சம்பந்தனோடு என்ன பேசினீர்கள்-விக்கி விளக்கம்(காணொளி)
வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் அனைத்துக் கட்சிகளின் தலைவர்களுக்குமிடையில் முதலமைச்சரின் இல்லத்தில் முக்கிய சந்திப்பு நடைபெற்றது.
இச்சந்திப்புத் தொடர்பாக வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையில்,
“இன்றைய சந்திப்பானது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் அனைத்துக் கட்சித் தலைவர்களும் கலந்துகொள்ளும் சந்திப்பாக இருக்கவேண்டுமென நாங்கள் ஏற்கனவே தீர்மானித்திருந்தோம்.
அதன்படி நாம் அனைவரும் இதுவரை நேரமும் பேசி சில முடிவுகளுக்கு வந்துள்ளோம். அதற்கமைய, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் கட்சிகளின் தலைவர்களும் முதலமைச்சரும் தமிழ் மக்களின் நலன் கருதி சில தீர்மானங்களை எடுத்துள்ளோம்.
அதற்கமைய,
💥முதலாவதாக, முதலமைச்சர் தனக்கிருக்கும் சட்டரீதியான தற்துணிவு அதிகாரங்களைப் பிரயோகித்து அமைச்சரவை மாற்றத்தை ஏற்படுத்தவோ, திருத்தி அமைப்பதற்கோ அங்கத்துவக் கட்சிகள் சம்மதத்தைத் தெரிவித்துள்ளன.
💥இரண்டாவதாக, அமைச்சர்கள் மாற்றப்பட்டால் குறித்த அமைச்சர் எந்தவொரு குற்றச்சாட்டையும் இழைத்ததாக அர்த்தப்படாது.
💥மூன்றாவதாக, அமைச்சரவை நியமனங்களைப் பொறுத்தமட்டில், அங்கத்துவக் கட்சிகளின் கருத்துகளையும் கருத்திலெடுத்து அவை மேற்கொள்ளப்படவேண்டும் போன்ற தீர்மானங்கள் எடுக்கப்பட்டன.
வடமாகாண சபையின் ஆயுட்காலம் இன்னும் ஒருவருடத்தில் முடிவடையவுள்ளதால் கூடுமானவரை எங்களுக்குள்ளே பிரச்சனைகளைக் குறைத்து மக்களுக்கு நல்லதொரு சேவையை வழங்குவதற்கு முடிவெடுத்துள்ளோம்.
அத்துடன், இன்றைய கலந்துரையாடலுக்கு ஈபிஆர்எல்எவ் கட்சியின் தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரன் கலந்துகொள்ளமாட்டார் என ஊடகங்களில் செய்திகள் வெளியாகியிருந்ததாகவும், பின்னர் தான் அவருடன் கலந்துரையாடியதற்கமைய அவர் சந்திப்பில் கலந்துகொண்டதாகவும் முதலமைச்சர் தெரவித்துள்ளார்.
மேலும், அமைச்சரவையில் இனியும் மாற்றங்கள் நடைபெறுமா என ஊடகவியலாளர் ஒருவர் வினவியதற்கு பதிலளித்த முதலமைச்சர், அமைச்சரவையில் மாற்றங்கள் ஏற்படும் எனவும் தெரிவித்துள்ளார்.
அத்துடன், இன்றைய சந்திப்புப்போல் அனைத்துக் கட்சித் தலைவர்களும் இணைந்து விரைவில் அரசியலமைப்புத் தொடர்பாகவும் ஒரு சந்திப்பைச் செய்யவுள்ளோம் எனவும் தெரிவித்துள்ளார்.