எமது உயிரைவிடவும் உரிமையே மேலானது
ஐ.நா.விசேட பிரதிநிதி பப்லுவிடம் கேப்பாப்புலவு மக்கள் தெரிவிப்பு.
எமது உயிரைவிட நாம் எமது சொந்த நிலத்தில் வாழ வேண்டும் என்ற உரிமையே எமக்கு மேலானது என நேற்று கேப்பாப்புலவுக்கு விஜயம் செய்த ஐக்கிய நாடுகள் சபையின் விசேட பிரதிநிதி பப்லு டி கிரிப்பிடம் கேப்பாப்புலவு மக்கள் தெரிவித்துள்ளனர்.
ஐக்கிய நாடுகள் சபையின் உண்மை,நீதி, நஷ்ட ஈடு மற்றும் மீள் நிகழாமையை ஊக்குவிப்பதற் கான விசேட பிரதிநிதி பப்லு டி கிரிப் நேற்று 226 ஆவது நாளாக கேப்பாப்புலவில் அமைந்துள்ள இராணுவத்தலைமையக வாயிலில் தமது சொந்த நிலங்களை கேட்டு போராடிவரும் மக்களை சந்தித்து கலந்துரையாடும் போதே மக்கள் மேற்கண்டவாறு தெரிவித்தனர்.
ஐ.நா. விசேட பிரதிநிதியிடம் மக்கள் கருத்து தெரிவிக்கையில் நாம் இன்றுடன் (நேற்று) 219 ஆவது நாளாக கொட்டும் மழைக்கும் வெயிலுக்கும் மத்தியில் எமது சொந்த நிலங்களை கேட்டு போராடுகின்றோம்.
எமது நிலங்களை விடுவிப்பதாக அரசாங்கம் பலமுறை பல வாக்குறுதிகளை தந்து எம்மை தொடர்ந்தும் ஏமாற்றி வருகின்றது.
நாம் எவ்வாறு எத்தனை நாட்கள் இந்த வீதியில் இருந்து போராடுவது?
யுத்தம் முடிந்து 9 வருடங்களாக நாம் அகதி முகாம் வாழ்க்கை வாழ்கின்றோம்.
கேப்பாபுலவு என்னும் பெயரில் மாதிரி கிராமம் ஒன்றில் அகதிகள்போல் வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கின்றோம் .
தொடர்ந்தும் நாம் இவ்வாறு எத்தனை காலம் வாழ்வது?
எமது தலைமுறை ஆண்டாண்டு காலமாக வாழ்ந்த எமது சொந்த நிலம் எம க்கு வேண்டும் .எமது இனிவரும் சந்ததி அதில் நிம்மதியாக வாழவேண்டும். அகதிமுகாம் வாழ்க்கை எமக்கு வேண்டாம்.
எமது சொந்த நிலம்தான் வேண்டும். நாம் தொடர்ந்து இங்கே போராடிக்கொண்டே இருப்போம்.
எமது உயிரைவிட எமக்கு எமது உரிமைகளே மேலாவைவையாகும். எமது பூர்வீகமான கேப்பாபுலவு மண் எமக்கு வேண்டும். எமது கஸ்டங்களை இன்று நேரில் நீங்கள் வந்து பார்வையிடுகின்றீர்கள்.
உங்களுக்கு நாம் படும் வேதனைகள்.புரியும் என்று நினைக்கின்றோம் என்றனர்.
இதன்போது சட்ட ரீதியாக உங்கள் நிலங்களை பெறுவதற்கு நீங்கள் ஏதும் முயற்சிகளை எடுத்தீர்களா?
என ஐநா பிரதிநிதி கேள்வியெழுப்பியபோது மக்கள் பதிலளிக்கையில்
ஆம். நாங்கள் ஏற்கனவே 2012 ஆம் ஆண்டு ஐந்துபேர் இணைந்து முல்லைத்தீவு நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்தோம்.
அந்த காலப்பகுதியில் எமது நிலங்களுக்கு பதிலாக வேறு நிலங்களை தருவதாக அங்கே இராணுவ தரப்பில் தெரிவித்தார்கள். ஆனால் நாம் அதற்க்கு சம்மதிக்கவில்லை.
எமது சொந்த நிலம் வேண்டும் என்றே அன்றிலிருந்து இன்றுவரை பல்வேறு வழிகளில் போராடி வருகின்றோம் என்றனர்.
இதன்போது காணி விடுவிப்பு தொடர்பில் அரசாங்க தரப்புடன் கலந்துரையாடினீர்களா என ஐநா பிரதிநிதிகள் கேள்வியெழுப்பினர்.
அதற்கு பதிலளித்த பொது மக்கள் காணி விடுவிப்பு தொடர்பில் நாம் மீள்குடியேற்ற அமைச்சுக்கு சென்று கலந்துரையாடலை மேற்கொண்டோம். எம் சார்பில் மக்கள் பிரதிநிதிகளும் இருந்தனர்.
பலமுறை அரசுடன் கலந்துரையாடினோம். இருந்தும் இதுவரை எமக்கு எமது நிலங்கள் கையளிக்கப்படவில்லை படவில்லை என கேப்பாபுலவு மக்கள் தெரிவித்தனர்.
இதேவேளை ஐநா விசேட பிரதிநிதிகள் அடங்கிய குழுவினர் நேற்று முல்லைத்தீவின் பல பகுதிகளுக்கும் சென்று அங்கு போரால் பாதிக்கப்பட்ட இடங்களை பார்வையிட்டதுடன் மக்களை சந்தித்திருந்தமையும் குறிப்பி டத்தக்கது.