பிலான நீதியைக்கோ ரும் ஏக்கம் பிரதான காரணமாக இருக்கலாம். நான் அது தொடர்பில் ஆழ்ந்த கவலையடைகின்றேன். என கலங்கிய கண்களுடன் அறிவித்தார்.
ஏற்கனவே கடத்தப்பட்ட 11 பேரில் உள்ளடங்கும் திலகேஸ்வரனின் தாய் உயி ரிழந்திருந்த நிலையில் கடந்தவாரம் கடத்தப்பட்டோர் பட்டியலில் உள்ள அமலன் லியோன், ரொஷான் லியோன் ஆகியோரின் தாயான யசோதரா உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.