விஜேதாஸவை நீக்க : ஜனாதிபதியிடம் பிரதமர் ரணில் கோரிக்கை
அமைச்சர் விஜேதாஸ ராஜபக் ஷவை அமைச்சுப் பதவியிலிருந்து நீக்குவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கோரிக்கைவிடுத்து ள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்துள்ளது. அக்கட்சியின் பொதுச் செயலாளர் அமைச்சர் கபீர் ஹாஸிம் ஒப்பமிட்டு வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே குறித்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
அமைச்சர் விஜேதாஸ ராஜபக்ஷ அடிக்கடி கட்சியினதும் அமைச்சரவையினதும் கூட்டுப் பொறுப்பை மீறிச் செயற்படுவதாக, கடந்த 17 ஆம் திகதி ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழு கூடியபோது குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டிருந்தது.
எனவே குறித்த குற்றச்சாட்டு தொடர்பில் விளக்கமளிப்பதற்கு கடந்த 21 ஆம் திகதி வரையில் அமைச்சர்
விஜேதாஸ ராஜபக்ஷவிற்கு காலக்கெடு வழங்குவதாக
செயற்குழுக் கூட்டத்தில் ஏகமானதாக தீர்மானிக்கப்பட்டிருந்தது.
மேலும் அக்காலக்கெடுவில் குறித்த குற்றச் சாட்டை திருத்திக்கொள்ளும் வகையில் நடவடிக்கை எடுப்பதுடன் அது தொடர்பில் விளக்கமளிக்க வேண்டும். அல்லாவிடத்து அமைச்சர் விஜயதாஸ ராஜப்கஷ தமது அமைச்சரவை அமைச்சிலிருந்து இராஜினாமா செய்துகொள்ள வேண்டும் எனவும் ஏகமானதாக தீர்மானிக்கப்பட்டிருந்தது.
மேலும் குறித்த விடயம் தொடர்பில் விசாரணை நடத்துவதற்கு மலிக் சமரவிக்ரம தலைமையில் மூவரடங்கிய குழு ஒன்றும் அமைக்கப்பட்டிருந்தது.
எனவே மலிக் சமரவிக்ரமவுடன் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை
மேற்கொள்ளுமாறு அமைச்சர் விஜயதாஸ ராஜப்கஷவிடம் வேண்டுகோள் விடுக்ப்பட்டதுடன் அவர் அதற்கு உடன்பட்டிருந்தார்.
எனினும் பின்னர் அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ குறித்த உடன்பாட்டை முறித்துக்கொண்டதுடன் தன்மீது முன்வைக்கப்பட்டுள்ள குற்றசாட்டை திருத்திக்கொள்வதற்கு நடவடிக்கை எடுக்கவில்லை.
மேலும் அவர் கடந்த வார இறுதியிலும் ஐக்கிய தேசியக் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் அமைச்சர்கள் மற்றும் அரசாங்கத்தின் கொள்கைத்திட்டத்ததை விமர்சிக்கும் வகையில் செயற்பட்டிருந்தார்.
இவ்வாறான சந்தர்ப்பத்தில் அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ கட்சி செயற்குழு முன்னிலையில் உடன்பட்ட விடயங்களை நிறைவேற்றவில்லை. அத்துடன் அவர் தொடர்ந்தும் அமைச்சர்களையும் அரசாங்கத்தின் கொள்கைத்திட்டங்களையும் விமர்சித்தமையினால் அவர் செயற்குழுவின் தீர்மானங்களுக்கு எதிராகச் செயற்பட்டுள்ளதாக கட்சியின் செயற்குழு தீர்மானித்துள்ளது.
எனவே கட்சி செயற்குழுவின் தீர்மானங்களுக்கு அமைவாக அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ வகிக்கும் அமைச்சுப் பதிவியிலிருந்து அவரை நீக்கு வதற்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ஜனாதிபதியிடம் வேண்டிக்கொண்டுள்ளதாகவும் அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.