க.பொ.த. உயர் தரப் பரீட்சை 8 ஆம் திகதி ஆரம்பம்!
க.பொ.த. உயர் தரப் பரீட்சையை நடத்துவதற்குத் தேவையான சகல நடவடிக்கைகளும் நிறைவடைந்துள்ளதாகவும், பரீட்சை ஏற்கனவே திட்டமிட்டபடி எதிர்வரும் 8 ஆம் திகதி ஆரம்பமாகும் எனவும் பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.
நாடு முழுவதும் 2230 பரீட்சை நிலையங்களில் பரீட்சை நடைபெறவுள்ளது. விசேட தேவையுள்ளவர்கள் 260 பேர் உட்பட இம்முறை பரீட்சைக்கு மூன்று லட்சத்து 15227 பேர் தோற்றுகின்றனர். இப்பரீட்சைக் கடமைகளில் 28 ஆயிரம் பேர் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் திணைக்களம் தெரிவித்துள்ளது.
பரீட்சை சரியாக காலை 8.30 மணிக்கு ஆரம்பிக்கப்படவுள்ளதனால், பரீட்சார்த்திகள் காலை 8.00 மணிக்கே பரீட்சை மண்டபத்துக்கு சமூகமளிக்க வேண்டும். பரீட்சை அனுமதி அட்டை, ஆள் அடையாள அட்டை என்பவற்றை பரீட்சார்த்திகள் கட்டாயம் எடுத்துவர வேண்டும்.
எந்தவொரு பரீட்சார்த்தியாவது ஸ்மார்ட் போன், கைத் தொலைபேசி மற்றும் தொழில்நுட்பக் கருவிகள் போன்றவற்றை பரீட்சை மண்டபத்துக்குள் எடுத்து வந்தால் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். அவ்வாறான வர்களுக்கு 5 வருட காலத்துக்கு பரீட்சைத் திணைக்களத்தினால் நடத்தப்படும் எந்தவொரு பரீட்சைக்கும் தோற்ற முடியாது எனவும் திணைக்களம் கடுமை யாக அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.