வழக்குகளை அனுராதபுரம் நீதிமன்றுக்கு மாற்றியமை தவறான செயற்பாடு
சட்டமா அதிபர் மீது முதலமைச்சர் சி.வி. விசனம்
மூன்று தமிழ் அரசியல் கைதிகளின் வழக்குகளை வவுனியா நீதிமன்றத்திலிருந்து அனுராதபுரம் நீதிமன்றத்துக்கு சட்டமா அதிபர் மாற்றியுள்ளமை தவறான செயற்பாடாகும். இவ்வாறான செயற்பாடு குறித்த கைதிகளின் மனித, சட்ட உரிமைகளை பாதிக்கும் விடயமாகும்.
சட்டமா அதிபர் இந்த விடயத்தில் தவறிழைத்துள்ளார் என்று வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் குற்றம் சுமத்தியுள்ளார். வவுனியா நீதிமன்றத்திலிருந்து தமது வழக்குகளை அனுராதபுரம் நீதிமன்றுக்கு மாற்றியமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து அனுராதபுரம் சிறைச்சாலையில் மூன்று அரசியல் கைதிகள் தொடர்ச்சியான உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதுகுறித்தும் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பாகவும் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனிடம் ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பியிருந்தனர். இதற்குப் பதிலளித்த போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் மேலும் தெரிவித்ததாவது,
இரண்டு விடயங்கள் உண்டு. ஒன்று பொதுவானது. மற்றது பிரத்தியேகமானது. அதாவது தமிழ் அரசியல் கைதிகள் அனைவரும் உடனே பொது மன்னிப்பின் கீழ் விடுதலை செய்யப்பட வேண்டும் என்பது பொதுவான கோரிக்கை.
அது பயங்கரவாதத் தடைச்சட்டத்துடன் தொடர்புடையது. ஜெனிவாவில் பல வருடங்களுக்கு முன்னரே ஐ.நாவுக்கு பயங்கரவாதத் தடைச்சட்டத்தை உடனே கைவாங்குவதாக உறுதி மொழி கொடுத்த இலங்கை இன்னமும் அதைச் செய்யவில்லை.
அதனைக் கைவாங்கி விட்டால் அதன் கீழ் குற்றவாளிகளாக காணப்பட்டவர்களை உடனே பொது மன்னிப்பின் கீழ் விடுதலை செய்யுங்கள் என்று கோருவது இலகுவாய் இருந்திருக்கும்.
ஏனென்றால் எமது வழக்கமான சட்ட ஏற்பாடுகளுக்கு முரணான ‘ரத்துக்களே குறித்த பயங்கரவாதத் தடைச்சட்டத்தில் இது காறும் இருந்து வந்துள்ளன. அவற்றின் அடிப்படையிலேயே பெரும்பான்மையான கைதிகள் இதுவரையில் குற்றவாளிகளாகக் காணப்பட்டுள்ளனர்.
அதாவது எமது வழமையான சட்டத்தின் ஏற்பாடுகளுக்கு முரணான விதத்திலேயே அவர்கள் குற்றவாளிகள் ஆக்கப்பட்டுள்ளார்கள்.
இங்கு தான் நான் கூறிய பிரத்தியேகமான இரண்டாம் விடயம் வருகிறது.
அதாவது தற்பொழுது அநுராதபுரத்தில் விளக்கத்திற்காக அநுராதபுர சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் கைதிகள் பிரச்சனை. முன்னையது பொது என்றால் இது குறிப்பிட்ட கைதிகளோடு தொடர்புடையது.
2009 இல் இருவர் கைது செய்யப்பட்டு 2012 வரையில் நடவடிக்கை ஏதும் எடுக்காமல் தொடர்ந்து மறியலில் வைத்திருக்கப்பட்டார்கள். மூன்றாம் நபரைக் கைது செய்த பின் 2012 இல் குற்றச்சாட்டுப் பத்திரம் கையளிக்கப்பட்டுள்ளது.
ஐம்பது தடவைகளுக்கு மேல் வழக்கு தவணை கொடுக்கப்பட்டு ஈற்றில் மூன்று நாட்களுக்கு தொடர் விளக்கம் வவுனியா மேல் நீதிமன்றத்தில் நியமிக்கப்பட்டு வழக்கு தொடங்கவிருக்கும் நேரத்தில் அநுராதபுரத்திற்கு மாற்றுமாறு சட்டத்துறை தலைமை அதிபதி ஆணை வழங்கியுள்ளார்கள்.
இது ஒரு பொறுப்பற்ற செயலாகத் தென்படுகிறது.
உண்மையில் வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி வேண்டாவெறுப்பாகத்தான் உத்தியோகபூர்வ கட்டாயத்தின் நிமித்தம் வழக்கை அநுராதபுரத்திற்கு மாற்றினார்.
காரணங்கள் கூறப்படாவிட்டாலும் சாட்சிகள் பயமுறுத்தப்பட்டதாலேயே இவ்வாறு மாற்றியதாகக் கூறப்படுகின்றது.
சட்டப்படி சாட்சிகளுக்காக வழ க்கை இன்னொரு நீதிமன்றத்திற்கு மாற்றுவது கண்டனத்திற்குரியது.
சாட்சிகளைப் பொலிஸாரே மன்றுக்குக் கொண்டுவந்து திரும்பவும் கொண்டு போய் அவர்கள் வதிவிடங்களில் சேர்ப்பிக்க முடியும். ஒன்றரை இலட்சம் படையினர் வடமாகாணத்தில் குடி கொண்டிருக்கும் போது சாட்சிகள் பயந்துவரத் தயங்குகின்றார்கள் என்பது எனக்கு ஒரு நொண்டிச்சாட்டாகவே தென்படுகிறது.
மருத்துவமனையில் இருந்து கொண்டே இது பற்றி ஆராய்ந்தேன். எனக்குக் கிடைத்த தகவல்களின் படி போர் முடிவடையும் தறுவாயில் முன்னரே கைது செய்து வைத்திருக்கப்பட்ட சிலரை விடுதலைப்புலிகள் கொன்றார்கள் என்றும் அதனுடன் இந்த குறிப்பிட்ட கைதிகள் தொடர்புபட்டிருந்தார்கள் என்பதே அவர்கள் மீதான குற்றச்சாட்டுகளுக்கு அடிப்படை என்று தெரிய வந்துள்ளது.
அத்துடன் கைதில் இருக்கும் வேறு சில கைதிகள் அரச சாட்சிகளாக மாறி குறித்த கைதிகளுக்கு எதிராகச் சாட்சியம் கூறினால் விடுதலை கிடைக்கும் என்று அவர்களுக்குக் கூறப்பட்டதாகத் தெரிகின்றது.
அப்படியெனில் அரச சாட்சிகளாகமாறிய இந்த மூன்று தமிழ்ச் சாட்சிகள் பற்றியே அரசுக்கு கரிசனை போலத் தெரிகிறது. இங்கு அரசியல் கலந்திருப்பதை நான் காண்கின்றேன்.
நடந்ததோ இல்லையோ எப்படியாவது விடுதலைப்புலிகள் கடைசிக் கட்டத்தில் தம்வசம் இருந்த சிறைக்கைதிகளைச் சுட்டுக்கொன்றார்கள் என்பது நீதிமன்றத்தில் நிரூபணமாகிவிட்டால் படையினர் செய்த அட்டூழியங்களுக்குச் சமனாகப் புலிகளும் யுத்த குற்றங்களில் ஈடுபட்டிருந்தனர் என்று சர்வதேச அரங்குகளில் இலங்கை அரசாங்கம் கூறமுடியும்.
இதனால்த்தான் வேறு கைதிகளையே அரச சாட்சிகளாக்கி தமக்கு வேண்டிய ஒரு முடிவை குறித்த வழக்கில் கொண்டுவர அரசு பிரயத்தனத்தில் ஈடுபட்டுள்ளதாகத் தெரிகின்றது.
இவை என்னுடைய ஊகமே ஔிய முழுமையான தரவுகள் எனக்கு இன்னமுந்தரப்படவில்லை.
சாட்சிகள் வவுனியா வரப் பயப்படுகின்றார்கள் என்றால் யார் யார் என்னமாதிரியான பயமுறுத்தல் காரணமாக அங்கு வரப் பயப்படுகின்றார்கள் என்று சட்டத்துறை தலைமையதிபதிக்கு சத்தியக் கடதாசிகள் கையளித்துள்ளார்களா என்பதை அவர் வெளிப்படுத்த வேண்டும்.
குறித்த தமிழ் அரச சாட்சிகள் தமிழ்ப் பிரதேச நீதிமன்றத்தில் தமிழ் நீதிபதி முன்னிலையில் சுதந்திரமாக சாட்சியமளிக்க முடியும்.
அவ்வாறு சாட்சியமளிக்கும் போது தம்மிடம் இருந்து எவ்வாறு சாட்சியங்களுக்கான விபரங்களை அரச தரப்பு பெற்றுக்கொண்டது என்பதை அவர்கள் வெளிப்படுத்தி விடுவார்களோ என்ற பயமே வழக்கை அநுராதபுரத்திற்கு மாற்றியமைக்கான காரணம் என நான் யுகிக்கின்றேன்.
உண்மை வெளிவந்தால் வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி வழக்கைத் தூக்கி எறியத் தயங்க மாட்டார் என்பது சட்டத்துறைத் தலைமை அதிபதிக்குத் தெரியும்.
மேலும் குற்ற ஒப்புதல் வாக்கு மூலங்கள் வளமையான சட்டத்திற்குப் புறம்பாக, தருணத்திற்கு ஏற்றவாறு கொண்டுவரப்பட்ட மிகக் கேவலமான சாட்சியம் என்றே உச்ச நீதிமன்ற நீதியரசர் விக்னேஸ்வரன் உள்ளடங்களாக நீதிபதிகள் பலர் கணித்து வந்துள்ளனர்.
நாகமணி வழக்கில் நீதியரசர் விக்னேஸ்வரன் அவர்கள் குற்ற ஒப்புதல் வாக்குமூலம் ஒன்றை மட்டுமே சாட்சியமாக வைத்து ஒருவரைக் குற்றவாளியாக்குவது மிகவும் ஆபத்தானது என்று குறிப்பிட்டுள்ளார்.
ஆகவே குறித்த ஒப்புதல் வாக்குமூலங்களில் நடந்ததாகக் கூறப்படும் முக்கிய விடயங்கள் சம்பந்தமாக அனுசரணைச் சாட்சியமும் பெறப்படவேண்டும் என்று கூறியிருந்தார்.
இவற்றை சில நீதிமன்றங்கள் ஏற்றுக் கொண்டுள்ளன. பல ஏற்றுக்கொள்ள வில்லை. மேற்படி தமிழ் அரச சாட்சிகளின் சாட்சியம் முரணாக இருந்தால் கூட வெறுமனே குற்ற ஒப்புதல் வாக்கு மூலங்களை வைத்து கைதிகளைக் குற்றவாளிகள் ஆக்கிவிடலாம் என்றே அரசு கருதுகின்றது.
இதனால் தான் வெறும் குற்ற ஒப்புதல் வாக்கு மூலங்களை மட்டும் வைத்து குற்றவாளிகளாக்கிக் கொண்டிருக்கும் நீதிமன்றங்களுக்கு மாற்றுவதை உசித மென அரசாங்கமும் அதன் சட்டத்துறைத் தலைமையதிபதியும் எண்ணு கின்றார்கள் போல் தெரிகின்றது.
எது எவ்வாறு இருப்பினும் இவ்வாறான மாற்றுதல் கைதிகளின் மனித, சட்ட உரிமைகளைப் பாதிக்கின்றன. சட்டத்துறைத் தலைமையதிபதி புறநிலை வைத்தே இவ்வாறான வழக்குகளை நோக்கவேண்டுமேயொழிய அக நிலை யில் இருந்து நோக்குவது கண்டிக்கத்தக்கது.