பௌத்த விகாரையும் பயங்கரவாத தடை சட்டமும்
கடும்போக்காளர்களான பொதுபலசேனா உள்ளிட்ட பௌத்த மத தீவிரவாத அமைப்புக்களைச் சேர்ந்த பிக்குகளும், அந்த கொள்கை சார்ந்த அரசியல் தீவிரவாதிகளும் ஏனைய மதங்களையும் அவற்றைப் பின்பற்றுபவர்களையும் அச்சுறுத்தி வருகின்றார்கள்.
சிறுபான்மை மதங்கள் மீது குறிப்பாக இஸ்லாம் மதத்தி ன் மீதும் முஸ்லிம்கள் மீது ம் வன்முறைகளில் ஈடுபட்டிருக்கின்றார்கள். அதேவேளை, வடக்கிலும் கிழக்கிலும் இந்து மதத்தை அச்சுறுத்தி ஒடுக்குவதற்காக மென்முறையிலான ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றார்கள். மன்னார் மாவட்ட பொது அமைப்புக்களின் ஒன்றியத் தலைவர் வி.எஸ்.சிவகரனை பயங்கரவாதப் புலனாய்வு பிரிவினர் ஒக்டோபர் மாதம் 2 ஆம் திகதி விசாரணைக்கு வருமாறு அழைப்பு விடுத்துள்ளனர்.
நாட்டில் பயங்கரவாதத் தடைச்சட்டம் நடைமுறைப்படுத்தப்படவில்லை என அரசாங்கம் அறிவித்துள்ளது. பயங்கரவாதச் செயற்பாடுகளைக் கட்டுப்படுத்துவதற்காக 1978 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டு, 1979 ஆம் ஆண்டு தற்காலிகமாக நடைமுறைக்குக் கொண்டு வரப்பட்ட இந்தச் சட்டம் 1982 ஆம் ஆண்டு நிரந்தர சட்டமாக மாற்றப்பட்டது. இதற்குத் துணையாகவும், இந்தச் சட்டத்தை மிகுந்த வலுவோடு செயற்படுத்துவதற்காக பின்னர் கொண்டு வரப்பட்ட அவசரகாலச் சட்டம் பேருதவியாக அமைந்திருந்தது.
விடுதலைப்புலிகளின் ஆயுதப் போராட்டத்தை இல்லாதொழிப்பதில் இந்தப் பயங்கரவாதத் தடைச்சட்டமும், அவசரகாலச் சட்டமும் முழு வீச்சில் வரைமுறையற்ற அதிகாரங்களுடன் நடைமுறைப்படுத்தப்பட்டன.
தமிழ் மக்களின் அரசியல் உரிமைக்காக நடத்தப்பட்ட ஆயுதப் போராட்டத்தை ஒடுக்குவதற்காக நடைமுறைப்படுத்தப்பட்ட இந்தச் சட்டம் குறிப்பாக தமிழ் மக்களையே இலக்கு வைத்து செயற்படுத்தப்பட்டது.
விடுதலைப்புலிகளுக்கு எதிரான யுத்தம் 2009 ஆம் ஆண்டு முடிவுக்கு வந்த பின்னர், அவசரகாலச் சட்டம் நீக்கப்பட்டது. ஆயினும் அந்தச் சட்டத்தின் சில விதிகளை உள்ளடக்கி பயங்கரவாதத் தடைச்சட்டம் வடக்கு கிழக்கு மாகாணங்களில் தமிழ் மக்கள் மீது தொடர்ந்து நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது.
மோசமான பயங்கரவாதத் தடைச்சட்டம்
பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் எவரையும் சந்தேகத்தின் பேரில் கைது செய்து தடுத்து வைக்க முடியும். இவ்வாறு கைது செய்யப்படுபவர்களை 18 மாதங்களுக்கு நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தாமல் விசாரணைக்காக சிறைப்படுத்தி வைத்திருப்பதற்கு இந்தச் சட்டம் வழிவகுத்துள்ளது.
ஆனால் 18 மாதங்களுக்கு மேலாகவும் பலர் இந்தச் சட்டத்தின் கீழ் குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்படாமலும், நீதிமன்ற விசாரணைக்கு உட்படுத்தாமலும் தடுத்து வைக்கப்பட்டிருந்தார்கள்.
அவர்களில், வழக்குத் தாக்கல் செய்யப்படாமல், விசாரணை என்ற போர்வையில் இன்னும் சிறைச்சாலைகளில் வாடுபவர்கள் இருக்கின்றார்கள் என்பதும், அவர்களின் விடுதலைக்கான கோரிக்கைகளும் போராட்டங்களும்கூட இன்னும் அரசாங்கத்தினால் புறக் கணிக்கப்படுகின்ற நிலைமையே காணப்படுகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.
சட்டவிரோதச் செயற்பாடுகளில் ஈடுபட்டார்கள் என்ற காரணத்திற்காகவும், அத்தகைய காரணம் தொடர்பிலான சந்தேகத்திற்காகவும், எவரையும் கைது செய்து தடுத்து வைப்பதற்கு இந்தச் சட்டம் பொலிஸாருக் கும் இராணுவத்தினருக்கும் அதிகாரமளித்துள்ளது.
சட்டவிரோதச் செயற்பாடுகள் என்பது அரசுக்கு விரோதமாக சுவரொட்டிகளை ஒட்டுவது கூட ஒரு குற்றமாக இந்தச் சட்டம் வரையறுத்துள்ளது.
அவ்வாறான குற்றச் செயலுக்கு மரண தண்டனை உள்ளிட்ட கடுமையான தண்டனை வழங்கப்படுவதற்கும் இந்தச் சட்டத்தில் இடமளிக்கப்பட்டுள்ளது.
இது மட்டுமல்ல, அந்தச் சட்டத்தின் அதிகாரங்களும் செயற்பாட்டு வலுவும் இன்னும் பலவழிகளில் மோசமானவை அதன் காரணமாகவே பயங்கரம் மிகுந்த பயங்கரவாதத் தடைச்சட்டம் என்று அதனைக் குறிப்பிடுகின்றார்கள். இத்தகைய மோசமான பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் அமைக்கப்பட்டுள்ள பயங்கரவாதப் புலனாய்வு பிரிவினரே சிவகரனை விசாரணைக்காக அழைத்திருக்கின்றார்கள்.
செயற்படாத சட்டத்தின் செயற்பாடுகள்
'பயங்கரவாத விசாரணைப் பிரிவின் மூலம் செய்யப்படும் விசாரணைக்கமைய' சுப்பிரமணியம் சிவகரனிடம் 'வாக்குமூலம் ஒன்றைப் பெறுவதற்காக வேண்டி 2017.10.02 ஆம் திகதி காலை 9.00 மணிக்கு பயங்கரவாத விசாரணைப் பிரிவின் 2ஆம் பிரிவின் பொறுப்பதிகாரியைச் சந்திக்கும்படி' சிவகரனுக்கு தமிழில் எழுதப்பட்ட அழைப்பாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
யுத்தம் முடிவுக்கு வந்ததன் பின்னர் நாட்டில் பயங்கரவாதச் செயற்பாடுகள் எதுவும் இடம்பெறவில்லை என்ற காரணத்தினால் அவசரகாலச் சட்டத்தை நடைமுறையில் வைத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை என தெரிவித்து முன்னைய அரசாங்கம் அதனை நீக்கியிருந்தது.
இருப்பினும், பயங்கரவாதத் தடைச்சட்டம் நீக்கப்படவில்லை.
ஆனால் பயங்கரவாதத் தடைச்சட்டம் நடைமுறைப்படுத்தப்படுவதில்லை என்று அரசு ஐ.நா. வின் மனித உரிமைப் பேரவைக்கும் சர்வதேசத்திற்கும் கூறியிருந்தது.
மனித உரிமை மீறலுக்கான பொறுப்பு கூறும் விடயத்தில் ஐ.நா. மனித உரி மைப் பேரவையில் இலங்கை அரசாங்கம் தொடர்பில் கொண்டு வரப்பட்ட இரண்டு பிரேரணைகளுக்கு இணை அனுசரணை வழங்கிய நல்லாட்சி அரசாங்கமும்கூட, பயங்கரவாதத் தடைச்சட்டம் இப்போது செயற்படுத்தப்படுவதில்லை.
அது செயலற்றிருக்கின்றது என்றே கூறியிருக்கின்றது.
ஆனால் அந்தச் சட்டம் பல்வேறு வழிகளில் நல்லாட்சியிலும் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது என்பதே உண்மையான கள நிலைமையாகும்.
சிவகரனைப்போன்று எத்தனையோ பேர் பயங்கரவாதப் புலனாய்வு பிரிவினரால் விசாரணைக்கு அழைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டிருக்கின்றார்கள். அவர்களிடம் வாக்குமூலங்கள் பெறப்பட்டிருக்கின்றன.
பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் புதிதாக வழக்குத் தாக்கல்......?
அது மட்டுமல்லாமல் எத்தனையோ பேர் பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.
அந்தச் சட்டத்தின் கீழ் பலருக்கு வழக்குத் தாக்கல் செய்யப்பட்டு வழக்குகளும் நடந்து வருகின்றன. அதேபோன்று இராணுவத்தின் புனர்வாழ்வுப் பயிற்சியின் பின்னர் தடுப்புக்காவலில் இருந்து விடுதலை செய்யப்பட்டு அரசாங்கத்தினால் 'சமூகத்தில் இணைக்கப்பட்ட' முன்னாள் போராளிகளான பலரும் கைது செய்யப்பட்டு அவர்களுக்கு எதிராகப் புதிய வழக்குகள் இந்தச் சட்டத்தின் கீழ் தாக்கல் செய்யப்பட்டிருக்கின்றன.
பயங்கரவாதப் புலனாய்வு பிரிவினரின் பிந்திய நிலைமையின்படி 90க்கும் அதிகமானவர்களுக்கு எதிராக பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் வழக்கு தாக்கல் செய்யப்படவுள்ளதாக நீதிமன்றத்திற்குத் அதிகாரிகளினால் தகவல் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.
இதன்படி வழக்குத் தாக்கல் செய்யப்படவுள்ளவர்கள் ஏற்கனவே கைது செய்யப்பட்டு பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டிருப்பவர்களா அல்லது புனர்வாழ்வுப் பயிற்சியின் பின்னர் விடுதலை செய்யப்பட்ட முன்னாள் போராளிகளா அல்லது, அந்தச் சட்டத்தின் கீழ் புதிதாகக் கைது செய்யப்படவுள்ளவர்களா என்பது தெரியவில்லை.
இந்தப் பயங்கரவாதத் தடைச்சட்டமானது அப்பட்டமாக மனித உரிமைகளையும், மக்களின் அடிப்படை உரிமைகளையும் மீறிச் செயற்படுவதைச் சுட்டிக்காட்டி, இந்தச் சட்டம் நீக்கப்பட வேண்டும் என்பதை ஐ.நா .மனித உரிமைப் பேரவையும் ஐ.நா. மனித உரிமை ஆணையாளர் அலுவலகமும் சர்தேசமும் அரசாங்கத்திடம் வலியுறுத்தியிருக்கின்றன.
அந்த வலியுறுத்தலை ஏற்றுள்ள அரசாங்கம் அந்தச் சட்டத்தை நீக்குவதற்கு இன்னும் நடவடிக்கை எடுக்கவில்லை.
விசாரணைக்கான காரணம் முக்கியமானது
அந்தச் சட்டத்தை நீக்கிவிட்டு சர்வதேச நியமங்களுக்கு அமைவாகப் புதிதாக பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் ஒன்றைக் கொண்டு வரவுள்ளதாக அரசு உறுதியளித்திருக்கின்றது. ஆனால் இந்த உறுதிமொழியும் இன்னும் நிறைவேற்றப்படவில்லை.
புதிய சட்டத்திற்கான வரைபு தயாரிக்கப்பட்டுள்ள போதிலும், அது இன்னும் சட்ட அந்தஸ்து பெறவில்லை.
புதிய வரைபும்கூட பயங்கரவாதத் தடைச்சட்டத்திலும் பார்க்க மோசமான முறையில் மக்களுடைய அடிப்படை உரிமைகளையும் மனித உரிமைகளையும் மீறும் வகையிலேயே அமைந்துள்ளதாகப் பலரும் சுட்டிக்காட்டியிருக்கின்றார்கள்.
இந்தப் பின்னணியில் மன்னார் மாவட்ட பொது அமைப்புக்களின் ஒன்றியத் தலைவர் சிவகரன் மீது பயங்கரவாதத் தடைச்சட்டம் விசாரணை என்ற போர்வையில் பாய்ந்துள்ளமையை அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாக நோக்க வேண்டியிருக்கின்றது.
அவ்வாறு நோக்குவதற்கு சிவகரன் பெரிய அளவில் அரசியல் ரீதியாகவோ அல்லது வேறு வகைகளிலோ அதிக முக்கியத்துவம் வாய்ந்த ஒரு நபர் என்று அர்த்தமல்ல.
ஆனால், அவர் விசாரணைக்காக அழைக்கப்படுவதற்காக, அனுமானிக்கப்படுகின்ற விடயம் இன்றைய அரசியல் சூழலில் முக்கியத்துவம் பெற்றிருக்கின்றது.
அதன் காரணமாகவே சிவகரனுக்கு விடுக்கப்பட்டுள்ள பயங்கரவாதப் புலனாய்வு பிரிவினருடைய அழைப்பாணை, மற்றவர்களுக்கு விடுக்கப்பட்ட அழைப்பாணைகளிலும் பார்க்க வித்தியாசமானதாகவும் விசேடமானதாகவும் கருத வேண்டியிருக்கின்றது.
திருக்கேதீஸ்வரச் சூழலில் பௌத்த விகாரை
மன்னார் திருக்கேதீஸ்வரம் இந்து சமயத்தின் தேவாரம் பாடப்பட்ட காலத்திலேயே முக்கியத்துவம் பெற்றிருந்தது.
தேவாரத்தில் குறிப்பிடப்பட்டிருப்பதன் மூலம் அந்த ஆலயம், தொன்மையும் வரலாற்றுச் சிறப்பும் மிக்கது என்று வரலாற்று ஆசிரியர்கள் குறிப்பிட்டிருக்கின்றார்கள்.
அத்தகைய சிறப்புமிக்க அந்த ஆலயத்தின் சூழலில் யுத்த மோதல்களின்போது, இராணுவத்தினர் பெரும் எண்ணிக்கையில் நிலைகொண்டிருந்தனர்.
திருக்கேதீஸ்வரம் பகுதி மக்களும் ஏனைய மக்களைப் போன்று உயிருக்குப் பாதுகாப்பு தேடி இடம்பெயர்ந்திருந்ததனால், அந்த ஆலயம் இராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருந்தது.
அப்போது அங்கு இராணுவத்தினரே தங்களுக்குத் தெரிந்த வகையில் மலர்களை அர்ச்சித்து வணங்கி அந்த ஆலயத்தைப் பேணி வந்துள்ளார்கள்.
அதேநேரம் திருக்கேதீஸ்வரச் சூழலாகிய மாந்தையில் இராணுவத்தினர் தங்களுடைய வழிபாட்டுக்கென ஒரு புத்தர் சிலையை நிறுவி வழிபட்டு வந்தனர்.
யுத்தம் முடிவடைந்ததையடுத்து, திருக்கேதீஸ்வரம் பகுதியில் இருந்து அவர்கள் வெளியேறியபோது, அந்த புத்தர் சிலையை அவர்கள் தம்முடன் எடுத்துச் செல்லவில்லை.
மாறாக அங்கு ஒரு பௌத்த பிக்குவை தங்கச்செய்து அவருக்கும் அந்த புத்தர் சிலைக்கும் பாதுகாப்பு வழங்குவதற்காக ஒரு சிறிய இராணுவ முகாமையும் விட்டுச் சென்றிருந்தார்கள்.
இந்த இடத்தில் தனியாருக்குச் சொந்தமான 10 ஏக்கர் காணியைக் கைப்பற்றி இராணுவத்தின் பாதுகாப்புடன் புதிய பௌத்த விகாரையொன்று அமைக்கப்பட்டுள்ளது.
அந்த விகாரை செப்டெம்பர் மாதம் 29 ஆம் திகதி (நேற்று) ஜனாதிபதியினால் வைபவ ரீதியாகத் திறந்து வைக்கப்படுவதற்கு ஏற்பாடாகியிருந்தது.
'கறுப்புக் கொடியேந்தி, முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவோம்....'
இந்தத் திறப்புவிழாவையும், அதில் ஜனாதிபதி கலந்து கொள்வதையும் சிவகரன் வெளிப்படையாகவே எதிர்த்திருந்தார்.
இது குறித்து அவர் ஜனாதிபதிக்குக் கடிதம் ஒன்றையும் அனுப்பியிருந்தார்.
வரலாற்றுப் புகழ் மிக்க திருக்கேதீஸ்வரம் சூழலில் இச் செயற்பாடு ஏற்புடையதா, என அந்தக் கடிதத் தில் அவர் ஜனாதிபதியிடம் வினவியிருந்தார்.
அத்துடன், '18.01.2012 அன்று பௌத்த மத அலுவல்கள் திணைக்களம் இந்த விகாரையின் பதிவை இரத்து செய்ததுடன் கட்டுமானப்பணிகளையும் நிறுத்தியது.
ஆனால் உங்கள் நல்லாட்சியில் தான் மீண்டும் பணிகள் தொடங்கப்பட்டன. இது சட்ட விரோத ஜனநாயக மீறல் அல்லவா?
இதுவா நல்லாட்சி?
தமிழ் மக்களின் பூர்வீக வாழ்விடங்களில் கலாசார மாற்றத்தை ஏற்படுத்தி போலியான புனைவு பெயர்களின் மூலம் பௌத்த மயமாக்கல் வேலைத்திட்டத்தை முன்னகர்த்துகிறீர்களா?
சட்டவிரோதமாக தனியாருக்கு சொந்தமான காணியில் அமைக்கப்பட்ட விகாரையை திறப்பதற்கு தமிழ் மக்களின் வாக்குகளால் தெரிவு செய்யப்பட்ட ஜனாதிபதியாகிய நீங்கள் உங்களை தெரிவு செய்த மக்களின் விருப்புக்கு மாறாக விழாவிற்கு வருவது தார்மீக அடிப்படையில் நியாயம் தானா என்ற வினாக்களையும் தொடுத்திருந்த அவர்,
'எமது நியாயபூர்வமான வேண்டு கோளை புறக்கணித்து குறித்த திறப்பு விழா நடைபெற்றால் ஜனநாயக ரீதியில் கறுப்புக் கொடியேந்தி முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவோம் என்பதையும் தங்களுக்கு வினயமாகத் தெரிவித்துக் கொள்கின்றோம்' எனவும் சிவகரன் தனது கடிதத்தில் தெரிவித்திருந்தார்.
இவ்வாறு அவர் ஜனாதிபதிக்கு கடிதம் அனுப்பியிருந்ததையடுத்தே அவரை பயங்கரவாதப் புலனாய்வு பிரிவினர் விசாரணைக்காக அழைத்துள்ளார்கள்.
இந்த அழைப்புக்கு முன்னதாக அந்த விசாரணைப் பிரிவைச் சேர்ந்தவர்கள் சிவகரனை பல தடவைகள் தேடிச் சென்று விசாரணைகள் நடத்தியதன் பின்பே இந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது என அவர் உறுதியாகத் தெரிவித்துள்ளார்.
இவ்வாறு அவர் விசாரணைக்காக கொழும்பில் உள்ள பயங்கரவாதப் புலனாய்வு பிரிவினரால் விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ள அதேவேளை, அந்த பௌத்த விகாரையின் திறப்புவிழாவுக்கு ஜனாதிபதி வருகை தரவில்லை என்ற தகவலும் வெளியாகியிருந்தது.
ஆயினும் அந்த விழாவில் பௌத்த சாசன அமைச்சர் காமினி ஜயவிக்கிரம பெரேரா கலந்துகொண்டிருந்தார்.
அரசியல் முக்கியத்துவம் என்ன?
இந்த நாட்டின் அரசியலமைப்பில் பௌத்த மதத்திற்கே முன்னுரிமை வழங்கப்பட்டுள்ளது.
பெரும்பான்மை இன மக்களாகிய சிங்கள மக்கள் பின்பற்றுகின்ற மதம் என்ற காரணத்திற்காக ஏனைய மதங்களுக்கு உரிய வகையில் உரிமைகள் வழங்கப்பட்டுள்ளதாக அரசியலமைப்பு கூறுகின்றது.
ஆயினும், கடும் போக்காளர்களான பொதுபலசேனா உள்ளிட்ட பௌத்த மத தீவிரவாத அமைப்புக்களைச் சேர்ந்த பிக்குகளும், அந்த கொள்கை சார்ந்த அரசியல் தீவிரவாதிகளும் ஏனைய மதங்களையும் அவற்றைப் பின்பற்றுபவர்களையும் அச்சுறுத்தி வருகின்றார்கள்.
சிறுபான்மை மதங்கள் மீது குறிப்பாக இஸ்லாம் மதத்தின் மீதும் முஸ்லிம்கள் மீதும் வன்முறைகளில் ஈடுபட்டிருக்கின்றார்கள்.
அதேவேளை, வடக்கிலும் கிழக்கிலும் இந்து மதத்தை அச்சுறுத்தி ஒடுக்குவதற்காக மென்முறையிலான ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றார்கள்.
இந்த நடவடிக்கைகள் நியாயமற்றவை, வெளிப்படையான குற்றச்செயல் சார்ந்தவை என்பதைத் தெரிந்திருந்தும்கூட, நிறை வேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியோ அல்லது சட்டம் ஒழுங்கை நிலைநாட்டுவதற்குப் பொறுப்பான அமைச்சரோ அல்லது பொலிஸாரோ அவற்றுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதற்குத் இதுவரையில் துணிந்ததில்லை.
இதன்மூலம் இந்த நாட்டின் சட்டமும், நிறைவேற்று அதிகாரமுடைய நிர்வாகமும் இந்த நடவடிக்கைகள் இயல்பானவை, நியாயமானவை என்பதை ஏற்றுக் கொண்டிருப்பதையே எடுத்துக்காட்டுகின்றன.
அத்துமீறிய இந்தச் செயற்பாடுகளில் ஒன்றாகவே திருக்கேதீஸ்வர ஆலயச் சூழலில் தனியாருடைய காணியில் பௌத்த விகாரை அமைக்கப்பட்டுள்ள நடவடிக்கை இடம்பெற்றுள்ளது.
இதனையே சிவகரன் துணிந்து தனியொருவராக எதிர்த்துள்ளார்.
இதுபோன்ற அத்துமீறிய ஆக்கிரமிப்பு நடவடிக்கைகள் நாட்டின் வடக்கிலும் கிழக்கிலும் பல இடங்களில் இடம்பெற்றிருக்கின்றன.
இடம்பெற்று வருகின்றன. அவற்றுக்கு எதிராகக் குரல் எழுப்பப்பட்டிருக்கின்றது என்பதையும் மறுப்பதற்கில்லை.
ஆனால், அவற்றில் இருந்து திருக்கேதீஸ்வர பௌத்த விகாரை விவகாரம் வித்தியாசப்பட்டிருக்கின்றது.
கேள்விக்குறிக்கு ஆளாகும் எதிர்காலம்
நல்லாட்சியின் கீழ் ஜனநாயகம் பாதுகாக்கப்பட்டுள்ளது, ஜனநாயக உரிமைகள் பேணப்படுகின்றன என அரசாங்கம் கூறுகின்றது.
ஆனால் உண்மையில் வடக்கிலும் கிழக்கிலும் தேசிய சிறுபான்மையினராகிய தமிழ் மக்களினதும், முஸ்லிம் மக்களினதும் அரசியல் உரிமைகளும், அரசியல் அந்தஸ்தும், மத உரிமைகளும் மத அந்தஸ்தும் அடக்கி ஒடுக்கப்படுவதையும் அவர்களுடைய தாயக மண் உரிமைகள் பறிக்கப்படுவதையுமே காண முடிகின்றது.
இது இந்த நாடு சிங்கள பௌத்தர்களுக்கே சொந்தமானது என்ற சிங்கள பௌத்த அரசி யல் கோட்பாட்டை அடியொட்டி, இங்கு பௌத்த மதத்திற்கே முன்னுரிமை என்றும், ஒற்றையாட்சியே இங்குள்ள ஆட்சி முறைமை என்றும், அரசியலமைப்பில் அளிக்கப்பட்டுள்ள அங்கீகாரத்தின் அப்பட்டமான வெளிப் பாடு என்பதில் சந்தேகமில்லை.
நீண்டகால அடிப்படையில் நேர்த்தியாகத்திட்டமிட்ட வகையில் முன்னெடு க்கப்பட்டுள்ள சிறுபான்மை இன மக்கள் மீதான இந்த அடக்குமுறையானது, தேசிய சிறு பான்மை இனங்களினுடைய குறிப்பாக தமிழ் மக்களுடைய எதிர்கால இருப்பையே கேள்விக்குறிக்கு உள்ளாக்கியிருக்கின்றது.
ஏனெனில் உருவாக்கப்படவுள்ள புதிய அரசியலமைப்பிலும், ஒற்றையாட்சி என்பதும், பௌத்த மதத்திற்கே முன்னுரிமை என்பதும் அடிப்படை விடய ங்களா கக் குறிப்பிடப்பட்டிருக்கின்றன.
வடக்கு, கிழக்கு இணைந்த சுயநிர்ணய உரிமையுடன் கூடிய பகிர்ந்தளிக் கப்பட்ட இறைமை சார்ந்த அதி உச்ச அதிகாரப் பரவலாக்கலைக் கொண்ட ஓர் அரசியல் தீர்வையே ஏற்றுக்கொள்ளப் போவதாக சூளுரைத்துக் கொண்டிரு க்கின்ற தமிழ்த்த தேசிய கூட்டமைப்பின் தலைமையும் இதனை ஏற்றுக் கொண்டிருக்கின்றது.
இதன்மூலம் ஒற்றையாட்சி மற்றும் பௌத்த மதத்திற்கே முழு முதலான முன்னுரிமை என்ற கோட்பாடுகளை புதிய அரசியலமைப்பில் தமிழ் மக்களும் ஏற்றுக்கொண்டுள்ளார்கள் என்று அரசாங்கம் பிரசாரம் செய்வதற்கு ஏதுவா கவும், தமிழ் மக்கள் மீதான அடக்குமுறைகளுக்கு அவர்களது அங்கீகா ரத்தைப் பெற்றுள்ளோம் என கூறுவதற்கும் வழிசமைக்கப்பட்டிருக்கின்றது.
அது மட்டுமல்லாமல், ஒற்றையாட்சியை இறுக்கமாக வலியுறுத்துகின்ற ஏகிய ராஜிய என்ற சொற்பதமானது ஒருமித்த நாடு என்ற தழிழ்ச் சொல்லின் அர்த்தமாகும்.
அது, சமஷ்டி முறையிலான அதியுச்ச அதிகாரப் பரவலாக்கலைக் கோருகின்ற தமிழ் மக்களுடைய அரசியல் அபிலாஷைக்குப் பாதி ப்பை ஏற்படுத்த மாட்டா என தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைமையும், தமிழரசுக் கட்சியினரும் தமிழ் மக்கள் மத்தியில் விளக்க மளிக்க முற்பட்டிருப்பதும் அரசியல் ரீதியான வேடிக்கையாகவே இருக்கின்றது.