தமிழ் அரசியல் கைதிகளுக்கு ஆதரவாக யாழில் போராட்டம்
பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டு ஸ்ரீலங்கா சிறைச்சாலைகளில் நீண்டகாலமாக தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்யுமாறு வலியுறுத்தி யாழ்ப்பாணத்தில் இன்றும் கவனயீர்ப்புப் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
அரசியல் கைதிகளை பாதுகாக்கும் தேசிய அமைப்பின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணம் நகர மத்தியில் கண்டன ஆர்ப்பாட்டம் இடம்பெறுகின்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமசந்திரன், தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளர் செல்வராசா கஜேந்திரன், மக்கள் விடுதலை முன்னணியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ராமலிங்கம் சந்திரசேகரன், காணாமல் போனவர்களின் உறவினர்கள், அரசியல் கைதிகளின் உறவினர்கள் மற்றும் மனித உரிமை செயற்பாட்டாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
அத்துடன் ஆர்ப்பாட்டக்காரர்கள் சிவப்பு நிற மையினால் பெருவிரல் அடையாளத்தையும் பதித்துள்ளனர்.