Breaking News

மயிலிட்டி மீன்பிடித் துறைமுகம், 54 ஏக்கர் காணிகளை நாளை விடுவிக்கிறது இராணுவம்



வலிகாமம் வடக்கில் உள்ள மயிலிட்டி மீன்பிடித் துறைமுகம் மற்றும் அதனை அண்டியுள்ள பகுதிகளில் உள்ள 54 ஏக்கர் காணிகளை பொதுமக்களிடம் மீள ஒப்படைக்க முடிவு செய்திருப்பதாக சிறிலங்கா இராணுவம் அறிவித்துள்ளது.

நாளை நடைபெறவுள்ள நிகழ்வில், மயிலிட்டி மீன்பிடித் துறைமுகம் மற்றும் 54 ஏக்கர் காணிகள், பொதுமக்களிடம் ஒப்படைப்பதற்காக, யாழ். மாவட்ட அரசாங்க அதிபரிடம், யாழ். படைகளின் தலைமையகத்தினால் கையளிக்கப்படும்.

மயிலிட்டி- ஊறணிப் பிரதேசத்தில் இதேபோன்று 35 ஏக்கர் காணிகளை பொதுமக்களிடம் கடந்த ஏப்ரல் 7ஆம் நாள் கையளித்திருப்பதாகவும், சிறிலங்கா இராணுவத் தலைமையகம் தெரிவித்துள்ளது.

1990ஆம் ஆண்டு ஜூன் 15ஆம் நாள் பலாலியில் போர் வெடித்ததை அடுத்து, மயிலிட்டிப் பகுதியில் இருந்த மக்கள் இடம்பெயர்ந்திருந்தனர்.

27 ஆண்டுகளுக்குப் பின்னர் மயிலிட்டிப் பகுதி மக்கள் சொந்த இடங்களைத் திரும்பிப் பார்க்கும் வாய்ப்புக் கிட்டவுள்ளது.