விக்கியின் கோரிக்கை பற்றி அதிகம் கவலைப்படக் கூடாது – இராணுவத் தளபதி
வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனின் கோரிக்கை தொடர்பான தேவையின்றிக் கவலைப்படக் கூடாது என்று சிறிலங்காவின் புதிய இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் மகேஸ் சேனநாயக்க தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று நடத்திய செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.
வடக்கில் இருந்து சிறிலங்கா இராணுவத்தினர் வெளியேற வேண்டும் என்று வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகிறாரே என்று, செய்தியாளர் ஒருவர், கேள்வி எழுப்பியிருந்தார்.
அதற்குப் பதிலளித்த சிறிலங்கா இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் மகேஸ் சேனநாயக்க,
“வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் எனது நல்ல நண்பர்.
இதுபோன்ற அறிக்கைகள் தொடர்பாக தேவையின்றிக் கவலைப்படக் கூடாது.
தேவைகளின் அடிப்படையில் தான், படையினரை நிறுத்தும் முடிவுகள் எடுக்கப்படுகின்றன. அரசியல் நோக்கில், ஆயுதப்படைகள் நிறுத்தப்படுவதில்லை.
போரின் போது, இராணுவத்தினர் நிலங்களைக் கைப்பற்றினர். ஆனால் போர் நடவடிக்கை முடிந்து விட்டது. எனவே, குறிப்பிட்ட அவதானிப்புக் காலத்துக்குப் பின்னர் படையினர் நிலங்களை மீளவும் உரிமையாளர்களிடம் ஒப்படைத்து வருகின்றனர்.
அத்தியாவசியமான முகாம்கள் தொடர்ந்து பேணப்படும். ஏனைய பகுதிகள் பொதுமக்களிடம் ஒப்படைக்கப்படும். இந்த முடிவுகளால் பாதுகாப்பு அச்சுறுத்தல் ஏதும் இல்லை.
சரியான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு, இராணுவத்தினர் வசமுள்ள காணிகள் விடுவிக்கப்படும்.
போருக்குப் பிந்திய நல்லிணக்கச் செயற்பாடுகளை வலுப்படுத்துவதற்கு இராணுவம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளது. அதற்கு நாம் எப்போதும் தயாராகவே இருக்கிறோம்.” என்று குறிப்பிட்டார்.