“பிரபாகரன் இல்லாவிட்டால் தமிழ் மொழி இருப்பது எவருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை”
“தமிழ் இனம் ஒன்று உள்ளது அதற்கும் வீர வரலாறு இருக்கிறது என்பதை உலகறியச் செய்தவர் பிரபாகரன் மட்டுமே” என இயக்குனர் சிகரம் பாரதிராஜா மட்டு மாவட்ட கலைஞர்களை கௌரவிக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு கூறியுள்ளார்.
அங்கு உரையாற்றிய பாரதிராஜா மேலும் கருத்து தெரிவிக்கையில்,
“பிரபாகரன் மட்டும் இல்லையென்றால் தமிழ் என்ற ஒன்று இருப்பதே தெரியாத நிலை இருந்திருக்கும். காலம் எமது முகத்தில் கோடு போட்டாலும் அந்த காலத்தில் கோடுகளை கலைஞர்கள் நிலத்தில் போட்டுள்ளனர். இந்த மண்ணில் எத்தனையோ கலைஞர்கள் கலைகள் அதன் அத்தனை அறுவடைகளும் இந்த மண்ணுக்கேயுரியது.
கலைஞர்கள் சாதாரண மனிதர்கள் அல்ல, கலைஞர்களை காலங்கள் பேசும் இந்த கலைஞர்களின் படைப்புகள் பேசும், 76 வயதினை கடந்துள்ள நிலையிலும் கலையொன்றே மனிதனை தளர்ச்சியில்லாமல் வாழ வைக்கும் என்பதை உணர்ந்துள்ளேன்.
கலைஞர்கள் மட்டுமே சாதாரண மனிதர்களில் இருந்து மாறுபட்டவர்களாகவுள்ளனர். எல்லாவற்றையும் பார்த்து ரசிக்க கூடியவர்கள் தான் கலைஞர்கள் கலைஞர்களுக்கு வயதே கிடையாது, கலைகள் அவர்களை காப்பாற்றுகின்றது, அவர்களுடைய எண்ணங்களை கலைகள் என்றும் இளமையாகவே வைத்திருக்கின்றது.
ஈழத்தமிழர்கள் மட்டும் தான் தமிழ் மொழியை இன்னும் அழுத்தமாக காப்பாற்றிக் கொண்டிருக்கின்றார்கள், இங்கிருந்து புலம் பெயர்ந்தவர்கள் தமிழ் மொழியை கட்டி காப்பது போல் தமிழ் நாட்டில் கூட யாரும் தமிழ் மொழியை கட்டி காக்கவில்லை.
அகநானூறு, புறநானூறு என்று எவ்வளவோ படைப்புக்கள் இருக்கின்றன ஆனால் உங்கள் படைப்புகளிலே தமிழ் இன்னும் சோர்ந்து போகாமல் இருக்கிறது அது உங்களுக்கு பெருமை தரும் விடயமாகும்.
மொழியின் மீதும் இனத்தின் மீதும் அழுத்தமான பக்தியை உங்களை விட யாரும் வைத்ததில்லை நான் இந்த பூமியில் கால் வைக்கும் போதேல்லாம் பெருமையாக உணர்ந்தேன்.
தமிழ் நாட்டில் தமிழர்களதும், தமிழச்சிகளதும், வீர வரலாற்றை புத்தகங்களிலும், ஏடுகளிலும் வாசித்துப் பார்த்திருக்கின்றோமே ஒழிய வாழ்க்கையில் வாழ்ந்து பார்த்ததில்லை வீர வரலாற்றை வாழ்ந்த தமிழர்களும், தமிழச்சிகளும் ஈழத்தில் தான் இருக்கின்றார்கள்.
சுத்தமான தமிழ் உரையாடல் இங்கிருக்கின்றது இன்னும் நீங்கள் சோரம் போகவில்லை இங்கு ஏற்பட்ட நெருக்கடி கூட நல்லதற்கோ என நான் நினைத்ததுண்டு காரணம் அந்த நெருக்கடிகளினால் இங்கிருந்து புலம் பெயர்ந்தவர்கள் எங்கு வாழ்ந்து கொண்டிருந்தாலும் சரி அங்கும் முளைத்து விருட்சமாய் இருப்போம் என வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள்.
தமிழனை அடையாளப்படுத்துவது ஈழமண் மட்டும் தான், கறுப்பாக ஒரு தமிழன் இருந்தான் அவன் வீர வரலாறு கொண்டவன் என அடையாளப்படுத்தியது பிரபாகரன் மட்டும் தான், அவர் இல்லாவிட்டால் தமிழ் என்ற ஒன்று இருப்பது எவருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை, தமிழினத்தை உலகுக்க அடையாளம் காட்டியவர் பிரபாகரன் மட்டுமே.
மூத்த கலைஞர்களுக்கு நான் விருதுகள் வழங்குவதை விட அவர்களது கரங்களால் நான் ஆசிர்வாதம் வாங்கிச் செல்ல வேண்டும்” என தெரிவித்தார்.