எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இன்று வெளியாகும் ‘ஆளப்போறான் தமிழன்’
நடிகர் விஜய் நடிப்பில் தீபாவளிக்கு வெளியாகவுள்ள ‘மெர்சல்’ திரைப்ப டத்தின் ‘ஆளப்போறான் தமிழன்’ பாடல் இன்று (வியாழக்கிழமை) மாலை வெளியாகவுள்ள நிலையில் நள்ளிரவு பாடலின் டீசர் வெளியாகியது.
இந்த டீசர் வெளியாகி சில நிமிடங்களில் பார்வையாளர்களின் பெரும் வரவேற்பை பெற்றது. அதுமட்டுமின்றி அரைமணி நேரத்தில் 50 ஆயிரம் விருப்புக்களையும் சுமார் 5 லட்சம் பார்வையாளர்களையும் வென்றுள்ளது.
ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் தனது 100 ஆவது படமாக தயாரித்து வரும் பிரமாண்டமாக திரைப்படமே ‘மெர்சல்’. விஜய் நடிப்பில்; பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் உருவாகும் இந்த திரைப்படம் தீபாவளிக்கு வெளியாகவுள்ளது.
இப்படத்தை அட்லி இயக்குகிறார். இந்த படத்தில் தளபதி விஜய் மூன்று கதாபாத்திரங்களில் நடித்துள்ளதால் இரசிகர்களின் எதிர்பார்ப்பு அளவுக்கு அதிகமாகவே உள்ளது எனலாம்.
விஜய் ஜோடியாக காஜல் அகர்வால், சமந்தா, நித்யா மேனன் நடிக்கின்றனர். எஸ்.ஜே.சூர்யா வில்லனாக நடிக்கிறார்.
இவர்கள் தவிர சத்யராஜ், வடிவேலு, சத்யன், கோவை சரளா, சுனில், மிஷா கோஷல், யோகி பாபு, ஹரீஷ் பேரடி, மொட்டை ராஜேந்திரன், சீனு மோகன், சண்முக சிங்காரம் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
ஒஸ்கார் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் பாடல்கள் எதிர்வரும் 20 ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், பாடலாசிரியர் விவேக் வரிகளில் ‘ஆளப்போறான் தமிழன்’ என்ற வரிகளில் தொடங்கும் பாடல் இன்று வெளியாகவுள்ளது. படத்தின் சிங்கிள் டிராக் இன்று வெளியாகும் என்று படத்தின் தயாரிப்பு நிறுவனம் அதன் டுவிட்டர் பக்கத்தில் போஸ்டருடன் வெளியிட்டிருக்கிறது.
அந்த பாடல் விஜய் இரசிகர்களுக்கு விருந்தளிக்கும் வகையில் மாஸாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.