Breaking News

வித்தியாவின் சடலம் சிதைக்கப்பட்டதற்கான காரணத்தை தெரிவித்த சாட்சி.

புங்குடுதீவு மாணவி வித்தியாவின் சடலம் சிதைக்கப்பட்டிருந்த இருந்த நிலையினைப் பார்த்து இராணுவம் மற்றும் கடற்படையினர் மீது திசை திருப்புவதற்கான சந்தேகங்கள் இருந்த தாக குற்றப் புலனாய்வு பிரிவின் உப பொலிஸ் பரிசோதகர் ஏ.ஜே. நிஷாந்த சில்வா தெரிவித்துள்ளார். 

சம்பவம் இடம்பெற்ற இடத்தில் இருந்து 2 கிலோ மீற்றர் தொலைவில் கடற்படை முகாம் இருந்த காரணத்தினால் இந்த சந்தேகம் எழுந்ததாகவும் அவர் கூறியுள்ளார். புங்குடுதீவு மாணவி வித்தியா படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பிலான வழக்கு நீதாய தீர்ப்பாயத்தில் மூன்று மேல் நீதிமன்ற நீதிபதிகள் முன்னிலையில் விசாரணை செய்யப்பட்டு வருகின்றது. 

இந்நிலையில், குறித்த படுகொலை வழக்கின் நான்காம் கட்ட விசாரணைகள் இன்று யாழ்.மேல் நீதிமன்றில் நீதிபதிகளான அன்னலிங்கம் பிரேமசங்கர், பா.சசிமகேந்திரன் மற்றும் மா.இளஞ்செழியன் முன்னிலையில் இடம்பெற்றது. கடந்த மாதம் 25ஆம் திகதி 35வது சாட்சியான குற்றப்புல னாய்வு பிரிவின் உப பொலிஸ் பரிசோதகரின் சாட்சியம் தொடர் சாட்சியாக இன்றைய தினம் இடம்பெற்றது. 

இதன் போது சாட்சியமளித்த குற்றப் புலனாய்வு பிரிவின் உபபொலிஸ் பரிசோதகர், “6வது சாட்சி தனது வாக்குமூலத்தில் தனது வீட்டின் கூரையின் பின்புறமாக ஒரு பழைய பொலித்தீன் பையில் கண்ணாடி போடப்பட்டுள்ளது. அந்த பொலித்தீன் பையின் மேலாக பழைய காற்சட்டை ஒன்றும் உள்ளது. அந்த கண்ணாடி இருக்கும் இடத்தினைக் காட்ட முடியும் என்றும் தெரி வித்தார்.  

வவுனியா சிறைச்சாலையில் வைத்து இப்தார் என்ற சந்தேகநபருடன் கதைத்த போது, அவர் மகாலிங்கம் சசிக்குமார் கையடக்கத் தொலைபேசியில் பதிவு செய்யப்பட்டு அழிக்கப்பட்ட காணொளியினை மீளப் பெற முடியுமா என்று விசாரித்ததாகவும், அத்துடன், வவுனியா சிறைச்சாலையில் வைத்து 9வது சந்தேகநபரான மகாலிங்கம் சசிக்குமார் என்னைப் பற்றி விசாரித்ததாக சொன்னார். 

9வது சந்தேகநபரினால் குற்றச்சம்பவம் தொடர்பாக வீடியோ பதிவு செய்யப்பட்டதாகவும், தானும், 4வது சந்தேகநபரும் அரச சாட்சியாக மாற சந்தர்ப்பம் இருக்கின்றதாக எனவும், கையடக்கத் தொலைபேசியில் பதிவு செய்யப்பட்டு அழிக்கப்பட்ட வீடியோவை மீளப்பெற முடியுமா என்றும் விசாரித்ததாக அவர் என்னிடம் சொன்னார். 

 அத்துடன், 9வது சந்தேகநபரான சுவிஸ்குமார் மற்றும் 4வது சந்தேகநபரையும் அரச சாட்சியாக மாற்றுவதற்கு 2 கோடி ரூபா கை மாற்றுவதாக தன்னிடம் கூறியதாகவும் குற்றப் புலனாய்வு பிரிவின் உபபொலிஸ் பரிசோதகர் ஏ.ஜே.நிஷாந்த சில்வா மன்றில் சாட்சியமளித்தார்.