நிறைவடைந்தது ஜெனிவா கூட்டத் தொடர்
இலங்கையின் மனித உரிமை நிலைமை தொடர்பான பல்வேறு சர்ச்சையான அறிவிப்புக்கள் சலசலப்பான கூட்டங்களுடன் ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் 36 ஆவது கூட்டத் தொடர் நேற்றுடன் நிறைவடைந்தது.
இலங்கை தொடர்பான விவாதங்கள் எதுவும் உத்தியோகபூர்வமான முறையில் இம்முறை கூட்டத் தொடர் நிகழ்ச்சி நிரலில் இடம்பெறாவிடினும் உத்தியோகபூர்வமற்ற முறை யில் பல்வேறு அறிவிப்புகள் இடம்பெற்றதுடன் இலங்கை தொடர்பான 15 க்கும் மேற்பட்ட உபகுழுக் கூட்டங்களும் நடைபெற்றன.
முதல்நாள் அமர்வில் உரையாற்றிய ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் செய்ட் அல் ஹுசேன் இலங்கை தொடர்பில் அதிருப்தி வெ ளியிட்டிருந்தார்.
இலங்கை அரசாங்கம் காணாமல்போனோர் தொடர்பான அலுவலகத்தை உடனடியாக நிறுவவேண்டும் என்று அரசாங்கத்தை வலியுறுத்துகின்றேன். அதுமட்டுமன்றி மக்களுக்கிடையில் நம்பிக்கையை கட்டியெழுப்பும் வேலைத்திட்டங்களையும் அரசாங்கம் உடனடியாக முன்னெடுக்கவேண்டும் என்று ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் செய்ட் அல் ஹுசேன் தெரிவித்திருந்தார்.
மேலும் இராணுவத்தினால் கையகப்படுத்தப்பட்டுள்ள காணிகளை உடனடியாக விடுவிக்கவேண்டும். பயங்கரவாத தடைச்சட்டத்தினால் பதிவுசெய்யப்பட்டுள்ள வழக்குகளை உடனடியாக தீர்க்கவேண்டும். இந்த வழக்குகள் நீண்டகாலமாக தேங்கிக்கிடக்கின்றன. அதுமட்டுமன்றி பயங்கரவாத தடைச்சட்டத்தை உடனடியாக நீக்கவேண்டும் அதற்குப் பதிலாக கொண்டுவரப்படும் சட்டமானது சர்வதேச தரத்திற்கு அமைவாக இருக்கவேண்டும் எனவும் அல் ஹுசேன் வலியுறுத்தியிருந்தார்.
அத்துடன் இலங்கையானது சர்வதேச மனிதாபிமான சட்டம், மற்றும் சர்வதேச மனித உரிமை சட்டங்கள் மீறப்பட்டதாக கூறப்படும் விடயத்தில் நம்பகரமான பொறுப்புக்கூறல் பொறிமுறையை முன்னெடுக்காவிடின் இந்த விவகாரம் சர்வதேச நியாயாதிக்கத்தை நோக்கிப் பயணிக்கும் என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார்.
இதேவேளை இலங்கை தொடர்பாக 15 க்கும் மேற்பட்ட உபகுழுக் கூட்டங்களும் இம்முறை ஜெனிவா கூட்டத் தொடரில் நடைபெற்றன. இந்தக் கூட்டங்கங்களில் இலங்கையின் சார்பிலும் புலம்பெயர் அமைப்புக்களின் சார்பிலும் பிரதிநிதிகள் உரையாற்றியிருந்தனர்.
மேலும் தமிழகத்தின் ம.தி.மு.க. கட்சியின் பிரதிநிதியான வைகோவும் இம்முறை ஜெனிவாவுக்கு சென்று உபகுழுக் கூட்டங்களில் இலங்கை தொடர்பாக உரையாற்றியிருந்தார். இது இவ்வாறு இருக்க ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் 37 ஆவது கூட்டத் தொடர் அடுத்தவருடம் மார்ச் மாதம் ஜெனிவாவில் நடைபெறவுள்ளது. இதன்போது இலங்கை தொடர்பாக நான்கு அல்லது ஐந்து அறிக்கைகள் தாக்கல் செய்யப்படவுள்ளன.