போர்க்குற்ற விசாரணையை எதிர்கொள்ளத் தயார் – லெப். ஜெனரல் மகேஸ் சேனநாயக்க
சிறிலங்கா இராணுவத்தினர் எந்தவொரு போர்க் குற்றங்களிலும் ஈடுபடவில்லை, ஆனாலும், எம்மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் தொடர்பாக, முன்னெடுக்கப்படும் எந்தவொரு விசாரணைக்கும் முழுமையான ஒத்துழைப்பை வழங்க தயாராக இருப்பதாக சிறிலங்காவின் புதிய இராணுவத் தளபதி லெப். ஜெனரல் மகேஸ் சேனநாயக்க தெரிவித்தார்.
சிறிலங்காவின் 22வது இராணுவத் தளபதியாக நியமிக்கப்பட்ட லெப். ஜெனரல் மகேஸ் சேனநாயக்க நேற்று, இராணுவ தலைமையகத்தில் தனது கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார். அதன் பின்னர் நடத்திய ஊடகவியலாளர் மாநாட்டிலேயே இவ்வாறு கூறினார்.
‘இராணுவத்தினர் நாட்டின் பொது தண்டனைக் கோவை சட்டம் மற்றும் இராணுவச் சட்டம் ஆகிய இரண்டு சட்டவிதிமுறைகளுக்கும் உட்பட்டவர்கள் எனவே, இராணுவத்தினர் தவறுகள் செய்வதற்கு மிகவும் குறைவான சந்தர்ப்பங்களே உள்ளன.
இராணுவத்தின் பலம் ஒழுக்கமாகும். ஒழுக்கமும் அர்ப்பணிப்பும் இல்லாவிடின் இராணுவம் என்ற பேச்சுக்கு இடமில்லை.
சிறிலங்கா இராணுவம் தொடர்பாக, குற்றச்சாட்டுக்களை முன்வைப்பவர்கள் அந்த குற்றங்களை நேரடியாக கண்டவர்களா? களத்தில் இருந்தவர்களா? அல்லது யாராவது சொன்னதை வைத்து கூறுகின்றார்களா என்ற விடயத்தில் எனக்கு சந்தேகம் உள்ளது.
போரில் ஈடுபட்ட அதிகாரிகள் மற்றும் படையினரிடமும், அந்தப் பகுதிகள் பற்றிய அறிவைக் கொண்டுள்ள நிபுணர்களிடமும், சட்ட நிபுணர்களிடமும் இருந்து, குற்றச்சாட்டுகள் தொடர்பான மேலதிக தகவல்களைப் பெற முடியும்.
இது தொடர்பில் சரியாக ஆராய்ந்து தீர்மானம் எடுக்கப்பட வேண்டும்.
என்னை பொறுத்தவரை, இராணுவ அதிகாரிகளோ ஏனைய வீரர்களோ களமுனையில் குற்றச் செயல்களில் ஈடுபடவில்லை. எனினும் எமக்கு எதிராக குற்றச்சாட்டுக்கள் உள்ளன.
இந்தப் போர்க்குற்றச்சாட்டுகள் தொடர்பாக எந்த உள்ளக விசாரணையும் இடம்பெறவில்லை. குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக விசாரணைகள் நடைபெறும் போது,அந்த விசாரணைக்கு முழுமையான ஒத்துழைப்பு வழங்கப்படும்.
படையினர் எவரெனும் குற்றங்களில் ஈடுபட்டது உறுதிப்படுத்தப்பட்டால், அவர்கள் மீது உரிய சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
அதேவேளை, போர்க்குற்றச்சாட்டுகளின் உண்மைத் தன்மையை விளக்குவதற்கும் நடவடிக்கை எடுக்கப்படும். போர்க்குற்றச்சாட்டு என்ற சொல்லை நான் ஏற்றுக் கொள்ளப் போவதில்லை.
இரண்டு இலட்சம் பேரைக் கொண்ட சிறிலங்கா இராணுவத்துக்குள் ஒரு சிலர் சில சம்பவங்களில் ஈடுபடலாம். இதனை முற்றாக தவிர்க்க முடியாது.
அதனை வைத்துக் கொண்டு ஒட்டு மொத்த இராணுவமும் தவறிழைத்தவர்கள் எனக் கூற முடியாது.
போர்க்குற்றச்சாட்டுக்குப் பதிலளிப்பதில், சிறிலங்கா இராணுவத்தின் பக்கத்தில் உள்ள தவறுகள் தொடர்பாக நிச்சயமாக விசாரிக்கப்படும்.
40 ஆயிரம் பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டதாக ஜெனிவா தீர்மானத்தில் கூறப்பட்டுள்ள பொய்யான குற்றச்சாட்டுகள் தொடர்பாக, இராணுவத் தரப்பினால் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இது தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்படும்.
ஆதாரமில்லாத குற்றச்சாட்டுகளின் அடிப்படையில், அனைத்துலக சமூகம் தண்டனை வழங்கும் பாணியில் செயற்படுகிறது.
மேஜர் ஜெனரல் சாஜி கல்லகேக்கு, 2009 மே 7ஆம் நாள் தொடக்கம், 2009 ஜூலை 20ஆம் நாள் வரை 59 ஆவது டிவிசனின் தளபதியாக இருந்தார் என்பதற்காக, நுழைவிசைவு மறுக்கப்பட்டமை அதற்கு ஒரு உதாரணமாகும். ” என்றார்.