Breaking News

பேரறிவாளனை பரோலில் விடுவிக்க தமிழக அரசு உத்தரவு!

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 20 வயதில் கைது செய்யப்பட்டு வேலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள பேரறிவாளன் 46 வயதில் தற்போது பரோலில் வருகிறார்.

கடந்த 1991-ஆம் ஆண்டு ஸ்ரீபெரும்புதூரில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்திற்கு வந்த ராஜீவ் காந்தி குண்டுவெடிப்பில் படுகொலை செய்யப்பட்டார். இந்த கொலை வழக்கில் சாந்தன், முருகன், பேரறிவாளன், நளினி, ராபர்ட் பயாஸ், ஜெயகுமார், ரவிசந்திரன் ஆகிய 7 பேருக்கும் முதலில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டு பின்னர் கருணை அடிப்படையில் அது ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது.

இந்நிலையில் இவர்கள் 7 பேரும் தண்டனை காலம் முடிந்தும் 26 ஆண்டுகளாக சிறையிலேயே விடுவிக்கப்படாமல் உள்ளனர். அவர்களை விடுவிக்க தமிழக சட்டமன்றத்தில் ஜெயலலிதா தீர்மானம் நிறைவேற்றினார். இதற்கு மத்திய அரசு மத்திய அரசு பதிலளிக்காவிட்டால் தமிழக அரசே அவர்களை விடுதலை செய்யும் என்றும் ஜெயலலிதா தெரிவித்திருந்தார்.

ஆனால் காங்கிரஸ் கட்சி எதிர்ப்பு தெரிவித்ததால் அவர்கள் விடுதலை செய்யப்பட வில்லை. இந்நிலையில் பேரறிவாளனின் தந்தை குயில்தாசனுக்கு உடல்நல குறைப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் மகனை பரோலில் விடுவிக்க வேண்டும் என்று அவரது தாயார் அற்புதம்மாள் கோரிக்கை விடுத்தார். எனினும் அவருக்கு பரோல் வழங்கவில்லை.

இந்நிலையில் தற்போது பேரறிவாளனுக்கு ஒரு மாதத்துக்கு விடுப்பு பரோல் வழங்கி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. 20 வயதில் சிறைக்கு சென்ற பேரறிவாளன் 26 ஆண்டுகள் கழித்து 46 வயதில் வெளியே அதுவும் பரோலில் வந்திருக்கிறார்.