‘தமிழ் மக்களுக்கும் அதிகாரம் அவசியம் தேவை’
“இன்று தமிழ் மக்கள் பல்வேறு கஷ்டங்களை அனுபவித்து வருகின்றனர். அவர்களுக்கான அதிகாரத்தை வழங்குவது காலத்தின் தேவையாக உள்ளது. அதற்காக அரசியலமைப்பில் திருத்தத்தை கொண்டு வரவேண்டியது காலத்தின் தேவையாகும்” என, அரசாங்கம் தெரிவித்துள்ளது.
மேலும், தனது ஆட்சியையும் அதிகாரத்தையும் தக்கவைப்பதற்காக கடந்த ஆட்சிக் காலங்களில் மனிதப் படுகொலைகள் இடம்பெற்றன.
இந்தப்பாவம் அனைத்தும், அன்றைய ஆட்சியாளர்களையும் ஊடகவியலாளர்களையுமே சேரும் எனவும் அரசாங்கம் தெரிவித்துள்ளது.
அரசாங்கத் தகவல் திணைக்களத்தில், நேற்று (05) நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பில், புதிய அரசியலமைப்பை மகாநாயக்க தேரர்கள் நிராகரிப்பது குறித்து வினவப்பட்டபோதே இவ்வாறு தெரிவிக்கப்பட்டது.
இது குறித்து அமைச்சரவை இணைப்பேச்சாளர் அமைச்சர் ராஜித சேனாரத்ன கருத்துத் தெரிவிக்கையில்,
“இது குறித்து, 64 சதவீதமான மக்கள் எமக்கு ஆதரவு உள்ளது. அந்த மக்கள் விரும்புத்துக்கமையவே புதிய அரசியலமைப்போ அரசியலமைப்பில் திருத்தமோ கொண்டுவரப்படும். இந்த மக்கள் தொகுதியில் சாதாரண மக்களும் மதபோதகர்களும் மதத்தலைவர்களும் உள்ளடங்குவர். இதங்கமைய, 64 இலட்சம் மக்கள் எமக்களித்த மக்கள் ஆணைக்கமைவாகவே அதற்கான நடவடிக்கை முன்னெடுக்கப்படுகின்றது.
“குறை கூறுபவர்கள், முதலில் என்ன அரசியலமைப்பு என்பதைப் பார்க்க வேண்டும். உலகிலுள்ள அனைத்து அரசியலமைப்பிலும் மாற்றம் கொண்டு வரப்படும். அவ்வாறு மாற்றம் கொண்டுவரப்படும்போது, முதலில் அது குறித்து கலந்துரையாடல்கள் முன்னெடுக்கப்படும். அது நன்மை பயக்கும் என்றால் தக்கவைத்துக்கொள்ளலாம். தீமை என்றால் தூக்கி வீசிவிடலாம். அதற்காகதான் நாடாளுமன்றம் ஸ்தாபிக்கப்பட்டுள்ளது.
“நாடாளுமன்றத்தில் 3இல் 2 பெரும்பான்மை வாக்குப்பலம் பெற்று அதன்பின்னர் சர்வஜன வாக்கெடுப்புக்கு விடப்பட்டதன் பின்னரே இந்த அரசியலமைப்பு திருத்தம் கொண்டுவரப்படும். நீங்களும் உங்கள் கருத்துகளை தெரிவிக்க முடியும்.
“மேலும், எதிர்க்கட்சி தலைவர் ஆர்.சம்பந்தன், இந்த விடயத்தில் பெருந்தன்மையுடனேயே நடக்கின்றார். பெரும்பான்மை சிங்களமக்கள் ஏற்றுக்கொள்ளாத தீர்வை அவர் விரும்பவில்லை. பெரும்பான்மை சிங்கள மக்களின் விரும்பத்துடனான அரசியல் தீர்வையே அவர் விரும்புகின்றார். அவரது ஜனாநாயகச் சிறப்பம்சத்தை நாம் கவனத்தில் கொள்ளவேண்டும்” என்றார்.
இது குறித்து, அமைச்சர் தயாசிறி ஜயசேகர கருத்துத் தெரிவிக்கையில்,
“இந்த, புதிய அரசியல் திருத்தச்சட்டமூலம் குறித்து இறுதி முடிவொன்றை எடுப்பதற்கான கலந்துரையாடல்களே முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும். பல்வேறு கட்சி உறுப்பினர்களிடையே மாற்றுக்கருத்துகளையுடைய யோசனைகள் இருக்கின்றன.
“இவ்வாறான யோசனைகளை விகாரைகளிலும் வேறு இடங்களிலும் பிரசாரம் செய்வதால்தான் பிரச்சினைகள் கிளம்பிவிடுகின்றன. இன்று தமிழ் மக்கள் பல்வேறு கஷ்டங்களை அனுபவித்து வருகின்றனர். அவர்களுக்கான அதிகாரத்தை வழங்குவது காலத்தின் தேவையா உள்ளது. அதேபோல் முஸ்லிம் மக்களுக்கும் சிங்கள மக்களுக்கும் இவ்வாறான பிரச்சினைகள் உள்ளன. கிழக்கு மாகாண சிங்கள மக்களின் பிரச்சினைகள் குறித்து யாரும் பேசுவதில்லை. எனவே, அனைவருக்கும் சமமான முறையில் அதிகாரத்தை பகிர்ந்தளிப்பது தேவையாகவுள்ளது.
“நாடாளுமன்றத்தில் விவாதத்துக்கு எடுத்துக்கொண்டு முடிவொன்றை எடுக்கும் அளவுக்கு எவ்வித தீர்வும் எட்டப்படவில்லை. அனைவரிடையேயும் ஒருமித்த முடிவு இருந்தால் மாத்திரமே முடிவொன்றை எடுக்க முடியும். அதைவிடுத்து, செயற்குழுவில் எல்லோரும் ஆமோதித்துவிட்டு. ஒரு சிலர் வௌியே வந்து எதிர்ப்பு கருத்துகளைத் தெரிவிக்கின்றனர்.
“முதலில் அரசமைப்புப் பேரவையில் முன்னெடுக்கப்படும் பேச்சுவார்த்தைகளை வௌியே வந்து பேசுவதாலேயே பிரச்சினை ஏற்படுகின்றது. குறிப்பாக முடிவொன்றை எடுக்காத விடயம் தொடர்பில் பல்வேறு விதமாக பேசுவது பிரச்சினையை பூதாகரமாக்கிவிடும். செயற்குழுவில் பேசும் விடயங்களை வௌியே வந்து பேசுவது மாபெரும் தவறான செயலாகும்.
“மேலும், கட்சி என்ற ரீதியில் அனைவரிடமும் மாற்று கருத்துகள் இருக்கலாம் ஆனால், அரசாங்கம் என்ற ரீதியில் அனைவரிடமும் அரசமைப்பை வலிமைப்படுத்தி நாட்டில் உள்ள பிரச்சினைகளைத் தீர்க்க வேண்டும் என்பதே ஒரே கொள்கையாக உள்ளது.
“எனவே, புதிய அரசியலமைப்பு திருத்த சட்டமூலத்தை நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்ததன் பின்னர் உங்கள் விளையாட்டுகளைக் காட்டுங்கள், அதற்கு முகங்கொடுக்க தயாராகவே உள்ளோம்” என்றார்.