அதிகாரப்பகிர்வு தமிழ் மக்களின் பிரச்சினைக்கு தீர்வைத் தராது- கோத்தா
மேலதிக அதிகாரப் பகிர்வு தமிழ்மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளைத் தீர்க்காது என்று சிறிலங்காவின் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
கம்பகாவில் நேற்றுமுன்தினம் நடந்த நிகழ்வு ஒன்றில் உரையாற்றிய அவர்,
“எந்தவொரு நாட்டிலும் அதிகாரப் பகிர்வின் உதவியுடன் பிரச்சினைகள் தீர்க்கப்பட்டதாக நான் அறியவில்லை.
முன்னர் இராணுவத் தீர்வுக்கு எதிர்ப்புத் தெரிவித்தவர்கள் தான், தற்போது புதிய அரசியலமைப்புக்காக பரப்புரை செய்கின்றனர். எந்தச் சூழ்நிலையிலும் போரின் மூலம் வெற்றியைப் பெற முடியாது என்று அவர்கள் எப்போதும் கூறிவந்தார்கள்.
2005இல் நான் பாதுகாப்புச் செயலராகப் பதவியேற்ற போது எனக்கும் அவர்கள் இதே ஆலோசனையை வழங்கினார்கள்.
விடுதலைப் புலிகளைத் தோற்கடிக்க முடியாது என்று சில நாடுகளும் கூட கூறின.
2002 பெப்ரவரியில், சிறிலங்கா, நோர்வே அரசாங்கங்கள் விடுதலைப்புலிகள் என செய்து கொள்ளப்பட்ட முத்தரப்பு உடன்பாடு, பயங்கரவாதத்துக்கு எதிரான சிறிலங்காவின் வெற்றியைத் தடுக்கும் நோக்கில் செய்யப்பட்டதாகும்.
மகிந்த ராஜபக்ச அரசாங்கம் போருக்குப் பின்னர், பிரிவினைவாத உணர்வுகளைத் தூண்டுபவர்களின் அபிலாசைகளை நிறைவேற்றுவதற்குப் பதிலாக, மக்களின் பிரச்சினைகளைத் தீர்க்க முயன்றது.
ஆனால் தற்போது நிலைமை மாறியுள்ளது. வடக்கிலுள்ள மக்களின் பிரச்சினைகளுக்கு மேலதிக அதிகாரப் பகிர்வோ, அரசியலமைப்பு திருத்தமோ, தீர்வைத் தராது.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.