நீதிமன்றம் உத்தரவிட்டால் விஜயகலாவிடம் விசாரணை நடத்தப்படும்: பொலிஸ்
யாழ். புங்குடுதீவு மாணவி வித்தியா வின் கொலை தொடர்பான பிரதான சந்தேகநபர் தப்பிச்செல்ல இராஜாங்க அமைச்சர் விஜயகலா உதவியதாக குற்றஞ்சாட்டப்படும் நிலையில், நீதி மன்றம் உத்தரவிட்டால் அவர் மீது விசாரணை நடத்தப்படுமென பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவான் குணசேகர குறிப்பிட்டுள்ளார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று (புதன்கிழமை) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
வித்தியா கொலை தொடர்பான விசாரணை யாழ். மேல் நீதிமன்றத்தில் ட்ரயல் அட் பார் தீர்ப்பாயம் முன்னிலையில் நடைபெற்று வரும் நிலையில், நீதிபதிகள் அறிவிக்கும் பட்சத்தில் மேலதிக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுமென அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
வித்தியா கொலையுண்ட பின்னர் சுவிஸ்குமார் தப்பிச்செல்ல முற்பட்ட போது, பொதுமக்களால் பிடித்து அவர் கட்டிவைக்கப்பட்டிருந்தார். அச் சந்தர்ப்பத்தில் அங்கு சென்ற ராஜாங்க அமைச்சர் விஜயகலா, அவரை விடுவிக்குமாறு கோரினார் என கூறப்படும் காணொளியொன்று ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்றில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. அதன் உண்மைத் தன்மையை ஆராயுமாறு ஏற்கனவே நீதிமன்றம் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.