குலையுமா கூட்டு அரசாங்கம்?

வரும் செப்டெம்பர் மாதம், பிரதி அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள் 18 பேர் வரை, அரசாங்கத்தில் இருந்து வெளியேறி தனிக் குழுவாகச் செயற்படப் போவதாகக் கூறி வருகின்றனர். உடனடியாக உள்ளூராட்சித் தேர்தலை நடத்த வேண்டும், பிரதமர் பதவியில் இருந்து ரணில் விக்கிரமசிங்கவை நீக்க வேண்டும் ஆகிய இரண்டு கோரிக்கைகளை முன்னிறுத்தியே, இந்தக் குழுவினர், அரசாங்கத்தை விட்டு வெளியேறத் திட்டமிட்டிருக்கின்றனர்.
இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் ஐ.தே.க.வும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் இணைந்து உருவாக்கிய இந்தக் கூட்டு அரசாங்கத்துக்கு வந்திருக்கின்ற ஆகப் பிந்திய ஆபத்து இது. இதற்குப் பின்னணியில் மஹிந்த ராஜபக் ஷ தலைமையிலான கூட்டு எதிரணி தான் இருக்கிறது என்பது ஒன்றும் இரகசியமான விடயமல்ல.
கூட்டு எதிரணி தான், உள்ளூராட்சித் தேர்தலை உடனடியாக நடத்த வேண்டும் என்று ஒற்றைக்காலில் நிற்கிறது. அதற் குக் காரணமும் இருக்கிறது.
இப்போதைய நிலையில் மஹிந்த ராஜபக் ஷவும், கூட்டு எதிரணியும், ஏதோ ஒரு கலகக் குழுவினராகவே அடையாளப்படுத்தப்படுகின்றனர்.
இந்த நிலையை மாற்றி, தமக்கான ஓர் அரசியல் அங்கீகாரத்தையும் அடையாளத்தையும் பெற வேண்டுமானால், ஒரு தேர்தலில் தமது பலத்தை வெளிப்படுத்த வேண்டும் என்று எதிர்பார்த்திருக்கிறார் மஹிந்த ராஜபக் ஷ .
அவர் இன்னமும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை விட்டு அதிகாரபூர்வமாக வெளியேறியதாக அறிவிக்காமல் இருப்பதற்குக் காரணமே, அத்தகைய ஓர் அடையாளத்தைப் பெறுவதற்காகத் தான்.
அந்த அடையாளம் கிடைத்ததும் அவர் தனது புதிய அரசியல் கட்சியை பகிரங்கப்படுத்துவார். அதற்கான தருணத்தை ஏற்படுத்திக் கொள்வதற்காகவே, கூட்டு எதிரணி உள்ளூராட்சித் தேர்தலுக்கு வலியுறுத்தி வருகிறது.
மைத்திரிபால சிறிசேன தலைமையிலான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு கீழ்மட்டச் செல்வாக்கு இல்லை.
அதனால், தான் உள்ளூராட்சித் தேர்தலை எதிர்கொள்ளத் தயங்குகிறது.
இந்த நிலையில், மஹிந்த ராஜபக் ஷவின் நிகழ்ச்சி நிரலுக்குள் செயற்படுகின்ற அமைச்சர்கள் சிலரே, உள்ளூராட்சித் தேர்தலை நடத்த வேண்டும் என்ற நிபந்தனையை விதித்திருக்கின்றனர்.
அதுமாத்திரமன்றி, பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை பிரதமர் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்றும் இவர்கள் ஜனாதிபதியிடம் நிபந்தனை விதித்துள்ளதாக கூறப்படுகிறது.
இவர்களுடன் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நடத்திய கலந்துரையாடலின் போது, ரணில் விக்கிரமசிங்கவை நீக்கி விட்டு, மஹிந்த ராஜபக் ஷவை பிரதமராக நியமிக்க வேண்டும் என்று பிரதி அமைச்சர் அருந்திக பெர்னாண்டோ கூறியிருக்கிறார்.
அண்மையில் மஹிந்த ராஜபக் ஷ ஜப் பான் சென்றிருந்த போது, இவரும் தனியாகச் சென்று அவரைச் சந்தித்துப் பேச்சு நடத்தியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. மைத்திரிபால சிறிசேன அரசாங்கத்தில் அங்கம் வகிக்கின்ற ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த பலர் மஹிந்தவின் தீவிர விசுவாசிகள் என்பதில் சந்தேகமில்லை.
அவர்கள் அரசாங்கத்துக்குள் இருந்து தகவல்களை தெரிந்து கொள்வதற்காகவோ அல்லது சந்தர்ப்பத்துக்கேற்ப நடந்து கொள்ளும் விதத்திலோ தான், மைத்திரிபால சிறிசேனவின் அரசாங்கத் தில் அங்கம் வகிக்கின்றனர்.
இவர்கள் தான் இப்போது, அரசாங்கத்தில் இருந்து ஐ.தே.க.வை வெளியேற்றி விட்டு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அரசாங்கத்தை நிறுவ வேண்டும் என்று தொல்லை கொடுக்க ஆரம்பித்துள்ளனர்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கும் ஐ.தே.க. வுக்கும் இடையிலான கொள்கை முரண்பாடுகளால் தான் இவர்கள் இவ்வாறு நடந்து கொள்கிறார்கள் என்றில்லை.
அரசியலமைப்பு மாற்ற முயற்சிகளைத் தடுப்பதும், மஹிந்த ராஜபக் ஷவை மீண் டும் அதிகாரத்துக்கு கொண்டு வருவதும் தான், இவர்களின் அடிப்படை நோக்கமாக இருக்கிறது. அதனைத் தான் இவர்கள் செயற்படுத்தி வருகின்றனர்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் உள்ள அதிருப்தி அணியினரை சமாதானப்படுத் தும் வகையில் டிசம்பர் வரையில் பொறுத்திருக்குமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கோரியிருக்கிறார்.
சந்திரிகா குமாரதுங்கவும் கூட பேச்சுக்களை நடத்தி வருகிறார்.
ஆனாலும், அதிருப்தி அணியினர் எந்த முடிவையும் எடுத்ததாக கூறவில்லை. அவர்கள் இந்தப் பதற்ற நிலை கடைசி வரை தொடர வேண்டும் என்றே விரும்புவார்கள்.
ஏனென்றால், அரசாங்கத்துக்கு நெருக்கடி கொடுத்து எதையும் செய்யாமல் தடுப்பது தான் அவர்களின் முதல் இலக்கு.
இந்தக் குழப்பங்களால், அரசாங்கத்தின் பணிகள் முடக்கமடையும்.
அரசியலமைப்பு மாற்ற முயற்சிகளும் தாமதமடையும். இத னைத்தான் அவர்கள் எதிர்பார்க்கிறார்கள். அரசாங்கத்தின் மீது குற்றச்சாட்டுகளைச் சுமத்தி, அதன் இயலாமையை வெளிப்படுத்தி, பலவீனப்படுத்துவதிலேயே குறி யாக இருக்கிறார்கள்.
ஆனால், மஹிந்த ராஜபக் ஷவை பிரதம ராக நியமித்தால் கூட, சுதந்திரக் கட்சியி னரின் ஆதரவுடன் அவரால் அரசாங்கத் தை அமைக்க முடியாது. காரணம், பாராளுமன்றத்தில் அவர்களுக்கு 95 உறுப்பினர்கள் தான் உள்ளனர்.
225 பேர் கொண்ட பாராளுமன்றத்தில் அறுதிப் பெரும்பான்மைக்குத் தேவையான, 113 ஆசனங்களைப் பெறுவதற்கு, மேலும் 18 உறுப்பினர்களின் ஆதரவைப் பெற வேண்டும்.
இது ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியாலோ, அல்லது மஹிந்த ராஜபக் ஷவினாலோ அவ்வளவு இலகுவில் சாத்தியமான விடயமாக இருக்காது.
ஏனென்றால், மஹிந்த ராஜபக் ஷ பிரதமராக பொறுப்பேற்கும் அரசுக்கு, 16 ஆசனங்களைக் கொண்ட தமிழ்த் தேசி யக் கூட்டமைப்பு ஒருபோதும் ஆதரவளிக்காது.
அது போலவே, 6 ஆசனங்களைக் கொண்ட ஜே.வி.பி.யும் ஆதரவு தராது.
ஏனைய கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சியமைக்கும் தெரிவு ஒன்று இருந்தால், இந்த இரண்டு கட்சிகளினதும் ஆதரவை அவர்கள் பெற வேண்டும். அது சாத்தியமில்லை.
அவ்வாறாயின் இருப்பது ஒரே ஒரு தெரிவு தான்.
ஐ.தே.க.வுக்குள் பிளவுகளை எற்படுத்தி, 18 பாராளுமன்ற உறுப்பினர்களை தமது பக்கத்துக்கு இழுப்பது. மஹிந்த ராஜபக் ஷ இந்த உத்தியை முன்னர் அதிகாரத்தில் இருந்த போது ஒன்றுக்கு இரண்டு தடவைகள் கையாண்டிருந்தார்.
அதன் மூலமே அவர் பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையையும் தக்க வைத்துக் கொண்டார்.
அதுபோல இப்போது செய்வதற்கும் வாய்ப்புகள் அரிது, ஐ.தே.க.வுக்குள்ளேயும் அதிருப்தி அணியினர் இருந்தாலும், ஆட்சியில் உள்ள தமது கட்சி அரசாங்கத்தை கவிழ்ப்பதற்கு அவர்கள் துணை போவார்களா என்பது சந்தேகம்.
எனவே, தற்போதைய நிலையில், சுதந்திரக் கட்சி அரசாங்கத்தை அமைக்க வேண்டும் என்று ஜனாதிபதிக்கு அந்தக் கட்சி உறுப்பினர்கள் கொடுக்கின்ற அழுத்தம் போலியானதே. மைத்திரிபால சிறிசேனவை செயலற்ற நிலைக்குள் தள்ளுவதும், ரணில் விக்கிரமசிங்க அரசாங்கத்தை குழப்புவதற்காகவும் தான் இவ்வாறு நடந்து கொள்கின்றனர்.
அதேவேளை, சுதந்திரக் கட்சியின் அதிருப்தி அணியினர் மிரட்டுவது போன்று, செப்டெம்பரிலோ, டிசம்பரிலோ, அரசாங்கத்தை விட்டு வெளியேறினால் அடுத்து என்ன நடக்கும்? ரணில் விக்கிரமசிங்க அரசாங்கம் கவிழ்ந்து விடுமா? என்ற கேள்விகள் உள்ளன.
நிச்சயமாக அப்படியொரு சூழலில், ரணில் விக்கிரமசிங்க அரசாங்கம் கவிழ்வதற்கான வாய்ப்புகள் குறைவு. ஏனென்றால், ஐ.தே.க.வுக்கு, பாராளுமன்றத்தில் 106 ஆசனங்கள் இருக்கின்றன.
அறுதிப் பெரும்பான்மையை விட அவர்களுக்கு குறைவாக இருப்பது வெறும் 7 ஆசனங்கள் தான்.
சுதந்திரக் கட்சியின் அதிருப்தி அணியினர் அரசாங்கத்தை விட்டு வெளியேறும் போது, 18 அல்லது 20 பேர் தான் வெளியே செல்வார்கள். எனவே கூட்டு அரசாங்கத்துக்கு அது பாதிப்பை ஏற்படுத்தாது.
ஒருவேளை, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியைக் காப்பாற்றுவதற்காக, கூட்டு அரசாங்கத்தை விட்டு வெளியேற மைத்திரிபால சிறிசேன முடிவெடுத்தாலும் கூட, ரணில் விக்கிரமசிங்க அரசாங்கம் கவிழாது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வெளியில் இருந்து ஆதரவு கொடுக்க முடிவு செய்யக் கூடும். ஏனென்றால், தற்போதைய நிலையில் மஹிந்த ராஜபக் ஷ அதிகாரத்துக்கு வருவதை தடுப்பதற்கோ, இன்னொரு தேர்தலுக்கு முகம் கொடுப்பதை தவிர்ப்பதற்கோ தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வெளியில் இருந்து ஆதரவு கொடுக்கும் முடிவை எடுக்கலாம்.
எவ்வாறாயினும், கூட்டு அரசாங்கத்தை பிரிப்பதே மஹிந்தவின் திட்டமாக இருக்கிறது. அதிலிருந்து இந்தக் கூட்டைக் காப்பாற்றுவதே மைத்திரி,-ரணில்,- சந்திரிகாவின் முயற்சியாக உள்ளது.
மஹிந்த ராஜபக் ஷவைப் பொறுத்தவரையில், பிரதமர் பதவியைப் பிடிப்பது மாத்திரமே அவரது இப்போதைய திட்டம் அல்ல. அதற்கு அப்பால், 2020ஆம் ஆண்டு நடக்கப் போகும் ஜனாதிபதித் தேர்தலில் தான் நிறுத்தப் போகும், கோத்தாபய ராஜபக் ஷவோ அல்லது வேறொரு வேட்பாளரோ தான் வெற்றி பெற வேண்டும் என்பதும் கூட அவரது இலக்குத் தான்.
அதற்கு இப்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவைப் போட்டியிடாமல் தடுக்க வேண்டும்.
அவர் போட்டியிட்டால், தான் நிறுத்தும் வேட்பாளரின் வெற்றி கேள்விக்குறி யாகும் என்பது மஹிந்தவுக்கு நன்றாகவே தெரியும்.
எனவே தான், எப்படி யாவது இந்தக் கூட்டு அரசாங்கத்துக்கு ஆப்பு வைப்பதற்கு அவர் எத்த னிக்கிறார். இதனைக் கவனத்தில் கொண்டு தான், எப்படியாவது கூட்டை தக்கவைத்துக் கொள்ளும் போராட்டம் நடந்து கொண்டிருக்கிறது.