Breaking News

இறைமையும் உரிமையும் – பி.மாணிக்கவாசகம்

புதிய அர­சி­ய­ல­மைப்பில் தமிழ் மக்­க­ளுக்கு இறைமை பகி­ரப்­பட்­டி­ருக்க வேண்டுமென தமிழ்த்­தே­சிய கூட்­ட­மைப்பின் தலைவர் இரா.சம்­பந்தன் வலி­யு­றுத்­தி­யுள்ளார். கூட்­ட­மைப்பின் தேர்தல் அறிக்­கை­யிலும் இவ் விட யம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன் அடிப்­ப­டை­யி­லேயே மக்கள் ஆணை யை தமிழ்த்­தே­சிய கூட்­ட­மைப்பு பெற்­றி­ருக்­கின்­றது. 

பகி­ரப்­பட்ட இறைமை மட்­டு­மல்­லாமல், சுய­நிர்­ணய உரிமை, சமஷ்டி போன்ற வேறு விட­யங்­க­ளும்­கூட அதில் இடம்­பெற்­றி­ருக்­கின்­றன. தேர்­த­லுக்­காக மட்டும் அந்தத் தேர்தல் அறிக்கை முன்­வைக்­கப்­ப­ட­வில்லை. 

புதிய அர­சி­­ய­லமைப்பு ஒன்றை உரு­வாக்­கு­வ­தற்­காக அர­சியல் கட்­சி­க­ளி­னதும், பொது அமைப்­புக்களினதும் பொது­மக்­க­ளி­னதும் கருத்­துக்கள் திரட்­டப்­பட்­ட­போது, இனப்­பி­ரச்­சி­னைக்கு நிரந்­த­ர­மா­னதோர் அர­சியல் தீர்வு காணும் வகையில் தமிழ்த்­தே­சிய கூட்­ட­மைப்பு முன்­மொ­ழி­வு­களை வைக்­க­வில்­லையா என்ற வினா எழுந்­த­போது, தமிழ்த்­தே­சிய கூட்­ட­மைப்பின் தேர்தல் அறிக்­கையில் எல்லா விட­யங்­களும் கூறப்­பட்­டி­ருக்­கின்­றன. 

அதையே கூட்­ட­மைப்பின் முன்­மொ­ழி­வாகக் கொள்­ளப்­ப­டு­கின்­றது என பதி­ல­ளிக்­கப்­பட்­டி­ருந்­தது. சுய­நிர்­ணய உரி­மையும், சமஷ்டி ஆட்சி முறையும் சிங்­கள அர­சி­யல்­வா­திகள், அர­சியல் கட்­சிகள் மட்­டு­மல்­லாமல், சிங்­கள மக்­கள் மத்­தி­யிலும் அர­சியல் ரீதி­யாக ஆபத்தான சொற்­க­ளாக உரு­வ­கப்­ப­டுத்­தப்­பட்­டி­ருக்­கின்­றன. 

குறிப்­பாக தனி­நாட்டு கோரிக்­கையை முன்­வைத்து, அகிம்சை ரீதி­யா­கவும், ஆயு­த­மேந்­தியும் தமி­ழர்கள் போராட்டம் நடத்­தி­யதன் பின்­ன­ணியில் அர­சியல் ரீதி­யான இந்த இரண்டு விட­யங்­களும் பிரி­வி­னைக்கு வித்­தி­டு­வன. 

நாட்டைத் துண்­டா­டு­வ­தற்­காக முன்­வைக்­கப்­ப­டு­கின்ற கோரிக்­கைகள் என சிங்­க­ள­வர்கள் மத்­தியில் ஆழ­மான கருத்து உரு­வாக்­கப்­பட்­டி­ருக்கின்றது. இறைமை பகி­ரப்­ப­டு­வதா……? இ

ந்த நிலையில் இறைமை குறித்து சிந்­திப்­பதும், அர­சியல் தீர்வில் தமிழ் மக்­க­ளுக்கு இறைமை பகிர்ந்­த­ளிக்­கப்­பட வேண்டும் என்ற கோரிக்கை குறித்து நோக்­கு­வதும் அவ­சி­ய­மா­கின்­றது. 

இறைமை என்­பது ஒரு நிலப்­ப­ரப்பின் அதி­கார எல்­லைக்குள் நில­வு­கின்ற அதி­யுச்ச அதி­கா­ரத்­தையே குறிக்­கின்­றது. 

மன்னர் ஆட்சிக் காலத்தில் இறைமை என்­பது அர­ச­னுக்கு உரி­ய­தாக்­கப்­பட்­டி­ருந்­தது. இதனை முன்னர் இறை­யாண்மை என குறிப்­பிட்டு வந்­தனர். இறை­யாண்மை என்­பது குறிக்­கப்­பட்ட ஒரு நிலப்­ப­ரப்பில் செயற்­ப­டுத்தத் தக்க வகையில் அதி­காரம் தங்­கி­யி­ருப்­ப­தையே குறிக்­கின்­றது. 

மன்னர் ஆட்சிக் காலத்தில் இந்த அதி­காரம் அர­சனில் தங்­கி­யி­ருந்­தது. எனவே, இறை­யாண்மை மன்­ன­ரிடம் சார்ந்­தி­ருந்­தது. தமி­ழர்கள் அந்த இறை­யாண்­மை­யா­னது, மாட்­சிமை உடை­ய­தாக அதா­வது பல வடி­வங்­க­ளிலும் சிறப்­பா­ன­தாக அமைய வேண்டும் என்­ப­தற்­காக இறை­மாட்சி என குறிப்­பிட்­டி­ருந்­தனர். 

மன்­ன­ரு­டைய ஆட்­சி­யா­னது நியா­யமா­ன­தா­கவும் நீதி நிறைந்­த­தா­கவும் உயர்ந்த ஒழுக்கக் கோட்­பா­டு­களைக் கொண்­ட­தா­கவும் இருக்க வேண்டும் என்­பதை அவர்கள் இதன்மூலம் வலி­யு­றுத்­தி­யி­ருந்­தனர். 

மன்னர் ஆட்சி மறைந்து மக்கள் ஆட்சி மலர்ந்­ததும், இந்த இறை­மாட்சி, அல்­லது இறை­யாண்மை மக்­க­ளிடம் மாறி­யது. மன்­னர்­களைப் போன்று அரச அந்­தஸ்தும், அலங்­கார நிலைப்­பா­டு­களும் மக்­க­ளிடம் இல்­லாத கார­ணத்­தினால் இது இறை­மை­யாக மக்­க­ளிடம் பொதிந்­தது. இதுவே ஜன­நா­யக ஆட்­சி­யா­கவும், மக்கள் ஆட்­சி­யா­கவும் பரி­ண­மித்­தது. ஜன­நா­யக முறைமை இல்­லாத நாடு­களில் சர்­வா­தி­காரம், தனி­ம­னிதன் கோலோச்சும் முறைமை என்பன காணப்­ப­டு­கின்­றன. 

அங்கு இறைமை சர்­வா­தி­கா­ரி­யினால் பறிக்­கப்­பட்டு, பயன்­ப­டுத்­தப்­ப­டு­வதைக் காணலாம். இந்த இறைமை என்­பது எடுக்க முடி­யா­தது. கொடுக்­கவும் முடி­யா­தது. 

இறைமை என்­பது இயற்கை வழி வந்த உரி­மை­யாகும். 

இதனை எடுப்­ப­தற்கோ கொடுப்­ப­தற்கோ எவ­ருக்கும் அதி­காரம் கிடை­யாது. 

மக்­க­ளுக்­கு­ரிய இறை­மையையும் அதி­கா­ரத்­தையும் பலத்­தையும் அர­சி­யல்­வா­திகள் கைப்­பற்றி அவற்றை மக்­க­ளுக்கு எதி­ராகப் பயன்­ப­டுத்­து­கின்ற முறைமை இன்று பல நாடு­களில் காணப்­ப­டு­கின்­றது. 

அத்­த­கைய அதி­கா­ரங்­களே இப்­போது பயன்­ப­டுத்­தப்­ப­டு­கின்­றன. இது இயற்­கைக்கு முர­ணா­னது. இயற்கை தர்­மத்­திற்கும் இயற்கை நீதிக்கும் விரோ­த­மா­னது. அர­சி­ய­ல­மைப்பில் இறைமை மன்னர் ஆட்சி முறைமை மாற்­ற­ம­டைந்து ஆட்சி மக்கள் கைக­ளுக்கு மாறி­ய­துடன், இறை­யாண்மை இறை­மை­யாக மக்­க­ளு­டைய உரி­மை­யாக – சக்­தி­யாக மாற்­ற­ம­டைந்­தது.

இந்த உரிமை – சக்­தியின் அடிப்­ப­டை­யில்தான் ஜன­நா­யக நாடு­களில் இந்த மக்­க­ளு­டைய சக்­தியை அர­சாங்­கங்­களும், அர­சி­யல்­வா­தி­களும் அப­க­ரித்து அர­சியல் ரீதி­யாகத் தில்­லு­முல்­லு­களில் ஈடு­ப­டு­வ­தையே இன்­றைய உலக நாடு­களில் காண முடி­கின்­றது. 

இலங்கை ஒரு நாடு என்ற வகையில் சிங்கள மக்­க­ளுக்கு என்­னென்ன உரி­மைகள் இருக்­கின்­ற­னவோ, அந்த உரி­மைகள் அனைத்தும் இந்த நாட்டில் வாழ்­கின்ற ஏனைய இனங்கள் அனைத்­துக்கும் இருக்­கின்­றன. 

தமி­ழர்­க­ளாக இருக்­கலாம், முஸ்­லிம்­க­ளாக இருக்­கலாம். பறங்­கியர் மற்றும் எந்த இனத்­த­வர்­க­ளா­கவும் இருக்­கலாம். இந்த மண்ணில் பிறந்து, இந்த மண்­ணையே தமது வாழ்­வி­ட­மாகக் கொண்­ட­வர்கள் அனை­வ­ருக்கும் அந்த உரி­மைகள் இருக்­கின்­றன. 

இது ஒட்­டு­மொத்­த­மாக இந்த நாட்டைச் சேர்ந்த அனைத்து மக்­க­ளி­னதும் இறை­மை­யாகும். உரி­மையும் அதி­கா­ரமும் மக்­க­ளி­டத்­தி­லேயே தங்­கி­யி­ருக்க வேண்டும். 

இதைத்தான் இறைமை மக்­க­ளு­டை­யது என கூறு­கின்­றார்கள். இந்த இறைமை ஒரு­நாட்டின் அர­சி­ய­ல­மைப்பில் உறு­திப்­ப­டுத்­தப்­பட வேண்டும். பக்­க­ச்சார்­பற்ற முறையில் இன, மதம் சார்­பில்­லாத வகையில் இறைமை நாட்டு மக்கள் அனை­வ­ருக்கும் உரி­யது என்­பது அழுத்தம் திருத்­த­மாக வலி­யு­றுத்­தப்­பட்­டி­ருக்க வேண்டும். 

அர­சியல் ரீதி­யான உரிமைப் பிரச்­சி­னைகள் இல்­லாத நாடு­களில், அர­சி­ய­ல­மைப்பின் உறு­திப்­பாடு குறித்து கவ­லை­ய­டைய வேண்­டி­ய­தில்லை. 

ஆனால் இனப்­பி­ரச்­சினை புரை­யோ­டி­யுள்ள இலங்­கையில் இறைமை மக்­க­ளு­டை­யது என்­பது ஆழ­மாக ஆணித்­த­ர­மாக அர­சி­ய­ல­மைப்பில் உறு­திப்­ப­டுத்­தப்­பட்­டி­ருக்க வேண்­டி­யது அவ­சி­ய­மாகும். 

அரசோ பேரி­னமோ இறை­மையை அப­க­ரிக்கக் கூடாது ஓர் இனத்தைச் சார்ந்த மொழிக்கு அல்­லது மதத்­திற்கு ஓர் அர­சி­ய­ல­மைப்பில் உயர்ந்த அந்­தஸ்­தையோ, முதன்மை நிலை­யையோ வழங்­கு­வது என்­பது, அந்த நாட்டு மக்­க­ளு­டைய இறை­மைக்கு மதிப்­ப­ளிக்­கப்­ப­டு­வ­தாகக் கொள்ள முடி­யாது. 

ஏனெனில் ஏற்­க­னவே பெரும்­பான்மை இன மக்­களால் சிறு­பான்மை தேசிய இன மக்கள் இன ரீதி­யா­கவும் மத ரீதி­யா­கவும் அடக்­கு­மு­றைக்கும் ஒடுக்­கு­மு­றைக்கும் உள்­ளாக்­கப்­பட்­டி­ருக்­கின்­றார்கள். 

மேலா­திக்கப் போக்­கி­லான இத்­த­கைய அடக்­கு­முறை மற்றும் ஒடுக்­கு­முறை நட­வ­டிக்­கைகள் கார­ண­மா­கவே இந்த நாட்டில் இனப்­பி­ரச்­சினை உரு­வா­கி­யது. 

இறைமை மக்­க­ளு­டை­யது என்ற இயற்கை சார்ந்த அர­சியல் கோட்­பாட்டைப் புறந்­தள்ளி, இறைமை பேரி­ன­வாத அர­சுக்கும், பேரின மக்­க­ளுக்­குமே உரி­யது என்ற போக்கில் மாறி மாறி ஆட்­சிக்கு வந்த அர­சாங்­கங்கள் கோலோச்­சி­யதன் விளை­வா­கவே இந்த நாடு நீண்­ட­கால யுத்தம் ஒன்­றினால் சின்­னா­பின்­ன­மா­கி­யது. 

அது மட்­டு­மல்­லாமல், இந்த ஆட்சிப் போக்கு இனங்­க­ளி­டையே கசப்­பையும், பகைமை உணர்­வையும், இன­வி­ரோதப் போக்­கையும் மேலோங்கச் செய்­துள்­ளது. 

கொடி­ய­தொரு யுத்­தத்தின் பின்னர், இனங்­க­ளுக்­கி­டையில் ஐக்­கி­யத்­தையும் நல்­லி­ணக்­கத்­தையும், ஏற்­ப­டுத்தி நாட்டில் உண்­மை­யா­கவே நல்­லாட்சி முறையை உரு­வாக்க வேண்­டு­மானால் இன, ­மத பேத­மற்ற முறையில் மக்­க­ளு­டைய இறைமை மதிக்­கப்­பட வேண்டும். 

மக்­க­ளு­டைய இறை­மையைப் போற்றிப் பேணும் வகையில் அர­சி­ய­ல­மைப்பு உரு­வாக்­கப்­பட்டு, ஆட்சி நடத்­தப்­பட வேண்டும். இல்­லையேல் நாடு மேலும் மேலும் சீர­ழி­வ­தற்கும் மோச­மான அழி­வு­களை நோக்கி நகர்ந்து செல்­வ­தற்கும் வழி­வ­குத்­த­தா­கவே முடியும். 

இறை­மையும் மனித உரி­மையும் நிலை­மா­று­கால நீதியை நிலை­நாட்­டு­வதில் அரசு முக்­கி­ய­மான பொறுப்­புக்­களை நிறை­வேற்­று­வ­தாக ஒப்­புக்­கொண்­டி­ருக்­கின்­றது. 

உரிமை மீறல்கள், சர்­வ­தேச மனி­தா­பி­மான சட்ட மீறல்கள் என்­ப­வற்­றுக்குப் பொறுப்புக்கூறுதல், உண்­மையைக் கண்­ட­றிதல், பாதிப்­பு­க­ளுக்கு நீதியும், இழப்­பீ­டாக நிவா­ர­ணமும் வழங்­குதல், பாதிப்­புகள் மீள் நிக­ழா­மையை உறுதி செய்தல் ஆகிய நான்கு விட­யங்­களை உள்­ள­டக்கி பொறுப்பு கூறும் செயற்­பாட்டை நிறை­வேற்­று­வ­தான ஐ.நா. மனித உரிமைப் பேர­வையில் நிறை­வேற்­றப்­பட்ட தீர்­மா­னத்­திற்கு இணை அனு­ச­ரணை வழங்கி நல்­லாட்சி அர­சாங்கம் ஒப்­புதல் அளித்­தி­ருக்­கின்­றது. 

அத்­துடன் யுத்தம் ஒன்று மூள்­வ­தற்கு வழி­வ­குத்த இனப்­பி­ரச்­சி­னைக்கு ஓர் அர­சியல் வழி­மு­றையில் நிரந்­த­ர­மாகத் தீர்வு காண்­ப­தற்கும் ஒப்­புக்­கொண்­டி­ருக்­கின்­றது. 

அதனை நிறை­வேற்­று­வ­தற்­காக புதிய அர­சி­ய­லமைப்பை உரு­வாக்­கு­வ­தற்­கான செயற்­பா­டு­க­ளையும் அர­சாங்கம் முன்­னெ­டுத்­தி­ருக்­கின்­றது. மனித உரிமை மீறல்கள் மற்றும் மனி­தா­பி­மான சட்ட மீறல்­க­ளுக்குப் பொறுப்புக் கூறு­தலின் மூலம் மனித உரி­மையை நிலை­நாட்­டு­வ­தற்கும், 

வருங்­கா­லத்தில் மனித உரி­மையை நாட்டில் மேம்­ப­டுத்­துவ­தற்கு நட­வ­டிக்கை எடுப்­ப­தற்கும், இனப்­பி­ரச்­சி­னைக்கு அர­சியல் தீர்வு காண்­ப­தற்கும், அர­சாங்கம் ஐ.நா. மனித உரிமைப் பேர­வையின் ஊடாக சர்­வ­தே­சத்தின் ஆணையை ஏற்­றுக்­கொண்­டி­ருக்­கின்­றது. 

இருப்­பினும், யுத்த மோதல்­க­ளின்­போது இடம்­பெற்ற போர்க்­குற்­றங்கள் மற்றும் உரிமை மீறல்கள் குறித்து, உண்­மையைக் கண்­ட­றிதல், நீதி வழங்­குதல், நிவா­ர­ண­ம­ளித்தல், மீண்டும் நிக­ழா­மையை உறுதி செய்தல் என்­ப­வற்றின் ஊடாக ஏற்­க­னவே இழைக்­கப்­பட்ட குற்­றங்­க­ளுக்குப் பொறுப்­பா­ன­வர்கள் தண்­டனை பெறு­வதில் இருந்து தப்­பி­யி­ருக்­கின்­ற­மைக்கு முடிவு காணு­வதைச் செய்ய முடி­யாது என்று அர­சாங்கம் அறு­தி­யிட்டு கூறி வரு­கின்­றது. 

இது சர்­வ­தே­சத்­திற்கு அர­சாங்கம் அளித்­துள்ள உறு­தி­மொ­ழி­களை அப்­பட்­ட­மாக மீறு­கின்ற ஒரு செயற்­பா­டாகும். 

இந்த நிலையில் நிலை­மா­று­கால நீதியை நிலை­நாட்­டு­கின்ற அர­சாங்­கத்தின் பொறுப்பில் மனித உரிமை சார்ந்த விட­யங்­களும் தமிழ் மக்­க­ளு­டைய இறை­மையும் இரண்­டறக் கலந்­தி­ருக்­கின்­றன. 

தமிழ்த்­தே­சிய கூட்­ட­மைப்பின் தலைவர் இரா.சம்­பந்தன் தமிழ் மக்­க­ளு­டைய சக்­தி­வாய்ந்த அர­சியல் தலை­வ­ரா­கவும், அதே­வேளை இந்த நாட்டின் மூன்­றா­வது தலைமைச் சக்­தி­யா­கிய எதிர்க்கட்சித் தலை­வ­ரா­கவும் இருக்­கின்ற போதிலும், அர­சாங்­கத்தின் பொறுப்புக்கூறும் விட­யத்தில், அர­சாங்­கத்­திற்கு நேர­டி­யாக அழுத்­தங்­களைக் கொடுப்­பதைக் காண முடி­ய­வில்லை. 

இடைக்­கால அறிக்­கையின் எதிரும் புதி­ரு­மான நிலை அதே­வேளை, இனப்­பி­ரச்­சி­னைக்கு, புதிய அர­சி­ய­ல­மைப்பின் ஊடாக ஓர் அர­சியல் தீர்வு காணப்­படும் என்ற ஆழ­மான நம்­பிக்­கையை அவர் கொண்­டி­ருக்­கின்றார். 

நல்­லாட்சி அர­சாங்கம் ஆட்சிப் பொறுப்பை ஏற்­றதன் பின்னர் 2016 ஆம் ஆண்டின் இறு­திக்குள் ஓர் அர­சியல் தீர்வு எட்­டப்­பட்­டு­விடும் என்று அவர் தமிழ் மக்­க­ளுக்கு நம்­பிக்­கை­யூட்டி வந்தார். 

அர­சியல் தீர்வு காண்­­பதற்­கான வழி­மு­றையில் பய­ணிக்­கின்ற அர­சாங்­கத்­திற்கு, நாட்டின் தென்­ப­கு­தியில் உள்ள பேரி­ன­வா­தி­க­ளான சிங்­கள அர­சியல் கடும்­போக்­கா­ளர்­க­ளிடம் இருந்து இடை­யூ­றுகள் ஏற்­ப­டாத வகையில் அமை­தி­யா­கவும் பொறு­மை­யா­கவும் இருக்க வேண்டும் என்று அவர் வலி­யு­றுத்தி கூட்­ட­மைப்பின் பங்­காளிக் கட்­சி­க­ளையும் தமிழ் மக்­க­ளையும் அவர் வழி­ந­டத்தி வந்­ததை மறக்கவும் முடி­யாது. 

மறுக்­கவும் முடி­யாது. ஆயினும் புதிய அர­சி­ய­ல­மைப்பு உரு­வாக்­கத்தில் தமிழ் மக்­க­ளு­டைய பிரச்­சி­னை­க­ளுக்குத் தீர்வு காண வேண்­டிய விட­யங்கள் குறித்து, தமிழ் மக்­க­ளு­டைய எதிர்­பார்ப்­புக்கு ஏற்ற வகையில் அவர் அர­சாங்­கத்­திற்கு உரிய முறையில் அழுத்­தங்­களைக் கொடுத்து வந்­த­தா­கவும் கூற முடி­யா­துள்­ளது. 

இனப்­பி­ரச்­சி­னைக்கு ஓர் அர­சியல் தீர்வு காண்­ப­தற்­கான தமிழ்த்­தே­சிய கூட்­ட­மைப்பின் அ­ரசியல் நிலைப்­பா­டு­க­ளான பகி­ரப்­பட்ட இறைமை, வட­கி­ழக்கு இணைந்த தமிழர் தாயகம், சுய­நிர்­ணய உரி­மை­யுடன் கூடிய அதி­யுச்ச அதி­காரப் பர­வ­லாக்கம் போன்ற விட­யங்­களை புதிய அர­சி­ய­ல­மைப்பில் உள்­ள­டக்­கு­வ­தற்கு அவர் மேற்­கொண்ட நட­வ­டிக்­கைகள் குறித்தும் பல்­வேறு சந்­தே­கங்­களும் வினாக்­களும் எழுந்­தி­ருக்­கின்­றன. 

புதிய அர­சி­ய­ல­மைப்பை உரு­வாக்­கு­வ­தற்­கான இடைக்­கால அறிக்­கையில், புதிய அர­சி­ய­ல­மைப்பின் அடிப்­படை விட­யங்கள் குறித்த கோட்­பா­டுகள் வெளி­யி­டப்­பட்­டி­ருக்­கின்­றன. 

அந்தக் கோட்­பா­டு­க­ளுக்கும், இனப்­பி­ரச்­சினைத் தீர்­வுக்­கான தமிழ்த்­தே­சிய கூட்­ட­மைப்பின் அர­சியல் கோட்­பா­டு­க­ளுக்கும் இடையே எதிரும் புதி­ரு­மான நிலை­மையே காணப்­ப­டு­கின்­றது. 

தமிழ் மக்­களின் இறைமை வலி­யு­றுத்­தப்­பட்­டதா? 

வடக்கும் கிழக்கும் இணைக்­கப்­ப­ட­மாட்­டாது. சமஷ்டி ஆட்சி முறை கிடை­யாது. ஒற்­றை­யாட்­சியே தொடர்ந்து பேணப்­படும். பௌத்­தத்­திற்கே முன்­னு­ரிமை ஏனைய மதங்­க­ளுக்­கு­ரிய சுதந்­திரம் வழங்­கப்­படும் என்­பதே புதிய அர­சி­ய­ல­மைப்­புக்­கு­ரிய அடிப்­படை கோட்­பா­டு­க­ளாகும். 

ஒற்­றை­யாட்சி என்­ப­தற்குப் பதி­லாக ஏகிய ராஜ்­ஜிய என்ற பதத்தைப் பயன்­ப­டுத்தி ஒற்­றை­யாட்­சியை ஒரு போதும் எந்த வகை­யிலும் பிரிக்க முடி­யாத ஆட்சி என்­பதை அரச தரப்­பினர் உறு­திப்­ப­டுத்­தி­யி­ருக்­கின்­றனர். 

ஏகிய ராஜ்­ஜிய என்ற சிங்­கள சொல்­லுக்கு ஒரு­மித்த நாடு என்ற தமிழ்ப்­ப­தத்தைத் தமிழ்த்­தே­சிய கூட்­ட­மைப்பு ஏற்­றுக்­கொண்­டி­ருக்­கின்­றது. 

இந்த இரண்டு சொற்­க­ளுமே நிலப்­ப­ரப்பு ரீதி­யா­கவோ அல்­லது சமஷ்டி என்ற நிர்­வாக ரீதி­யாக அலகு ரீதி­யா­கவோ நாட்டைப் பிரிக்க முடி­யாது என்­பதை ஆழ­மாக வலி­யு­றுத்­து­கின்­றன. 

சமஷ்டி ஆட்சி முறை­யென்றால் தமிழில் ஒன்­றி­ணைந்த நாடு என்ற பதம் பயன்­ப­டுத்­தப்­பட்­டி­ருக்க வேண்டும். சிங்­க­ளத்தில் எக்சத் ராஜ்­ஜிய என்ற சொல்லைப் பயன்­ப­டுத்­தி­யி­ருக்க வேண்டும். 

நில­வா­ரி­யாக இந்த நாட்டைத் துண்­டா­டு­வதைத் தடுப்­ப­தற்கு இது ஏற்­பு­டை­யது. நில­வா­ரி­யாக நாட்டைத் துண்­டாடி, தமி­ழர்­க­ளுக்­கான தனி­நாடு ஒன்றை, தமி­ழர்கள் உரு­வாக்­கி­வி­டு­வார்கள் என்ற அர­சியல் ரீதி­யான அச்­சத்தைப் போக்­கு­வ­தற்கு ஒன்­றி­ணைந்த நாடு என்ற அடிப்­ப­டை­யி­லான ஆட்சி முறைமை உகந்­த­தாகும். 

ஆனால் பகிர்ந்­த­ளிக்­க­ப்­பட்ட இறைமை, வடக்கு, கிழக்கு இணைந்த தாயகம், சுய­நிர்­ணய உரி­மை­யுடன் கூடிய அதி­யுச்ச அதி­காரம் பகிர்ந்­த­ளிக்­கப்­பட வேண்டும் என வலி­யு­றுத்­தி­யுள்ள தமிழ்த்­தே­சிய கூட்­ட­மைப்பின் நிலைப்­பாட்­டுக்­க­மைய, 

புதிய அர­சி­ய­ல­மைப்பு உரு­வாக்­கத்­திற்­கான வழி­ந­டத்தல் குழுவில் அங்கம் வகிக்­கின்ற சக்தி வாய்ந்த தலை­வ­ரா­கிய இரா.சம்­பந்தன் தமிழ் மக்­க­ளு­டைய இறை­மையை வலி­யு­றுத்­தி­னாரா என்­பது தெரி­ய­வில்லை. 

அவ்­வாறு அவர் வலி­யு­றுத்­தி­யி­ருப்­பாராயின் ஏக்­கிய ராஜ்­ஜிய என்­ப­தற்கும் பௌத்­தத்­திற்கே முன்­னு­ரிமை என்­ப­தற்கும் இணக்­கப்­பாடு எட்­டப்­பட்­டி­ருக்க மாட்­டாது. 

ஒற்­றை­யாட்­சியின் இறைமை மீறல் ஒற்­றை­யாட்சி என்­பது பேரின மக்­க­ளா­கிய சிங்­கள மக்­களே மேலோங்­கிய அதி­கா­ரத்தைக் கொண்­டி­ருப்­பார்கள் என்­பதை வலி­யு­றுத்­து­வ­தாகும். 

ஒற்­றை­யாட்­சியின் கீழ் இப்­போ­துள்ள மாகாண ஆட்­சி­மு­றை­யா­னது, அதன் உரு­வாக்­கத்­தின்­போது அதற்கு வழங்­கப்­பட்ட அதி­கா­ரங்­களைக் கொண்­ட­தாக இப்­போது நடை­மு­றைப்­ப­டுத்­தப்­ப­ட­வில்லை. 

அதி­யுச்ச அதி­காரப் பர­வ­லாக்கல் வேண்டும் என்ற அர­சியல் நிலைப்­பாட்டைக் கொண்­டுள்ள தமிழ்த்­தே­சிய கூட்­ட­மைப்பின் தலைவர், புதிய அர­சி­ய­ல­மைப்பில் அந்த ‘அதி­யுச்ச அதி­காரப் பர­வ­லாக்கல்’ என்­ப­தற்­கான வரை­வி­லக்­கணம் எப்­படி அமைய வேண்டும் என்­பதை எந்த வகையில் உள்­ள­டங்கச் செய்­தி­ருக்கின்றார் என்­பது இன்னும் வெளிப்­ப­டுத்­தப்­ப­ட­வில்லை. 

அதி­யுச்ச அதி­காரப் பர­வ­லாக்கல் எப்­படி இருக்கும் என்­பது இன்னும் தீர்­மா­னிக்­கப்­ப­டா­விட்டால் – அதி­கு­றைந்த அதி­கா­ரப்­ப­ர­வ­லாக்­க­லா­வது என்ன என்­பது குறித்து எதுவும் விவா­திக்­கப்­பட்டு இணக்­கப்­பாடு எட்­டப்­பட்­டதா என்­ப­தற்­கான அடை­யா­ளங்­களை, புதிய அர­சி­ய­ல­மைப்­புக்­கான அடிப்­படை விட­யங்­களைக் குறித்­துக்­காட்­டி­யுள்ள இடைக்­கால அறிக்­கையில் காண முடி­ய­வில்லை. 

எனவே, புதிய அர­சி­ய­ல­மைப்பில் பெரும்­பான்­மை­யி­ன­ரா­கிய சிங்­கள மக்­க­ளுக்கே அதி­கா­ரங்­களைத் தாரை வார்த்துக் கொடுத்து, தமிழ் மக்­களின் இறை­மையை மீறு­வது என்­பது அர­சியல் ரீதி­யாக ஏற்­றுக்­கொள்ளத் தக்­க­தல்ல. 

அர­சியல் உரி­மைக்­காக அறு­பது வரு­டங்­க­ளாகப் போரா­டிய மக்கள் தமது இறை­மையை இழப்­பதன் மூலம் புதிய அர­சி­ய­ல­மைப்பில் எந்­த­வி­த­மான அனு­கூ­லங்­க­ளையும் பெற முடி­யாத நிலை­மைக்கே தள்­ளப்­ப­டு­வார்கள் என்­பதில் சந்­தே­க­மில்லை. 

ஒற்­றை­யாட்­சியே புதிய அர­சி­ய­ல­மைப்­பிலும் தொடர்ந்­தி­ருக்கும் என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அழுத்தி உரைக்கின்றார். 

பெயர்களிலும் சொற்களிலும் தொங்கிக் கொண்டிருப்பதில் பலனில்லை என தெரிவித்த கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் ஒற்றையாட்சியுமல்ல, சமஷ்டி ஆட்சியுமல்ல, ஆனால் அதியுச்ச அதிகாரப் பரவலாக்கலுக்கு வழி செய்யப்படுகின்றது என்று கூறுகின்றார். 

இறைமையின் வழியில் உரிமைகள் நிலைநாட்டப்பட வேண்டும் ஒரேயொரு அரசியலமைப்பே உருவாக்கப்படவுள்ளது. அது ஒற்றையாட்சி முறையில் அமையும் என்பது அரசாங்கத் தரப்பினருடைய கருத்து. இல்லையில்லை, பெயர்களில் பிரயோசனமில்லை. 

சமஷ்டி ஆட்சி முறைக்கு வழி செய்யப்பட்டுள்ளது என்பது தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் கருத்தாகும். ஒற்றையாட்சியைக் குறிக்கின்ற யுனிட்டரி என்ற சொல்லே, ஏகிய ராஜ்ஜிய என்ற சிங்கள சொல்லின் மூலம் நீக்கப்படு கின்றது என்கிறார் சம்பந்தன். 

ஆனால் யுனிட்டரி என்ற ஆங்கிலச் சொல்லையே ஏகிய ராஜ்ஜிய என்ற சிங்கள சொல்லுக்குரிய சரியான சொல்லாகக் கொண்டு வருவதற்கான பேச்சுவார்த்தைகள் நடைபெறுகின்றன என்கிறார் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க. 

இடைக்கால அறிக்கையிலேயே இத்தகைய நேர் முரண்நிலை என்றால், புதிய அரசியலமைப்பு எப்படி இருக்கும் என்பது குறித்து விளக்கிக் கூற வேண்டிய அவசியமில்லை. 

எது எப்படியாயினும், இடைக்கால அறிக்கை தமிழ் மக்களை மட்டுமல்லாமல் சிங்கள மக்களையும் குழப்பத்தில் ஆழ்த்தத்தக்க வகையிலேயே வெளியிட ப்பட்டிருக்கின்றது. 

புதிய அரசியலமைப்பை உருவாக்குவதற்கான அரசியல் பயணம் என்பது நீண்டது. பல படிமுறைகளைக் கடக்க வேண்டியிருக்கின்றது. 

எனவே, இந்த பயணத்திலும், படிமுறைகளிலும் தமிழ் மக்களின் இறை மையை உறுதி செய்து அதன் அடிப்படையில் அவர்களின் உரிமைகள் நிலை நாட்டப்படுவதை உறுதி செய்ய வேண்டியது அரசியலமைப்புக்கான வழிநட த்தல் குழுவில் தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் சார்பில் அங்கம் பெற்றுள்ள அர சியல் ரீதியாக சக்தி படைத்துள்ள கூட்டமைப்பின் தலைவரும், எதிர்க்க ட்சித் தலைவருமாகிய இரா.சம்பந்தனின் தட்டிக்கழிக்க முடியாத பொறுப்பாகும்.  அவர் அதனை சரியான முறையில் நிறைவேற்ற வேண்டும்.