வடக்கில் திட்டமிட்ட குழப்பநிலையை ஏற்படுத்த சதி?
அண்மையில் இடம்பெற்ற கோப்பாய் வாள்வெட்டு சம்பவத்துடன் தொடர்பு டைய சந்தேகநபர்கள், முன்னாள் போராளிகள் என பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார். வாள்வெட்டு சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட இருவருள் ஒருவர் சார்பாக, சட்டத்தரணி சுகாஸ் நீதிமன்றில் ஆஜராகி வருகின்றார்.
இந்நிலையில், பொலிஸ்மா அதிபரது கருத்தின் உண்மைத் தன்மை தொடர்பாக ஊடகவியலாளர்கள் வினாவியபோதே அவர் மேற்குறித்தவாறு குறிப்பிட்டுள்ளார்.
பொலிஸ்மா அதிபர் குறிப்பிட்டதைப் போன்று இவர்கள் இருவரும் முன்னாள் போராளிகள் அல்ல எனக் குறிப்பிட்ட சட்டத்தரணி சுகாஸ், அதனை நீதிமன்றில் நிரூபிக்க தயாராக உள்ளதாகவும் குறிப்பிட்டார்.
அத்தோடு, உண்மையான குற்றவாளிகள் கைதுசெய்யப்பட வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்திற்கு இடமில்லை என்றும், அப்பாவிகளது கைதுகள் நிறுத்தப்பட வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.
இதேவேளை, இவ்வாறான சம்பவங்களின் போது தீர விசாரிக்காமல் பொலிஸார் அவசரப்பட்டு இவ்வாறான கருத்துக்களை வெளியிடுவதானது, சமூகத்தில் குழப்பநிலையை ஏற்படுத்துவதோடு, வழக்குகளும் திசை திருப்பப்படுமென சுட்டிக்காட்டினார்.
இந்நிலையில், பொலிஸ்மா அதிபரின் கூற்றுக்கு எதிராக எடுக்கப்பட வேண்டிய நகர்வுகள் குறித்து தற்போது ஆராய்ந்து வருவதாக சட்டத்தரணி சுகாஸ் மேலும் குறிப்பிட்டார்.