உண்ணாவிரதமிருக்கும் கைதிகளின் வழக்குகளை வவுனியாவுக்கு மாற்றுவதற்கு - மறுப்பு
ஏற்கமுடியாத நிலைப்பாடு என்கிறார் சுமந்திரன் எம்.பி.
(ஆர்.ராம்)
தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மூன்று அரசியல் கைதிகளின் வழக்குகளை மீளவும் வவுனியாவுக்கு மாற்றுவதற்கு சட்டமா அதிபர் மறுப்புத் தெரிவித்துள்ளார்.
அநுராதபுரம் சிறைச்சாலையில் 8 ஆண்டுகளாகத்
தடுத்துவைக்கப்பட்டுள்ள செங்கன் எனப்படும் இராஜதுரை திருவருள், மதியழகன் சுலக் ஷன்,
கணேசன் தர்ஷன் ஆகிய மூவருக்கு எதிராக கடந்த 2013ஆம் ஆண்டு வவுனியா
மேல்நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு மீதான விசாரணைகள் கடந்த நான்கு ஆண்டுகளாக நடைபெற்று வந்தன.
அவ்வாறு வவுனியா மேல் நீதிமன்றதில் இடம்பெற்று வந்த வழக்கினை சட்டமா அதிபர் திணைக்களம் அநுராதபுரம் மேல் நீதிமன்றுக்கு இடமாற்றியுள்ளது.
இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து தொடர்ச்சியான உண்ணா விரதப்போராட்டத்தில் அம்மூன்று கைதிகளும் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில் குறித்த விடயம் சம்பந்தமாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப்பேச்சாளரும் யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ. சுமந்திரன் உண்ணாவிரதமிருக்கும் குறித்த கைதிகளின் கோரிக்கை தொட ர்பில் சட்டமா அதிபருடன் பிரத்தியேகமான பேச்சுவார்த்தையொன்றை நடத்தியுள்ளார்.
இதன்போதே சட்டமா அதிபர் தனது மறுப்பினை தெரிவித்துள்ளார்.
இவ்விடயம் குறித்து சட்டமா அதிபர் மேலும் கூறியுள்ளதாவது
வவுனியா மேல் நீதிமன்றத்தில் இவ்வழக்கு விசாரணை இதுவரை காலமும் நடைபெற்றிருந்தாலும் தற்போது அங்கு சென்று சாட்சியமளிப்பதற்கு சாட்சியாளர்கள் விரும்பவில்லை.
அவர்கள் அநுராதபுர மேல் நீதிமன்றில் சாட்சியமளிப்பதற்கு தயாராக இருக்கின்றார்கள். குறிப்பாக வவுனியாவிற்கு செல்வதற்கு தமது பாதுகாப்பு காரணங்களை காட்டியே சாட்சியாளர்கள் நிராகரித்துள்ளனர்.
ஆகவே அவர்களின் கோரிக்கையில் காணப்படும் நியாயத்தின் அடிப்படை யில் தான் அவ்வழக்கு அநுராதபுரம் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டுள்ளது. அதனை மீண்டும் வவுனியாவுக்கு மாற்ற முடியாது என்று குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது சுமந்திரன் எம்.பி
தாங்கள் (சட்டமா அதிபர்) கூறும் காரணத்தினை ஏற்றுக்கொள்ளமுடியாது.
ஆவர்கள் எட்டு வருடங்களுக்கு மேலாக சிறைவசம் அனுபத்து வரும் நிலையில் கடந்த நான்கு வருடங்களாகவே வழக்கு தாக்கல் செய்யப்பட்டு விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
சுட்சியாளர்களின் பாதுகாப்புக்கு பொறுப்புக் கூறவேண்டியது அரசாங்கமேயாகும். ஆகவே சாட்சியாளர்களின் பாதுகாப்பினை காரணம் காட்டி வழக்கினை மாற்றிமையை ஏற்றுக்கொள்ள முடியாது.
மேலும் சிறைவாசம் அனுபவித்துக்கொண்டிருப்பவர்களின் சட்டத்தரணிகள் அநுராதபுரத்திற்கு வருகை தருவதிலும் சிரமங்கள் காணப்படுகின்றன. இவற்றோடு சிறைவசம் அனுபவித்துக் கொண்டிருப்பவர்களுக்கு மொழி சார்ந்த பிரச்சினையும் காணப்படுகின்றது.
எனவே கட்டாயமாக வவுனியா மேல் நீதிமன்றத்திற்கே அக்கைதிகளின் வழ க்குகள் மீளவும் மாற்றப்படவேண்டியது அவசியமாகின்றது என்று வலியு றுத்தியுள்ளார்.
எவ்வாறாயினும் சட்டமா அதிபர் இவ்விடயத்தில் தீர்க்கமான பதிலொன்றை வழங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.