Breaking News

முள்ளிவாய்க்காலுக்குச் செல்வதற்கு தமிழிசைக்குத் தடை விதித்த பாஜக மேலிடம்

சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டிருந்த பாஜகவின் தமிழ்நாடு மாநில தலைவர் தமிழிசை சௌந்தரராஜன், இறுதிப்போர் நடந்த முள்ளிவாய்க்காலுக்குச் செல்வதற்குத் திட்டமிட்டிருந்த போதிலும், பாஜக மேலிடத்தின் உத்தரவினால், அந்தப் பயணத்தை கைவிட்டு அவசரமாக கொழும்பு திரும்பியுள்ளார்.


சிறிலங்காவுக்கு கடந்த புதன்கிழமை தனிப்பட்ட பயணம் ஒன்றை மேற்கொண்டிருந்த தமிழிசை சௌந்தர்ராஜன், மறுநாள் யாழ்ப்பாணம் சென்று வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனைத் தனியாகவும், வடக்கு மாகாணசபையின் அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம் மற்றும் மாகாணசபை உறுப்பினர்களைத் தனியாகவும் சந்தித்திருந்தார்.

அத்துடன் நல்லை ஆதீன குருமுதல்வரையும் வேறு சில தரப்பினரையும் அவர் சந்தித்து கலந்துரையாடினார்.

யாழ்ப்பாணத்தில்  கடந்த வியாழக்கிழமை செய்தியாளர்களைச் சந்தித்த தமிழிசை சௌந்தர்ராஜன், மறுநாளான வெள்ளிக்கிழமை இறுதிப்போர் நடந்த முள்ளிவாய்க்காலுக்குச் சென்று அங்குள்ள மக்களின் பிரச்சினைகள் குறித்து கேட்டறியவுள்ளதாக கூறியிருந்தார்.

அத்துடன் தனது பயணம் தனிப்பட்ட ரீதியானது என்றும் குறிப்பிட்டிருந்தார்.

இந்த நிலையில், நேற்று முன்தினம் அவர் முள்ளிவாய்க்காலுக்கான பயணத்தை திடீரென ரத்துச் செய்து விட்டு அவசரமாக கொழும்பு திரும்பினார்.

பாஜக மேலிடத்தின் அவசர உத்தரவின்படியே தமிழிசை சௌந்தர்ராஜன் முள்ளிவாய்க்கால் பயணத்தை இடைநிறுத்தியதாக தெரிவிக்கப்படுகிறது.

நேற்றுமுன்தினம் கொழும்பு திரும்பும் வழியில், பல மாதங்களாக தொடர் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் கிளிநொச்சி கந்தசுவாமி ஆலயம் முன்பாக, தமிழிசை சௌந்தர்ராஜன் வாகனத்தில் இருந்து இறங்கினார்.

போராட்டப் பந்தலுக்குச் சென்று அவர்களைச் சந்திக்காமல் வீதியில் நின்றே அவர்களைப் பார்வையிட்டு படம் பிடித்துக் கொண்டார்.

அப்போது, காணாமல் போனவர்களின் உறவுகள் அவரிடம் மனு ஒன்றை கையளித்தனர்.

அப்போது, போராட்டத்தில் ஈடுபட்டுள்ள, பாதிக்கப்பட்ட மக்களைச் சந்திக்க வேண்டாம் என்று மேலிடத்தில் இருந்து உத்தரவு வந்துள்ளதாக, தமிழிசை சௌந்தர்ராஜன் கூறிவிட்டுச் சென்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.