பருத்தித்துறை இளைஞன் கொலை: இரு பொலிஸ் அதிகாரிகள் கைது
யாழ். பருத்தித்துறையில் இளைஞன் ஒருவர் மீது நடத்திய துப்பாக்கிச்சூட்டு சம்பவம் தொடர்பில், இரு பொலிஸ் அதிகாரிகள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
நேற்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை இடம்பெற்ற மேற்படி துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் 24 வயதுடைய இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இந்நிலையில், சம்பவத்தின் போது கடமையில் இருந்த பொலிஸ் அதிகாரிகள் இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளதோடு, மேலதிக விசாரணைக்காக கொழும்பிலிருந்து பருத்தித்துறைக்கு விசேட பொலிஸ் குழுவொன்று சென்றுள்ளது.
சட்டவிரோதமாக மணல் ஏற்றிச் சென்ற லொறியொன்று பொலிஸாரின் சமிக்ஞையை மீறிச் சென்ற காரணத்தினாலேயே துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
எனினும் குறித்த இளைஞனுக்கும் மணல் கடத்தலுக்கும் எவ்வித தொடர்பும் இல்லையென்றும், ஆலயத்திற்குச் செல்வதாகவே அவர் கூறிச்சென்றதாகவும் தெரிவிக்கும் உறவினர்கள், கடந்த 10 தினங்களுக்கு முன்னரே அவர் வெளிநாட்டில் இருந்து வந்ததாகவும் குறிப்பிட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பாக பிரதேசத்தில் பதற்ற சூழல் நிலவுவதோடு, ஆத்திரமடைந்த மக்கள் துன்னாலை பகுதியிலுள்ள பொலிஸ் காவலரண் மற்றும் நெல்லியடியிலுள்ள பொலிஸ் அதிகாரி ஒருவரின் வீட்டை அடித்து நொருக்கியுள்ளனர்.
இந்நிலையில், குறித்த பகுதிகளில் பெருமளவு பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.