அரச தரப்பு சாட்சியாக மாற கோடிக்கணக்கில் பேரம் பேசிய சுவிஸ்குமார்!
யாழ்.புங்குடுதீவு மாணவி வித்தியா வின் கொலை வழக்கில், தன்னையும் தனது சகோதரனையும் அரச தரப்பு சாட்சியாக மாற்றுவதற்கு இரண்டு கோடி ரூபாய் வழங்குவதற்கு சுவிஸ்குமார் தயாராகியுள்ளமை தெரியவந்துள்ளது.
யாழ். மேல் நீதிமன்றில் ட்ரயல் அட்பார் தீர்ப்பாயம் முன்னிலையில், நேற்று (புதன்கிழமை) சட்சியமளித்த குற்றப்புலனாய்வு பிரிவின் விசாரணை அதிகாரி நிசாந்த சில்வா இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
பிறிதொரு வழக்கின் சந்தேக நபரான மென்பொருள் பொறியியலாளர் ஒருவரை தாம் சிறையில் எதேச்சை யாக சந்தித்தபோது, வித்தியா கொலையின் போது பதிவுசெய்யப்பட்டு பின்னர் அழிக்கப்பட்ட காணொளிகளை மீளப் பெற முடியுமா என நிசாந்த சில்வா வினாவியுள்ளார்.
இதன்போதான கலந்துரையாடலில், அரசு தரப்பு சாட்சியாக மாறுவதற்கு 2 கோடி ரூபாய் கொடுக்க முடியுமென சுவிஸ்குமார் பொறியியலாளரிடம் கூறியிருந்ததாக சாட்சியாளரான நிசாந்த சில்வா மன்றில் குறிப்பிட்டுள்ளார்.
சந்தேகநபர்கள் 9 பேரையும் இதன்போது மன்றில் அடையாளம் காட்டிய சாட்சியாளர், இவர்களிடம் கடந்த ஒன்றரை வருட காலமாக விசாரணை நடத்தியதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, சடலம் கிடந்த தோற்றத்தின் ஊடாக, இச் செயலை கடற்படை யினர் மேற்கொண்டதைப் போல சித்தரிக்க எதிரிகள் முற்பட்டுள்ளமை தெரியந்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
குறித்த சாட்சிப்பதிவை அடுத்து, குற்றப்புலனாய்வு பிரிவின் விசாரணை அதிகாரி நிசாந்த சில்வா விசாரணைகளில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார். சாட்சி விசாரணைகள் இன்று 23ஆவது நாளாக நடைபெறுகின்றது.