5 ஆவது நாளாகவும் தொடரும் அரசியல் கைதிகளின் போராட்டம்
பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் வவுனியா நீதிமன்றில் வைக்கப்பட்டுள்ள தங்கள் மீது தொடுக்கப்பட்ட வழக்குகளை வேறு நீதிமன்றுக்கு மாற்ற வேண்டாம் எனக்கோரி மூன்று அரசியல் கைதிகள் நேற்று ஐந்தாம் நாளாகவும் தொடர்ச்சியான உண்ணாவிரத போராட்டத்தினை மேற்கொண்டனர்.
இதேவேளை அரசியல் கைதிகளின் உண்ணாவிரத போராட்டம் தொடர்பில் தமிழ் தேசிய கூட்டமைப்பு துரித நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்து அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பினால் எதிர்கட்சி தலைவர் இரா சம்பந்தனுக்கு கடிதமொன்றும் அனுப்பப்பட்டுள்ளது.
அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பினூடாக எதிர்கட்சி தலைவர் அலுவலகத்திற்கு நேற்று வெள்ளிக்கிழமை குறித்த கடிதத்தினை அனுப்பி வைத்துள்ளதாகவும் அவ்வமைப்பின் இணைப்பாளர் அருட்தந்தை மா. சக்திவேல் தெரிவித்தார்.
எதிர்கட்சி தலைவருக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ள கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
வவுனியா நீதிமன்றில் பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் தங்கள் மீது தொடுக்கப்பட்ட வழக்குகளை வேறு நீதி மன்றத்திற்கு மாற்ற வேண்டாம் எனக் கோரிக்கை விடுத்தும் இது தொடர்பில் எதிர்கட்சி தலைவரோ அல்லது தமிழ் தேசிய கூட்டமைபினரோ உரிய பதிலளிக்கவில்லை எனத்தெரிவித்தும் கடந்த 25 ஆம் திகதி முதல் மூன்று அரசியல் கைதிகள் அனுராதபுர சிறைச்சாலையில் தொடர்ச்சியான உண்ணாவிரத போராட்டத்தினை முன்னெடுத்து வருகின்றனர்.
ஏற்கனவே கடந்த மாதம் 20 ஆம் திகதி முதல் அநுராதபுரம் சிறைச்சாலையில் தொடர்ச்சியாக உண்ணாவிரதத்தை போராட்டத்தினை முன்னெடுத்திருந்தனர்.
இது தொடர்பில் அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பினூடாக கடந்த 25 ஆம் திகதி தங்களுக்கு கையளித்திருந்த கடிதமொன்றினுடாக குறித்த அரசியல் கைதிகளின் வழக்கினை வேறு நீதிமன்றத்திற்கு மாற்றுவதால் ஏற்படும் நடைமுறை சிக்கல் தொடர்பில் பூரணமாக தெளிவூட்டியிருந்தோம்.
அவ்வாறு தங்களுக்கு வழங்கப்பட்ட கடிதத்தின் மூலம் தங்களால் உரிய தீர்வு கிடைக்கப்பெறும் எனும் நம்பிக்கையில் அரசியல் கைதிகள் மேற்கொண்ட தொடர்ச்சியான உண்ணா விரத போராட்டத்தினை கடந்த மாதம்25ஆம் திகதி கைவிட்டிருந்தனர்.
எனினும் அந்த கடிதத்திற்கு தங்களிடமிருந்து இது வரையில் பதில் எதுவும் கிடைக்கப்பெறாத நிலையிலும் அதற்காக உரிய நடவடிக்கை எடுக்கப்படாமையினாலும் அவர்களது வழக்கு விசாரணைகள் அநுராதபுரம் நீதி மன்றிற்கு மாற்றப்பட்டுள்ளன. இதனால் குறித்த அரசியல் கைதிகள் மீண்டும் கடந்த 25ஆம் திகதி திங்கட்கிழமை முதல் மீண்டும்தொடர்ச்சியான உண்ணாவிரதத்தினை முன்னெடுத்து வருகின்றனர்.
கடந்த 2015ஆம் ஆண்டு அனைத்து அரசியல் கைதிகளும் தங்கள் விடுதலையை வலியுறுத்தி சிறையில் உண்ணாவிரதம் இருந்த போது அவர்கள் கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக வாக்குறுதியளித்திருந்த போதும் அவை இது வரையில் நிறைவேற்றப்படாதிருப்பதையும் தங்களின் கவனத்திற்கு கொண்டு வருகின்றோம்.
அத்துடன் அரசியல் கைதிகளின் விடுதலைக்கும் தற்போது சிறையில் உண்ணாவிரம் இருக்கும்அரசியல் கைதிகளின் பிரச்சினைகளுக்கும் இனியாவது ஓர் உரிய பதிலை விரைவில் எதிர்ப்பார்ப்பதாக எதிர்கட்சி தலைவருக்கு அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பு அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் மேலும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.