Breaking News

காணா­மல்­போன சிறு­மிகள் இரு­வரும், யுவ­தியும் சரண்

15 வயது சிறு­மியின் காதலன், எம்.பி. ஒரு­வரின் உற­வினர் உள்­ளிட்ட நால்வர் கைது 

கிராண்ட்பாஸ் பொலிஸ் பிரிவில் காணாமல் போன­தாக கூறப்­பட்ட கொ லன்­னாவை சால­முல்­லவைச் சே ர்ந்த இரு சிறு­மிகள் மற்றும் இளம் தாயான யுவதி ஆகியோர் நேற்று வெல்­லம்பிட்­டிய மற்றும் கம்­பஹா பொலிஸ் நிலை­யங்­களில் சர­ண­டைந்த நிலையில் பாது­காப்­பாக மீட்­கப்­பட்­டுள்­ளனர். 

எனினும் அவர்கள் இவ்­வாறு திடீ­ரென காணாமல் போன­மைக்­கான காரணம் துல்­லி­ய­மாக நேற்று மாலை வரை வெளிப்­ப­டுத்­தப்­ப­டாத நிலையில் இரு முக்­கிய கோணங்­களில் பொலிஸார் தீவிர விசா­ர­ணை­களை முன்­னெ­டுத்­துள்­ளனர். 

இந்த விவ­காரம் தொடர்பில் நேற்று மாலை­யாகும் போது காணாமல் போன நிலையில் பொலிஸில் சர­ண­டைந்த 19 வய­தான இளம் தாய், 15 வய­தான சிறு­மியின் காதலன், உள்­ளிட்­ட­வர்­களை கைது செய்­த­தாக பொலிஸ் ஊடகப் பேச்­சாளர் பொலிஸ் அத்­தி­யட்சர் ருவன் குண­சே­கர தெரி­வித்தார்.

எனினும் இந்த நால்­வரில் ஒருவர் யக்­கல பொலி­ஸாரால் கைது செய்­யப்­பட்­டுள்ள நிலையில், அவர் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் ஒரு­வரின் மாமியார் உறவு முறை­யி­லா­னவர் என பொலிஸ் தலை­மை­ய­கத்தின் உயர் பொலிஸ் அதி­காரி ஒருவர் கேச­ரிக்கு தெரி­வித்தார். 

குறித்த பாரா­ளு­மன்ற உறுப்­பி­னரின் மாமி­யாரின் வீட்டில் 14 வய­தான காணாமல் போன சிறுமி வீட்டு வேலை­க­ளுக்­காக அமர்த்­தப்­பட்­டமை தொட ர்பில் தக­வல்கள் வெளிப்­ப­டுத்­தப்­பட்­டதால் யக்­கல பொலிஸார் அவரைக் கைது செய்­த­தாக அந்த உயர் பொலிஸ் அதி­காரி சுட்­டிக்­காட்­டினார். 

சிறு­மிகள் மற்றும் யுவதி காணாமல் போன­மைக்­கான காரணம் தொடர்பில் நேற்று மாலை­யாகும் போதும் பொலிஸார் தீவிர விசா­ர­ணை­களை முன்­னெ­டுத்­தி­ருந்­தனர். 

15 வய­தான சிறு­மியின் காதல் தொடர்பு, வீட்டு வேலை­க­ளுக்­காக சிறு­மி­களை அமர்த்தும் சட்­ட­வி­ரோத நட­வ­டிக்கை என்­பன இந்த காணாமல் போன­மையின் பின்­ன­னியில் உள்­ளதா என பொலிஸார் தீவிர விசா­ர­ணை­களை ஆரம்­பித்­துள்­ளனர். 

கடந்த சனிக்­கி­ழமை (14 ஆம் திகதி) கொலன்­னாவை - சால­முல்ல பகு­தியைச் சேர்ந்த 19 வய­தான இளம் தாய் மலினி வத்­சலா பெரேரா, அவ­ரது சகோ­தரி முறை­யி­லான 15 வய­து­டைய யஷந்தி மது­ஷானி பெரேரா மற்றும் அவ­ர­க­ளது வீட்டின் அருகே வசிக்கும் 14 வய­து­டைய சரிதா சுவேதா எனும் தமிழ் சிறுமி ஆகியோர் காணாமல் போயி­ருந்­தனர். 

கிராண்ட்பாஸ் பொலிஸ் பிரி­வுக்கு உட்­பட்ட ஒரு­கொ­ட­வத்தை பகு­தியில் உற­வினர் வீடொன்­றுக்கு வந்­து­விட்டு, தீபா­வ­ளிக்­காக சுவே­தா­வுக்கு ஆடை கொள்­வ­னவு செய்ய செல்­வ­தாக கூறி­விட்டு வெளி­யே­றி­யி­ருந்த நிலை­யி­லேயே அவர்கள் மூவரும் இவ்­வாறு காணாமல் போயி­ருந்­தனர். 

இத­னை­ய­டுத்து இவர்கள் மூவரும் காணாமல் போனமை தொடர்பில் கிரேண்ட்பாஸ் மற்றும் வெல்­லம்­பிட்டி பொலிஸ் நிலை­யங்­களில் இரு முறைப்­பா­டுகள் பதிவு செய்­யப்­பட்­டி­ருந்­தன. 

அது தொடர்பில் மேல்­மா­கா­ணத்­துக்கு பொறுப்­பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் நந்­தன முன­சிங்­கவின் மேற்­பார்­வையில் மேல் மாகா­ணத்தின் தெற்கு பகு­திக்கு பொறுப்­பான பிரதிப் பொலிஸ் மா அதிபர் வசந்த விக்­ர­ம­சிங்­கவின் ஆலோ­ச­னைக்கு அமைய நுகே­கொட பொலிஸ் பிராந்­தி­யத்தின் பொலிஸ் அத்­தி­யட்சர் பிரசாத் ரண­சிங்­கவின் ஆலோ­ச­னைக்கு அமை­வாக வெல்­லம்­பிட்­டிய பொலிஸ் நிலைய பொறுப்­ப­தி­காரி பிர­தான பொலிஸ் பரி­சோ­தகர் சஞ்­ச­யவின் கீழ் விஷேட விசா­ர­ணைகள் ஆரம்­பிக்­கப்­பட்­டன. 

இரு சிறு­மிகள் மற்றும் யுவ­தி­யான இளம் தாய் காணாமல் போனமை கடந்த சனிக் கிழமை முதல் 4 நாட்கள் தொடர் மர்­ம­மாக இருந்­தது. இந் நிலையில் பொலிஸார் நேற்று முன் தினம் புதுக் கடை நீதிவான் நீதி­மன்றில் பெற்­றுக்­கொண்ட அனு­ம­திக்கு அமைய தொலை­பேசி இலக்­கங்கள் பல­வற்றை சோதனை செய்­ததன் ஊடாக பல்­வேறு தக­வல்­களை வெளிப்­ப­டுத்­திக்­கொண்­டனர். 

இத­னை­விட பொலி­ஸா­ருக்கு கிடைத்த தக­வல்கள் ஊடாக ஹொரணை, அனு­ரா­த­புரம் பகு­தி­க­ளுக்கும் சென்று பொலிஸார் விசா­ர­ணை­களை செய்­தி­ருந்­தனர். இந் நிலை­யி­லேயே பொலிஸ் விசா­ர­ணை­களில் வெளிப்­ப­டுத்­தப்­பட்ட தக­வல்­க­ளுக்கு அமை­வாக நேற்று முன்­தினம் இரவு வெல்­லம்­பிட்டி பொலி ஸார், காணாமல் போன 15 வய­தான யஷந்தி மது­ஷானி பெரே­ராவின் காதலன் என கூறப்­படும் இளை­ஞரை பொலிஸ் நிலையம் அழைத்து விசா­ர­ணை­களை ஆரம்­பித்­தனர். 

யஷந்தி வசித்த அதே பகு­தியை சேர்ந்த குறித்த இளை­ஞனை பொலிஸார் விசா­ரணை செய்ய ஆரம்­பித்த நிலையில் நேற்று முற்­பகல் 19 வய­தான இளம் தாயும் அவ­ரது சகோ­த­ரி­யான 15 வயது யஷந்­தியும் வெல்­லம்­பிட்டி பொலிஸ் நிலை­யத்தில் சர­ண­டைந்­தனர். 

இத­னை­ய­டுத்து பொலிஸார் அவர்கள் இரு­வ­ரி­டமும் தொடர் விசா­ர­ணை­களை முன்­னெ­டுத்­தனர். இதன்­போது அவ்­வி­ரு­வரும் முன்­னுக்கு பின் முர­ணான தக­வல்­க­ளையே பொலி­ஸா­ரிடம் கூறி­யுள்­ளனர். 

பொலிஸார் அவர்­க­ளுடன் சேர்ந்து காணாமல் போன 14 வய­தான சரிதா ஸ்வேதா தொடர்பில் விசா­ரணை செய்­துள்ள போது சுவேதா கம்­பஹா பகு­தியில் வெஹ­ர­கொ­டல்ல எனும் இடத்தில் இருப்­ப­தாக அவர்கள் கூறி­யுள்­ளனர். 

இத­னை­ய­டுத்து வெல்­லம்­பிட்டி பொலிஸ் நிலை­யத்தின் சிறப்புக் குழு­வொன்று உட­ன­டி­யாக கம்­பஹா நோக்கி புறப்­பட்டுச் சென்­றுள்­ளது. அந்த நேர த்தில் 14 வய­தான சுவேதா, பிறி­தொரு பெண்­ணுடன் கம்­பஹா பொலிஸ் நிலை­யத்­துக்கு சென்று சர­ண­டைந்­துள்ளார். 

சுவே­தாவை கம்­பஹா சென்ற வெல்­லம்­பிட்டி பொலிஸ் குழு பொறுப்­பேற்று வெல்­லம்­பிட்­டிக்கு அழைத்து வந்­துள்­ளது. விசா­ர­ணை­களை மேற்­ப­ரவை செய்யும் உயர் அதி­கா­ரி­களின் ஆலோ­ச­னைக்கு அமை­வாக காணாமல் போய் பின்னர் நேற்று பொலிஸில் சர­ண­டைந்த 19 வய­தான இளம் தாயையும் 15 வய­தான யஷந்­தியின் காத­ல­னையும் முதலில் பொலிஸார் கைது செய்­தனர். 

15, 14 வய­து­களை உடைய இரு சிறு­மி­களை அவர்­க­ளது சட்ட ரீதி­யி­லான பாது­காப்பில் இருந்து பிரித்த குற்­றச்­சாட்­டுக்­காவும் அதற்கு உதவி ஒத்­தாசை அளித்­தமை தொடர்­பிலும் அவர்கள் இவ்­வாறு கைது செய்­யப்­பட்­டனர். 

இத­னை­ய­டுத்து 14 வய­தான சுவே­தாவை கம்­பஹ அபொலிஸ் நிலையம் அழைத்து வந்த பெண்ணையும் அதே குற்றச்சாட்டில் மேலதிக விசாரணை களுக்காக பொலிஸார் கைது செய்தனர். 

 இதனையடுத்து முன்னெடுக்கப்பட்ட மேலதிக விசாரணைகளில் 14 வயதான சுவேதா, காணாமல் போனதன் பின்னர் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரின் மனைவியின் தாய் வீட்டில் வேலைக்காக அமர்த்தப்பட்டமை தொடர்பில் தகவல்கள் வெளிப்படுத்தப்பட்டுள்ளன. 

அது தொடர்பில் பொலிஸாரின் அவதானம் திரும்பிய நிலையில் பாராளு மன்ற உறுப்பினரின் மாமியாரை யக்கல பொலிஸார் நேற்று மாலை கைது செய்தனர்.