தேரர்கள் பயப்பட வேண்டாம்- ஜனாதிபதி
தேரர்கள் பயப்படும்படியான எதுவித மாற்றமும் புதிய அரசியலமைப்பில் உள்வாங்கப்படவில்லையெனவும் அரசாங்கம் இந்த விடயத்தில் கவனமாக செயற்படுவதாகவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உறுதிபடத் தெரிவித்துள்ளார்.
சமய நிகழ்வொன்றில் கலந்துகொண்டு பிக்குகள் மத்தியில் கருத்துத் தெரிவிக்கும் போதே ஜனாதிபதி இவ்வாறு குறிப்பிட்டார்.
அவையில் முன்வைக்கப்பட்டிருக்கும் சட்டமூலத்தில் பௌத்த சமயத்துக்கு முக்கியத்துவம் அளிக்கப்படாது என்றும், நாட்டைப் பிளவுபடுத்தம் வகையிலான விதந்துரைகள் இடம்பெற்றிருப்பதாகவும் சில பௌத்த தேரர்கள் இடத்துக்கிடம் கூறிவருகின்றனர். இதில் எந்தவிதமான உண்மையும் இல்லை.
72 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட பௌத்த சமயத்துக்கான முன்னுரிமைத் தன்மையில் எவ்வித மாற்றமும் கொண்டுவரப்படாது. புதிய சட்டமூலத்தில் பௌத்த சமயத்தைத் தாழ்வுபடுத்தும் வகையில் எந்தவித அம்சங்களும் இடம்பெறவில்லை என்பதை, சட்டமூலம் இயற்றும் குழுவினரிடம் ஒரு முறைக்கு இரண்டு முறைகள் தெளிவாகக் கேட்டுத் தெரிந்துகொண்டுவிட்டேன்.
ஒரே இலங்கை என்ற பண்பிலும் எவ்விதமான மாற்றமும் கொண்டுவரப்படாது. எக்காரணம் கொண்டும் இலங்கையைத் துண்டாடும் எண்ணம் அரசிடம் இல்லை. புதிய அரசியல் சட்டமூலத்தில் சமஷ்டி என்ற வார்த்தைக்கே இடமில்லை என்றும் ஜனாதிபதி இங்கு கூறியுள்ளார்.