கிழக்கில் தமிழ் முதலமைச்சரை உருவாக்க எந்தவொரு தியாகத்தையும் செய்யத் தயார்: கருணா
கிழக்கில் தமிழ் முதலமைச்சர் ஒருவரை உருவாக்க எந்தவொரு விட்டுக்கொடுப்பையும் செய்வதற்குத் தயாராக இருப்பதாக கருணா என அழைக்கப்படும் முன்னாள் பிரதி அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்துள்ளார்.
கிழக்கு மாகாண சபையின் ஆயுட்காலம் எதிர்வரும் செப்டெம்பர் 25ஆம் திகதியுடன் நிறைவுக்கு வருகின்றது. அதன்பின்னர் மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்கு அரசு உத்தேசித்துள்ளது. இதற்கான அறிவிப்பு ஒக்டோபர் முதல் வாரத்தில் விடுக்கப்படவுள்ளது.
இந்த நிலையில், ஆட்சி மாற்றத்தின் பின்னர் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியிலிருந்து வெளியேறி புதிய கட்சி ஒன்றை ஆரம்பித்துள்ள கருணா கிழக்கு மாகாண சபைத் தேர்தலை இலக்கு வைத்து காய்நகர்த்தல்களை முன்னெடுத்து வருகின்றார்.
தேர்தல் ஏற்பாடுகள் பற்றி ஊடகம் ஒன்றிற்கு வழங்கிய பேட்டியிலேயே அவர் மேற்படி தகவலை வெளியிட்டுள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில்,
”கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் எமது கட்சி நிச்சயம் களமிறங்கும். எனினும், அதற்கப்பால் எமக்கு தமிழ் முதலமைச்சர் என்ற எண்ணம் கிழக்கிலும் நிறைவேற வேண்டும். சகல தமிழ்க் கட்சிகளும் இணைந்து போட்டியிட்டால் இது நிச்சயம் சாத்தியமாகும்.
ஆகவே, தமிழ் முதலமைச்சர் ஒருவரைப் பெறுவதற்காக எந்தவொரு விட்டுக்கொடுப்பையும் செய்வதற்கு எமது தரப்பு தயாராகவே இருக்கின்றது. இது விடயம் சம்பந்தமாக சகல தமிழ்க் கட்சிகளுடனும் பேச்சு நடத்தப்படும்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் ஐயா, இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா அண்ணன் ஆகியோரை விரைவில் சந்திக்க உத்தேசித்துள்ளோம். அதன் பின்னர் ஏனைய தரப்புகளுடனும் பேச்சு நடத்தப்படும்” எனவும் கருணா கூறியுள்ளார்.