Breaking News

மணல்காடு துப்பாக்கிச் சூடு – கொழும்பில் இருந்து சிறப்பு விசாரணைக் குழு யாழ். விரைந்தது



மணல்காடு பகுதியில் சிறிலங்கா காவல்துறையினரின் துப்பாக்கிச் சூட்டில் இளைஞன் ஒருவர் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக விசாரிக்க, சிறப்பு விசாரணைப் பிரிவு ஒன்றை, சிறிலங்கா காவல்துறை மா அதிபர் யாழ்ப்பாணத்துக்கு அனுப்பி வைத்துள்ளார்.

மணல்காடு பகுதியில் நேற்று பிற்பகல் சட்டவிரோதமாக மணல் ஏற்றி வந்ததாக கூறப்படும் கன்ரர் வாகனம் ஒன்றின் மீது சிறிலங்கா காவல்துறையினர் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலியானார். இதையடுத்து, வடமராட்சிப் பகுதியில் பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளது.

,இந்தச் சம்பவம் குறித்து விசாரணைகளை மேற்கொள்ள, கொழும்பில் உள்ள காவல்துறை தலைமையகத்தை சேர்ந்த உதவி கண்காணிப்பாளர் தலைமையிலான சிறப்பு விசாரணைப் பிரிவு ஒன்று பருத்தித்துறைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

சிறிலங்கா காவல்துறை மா அதிபர் பூஜித் ஜெயசுந்தரவின் உத்தரவின் பேரில் இந்தக் குழுவினர் யாழ்ப்பாணம் விரைந்துள்ளதாக, சிறிலங்கா காவல்துறை பேச்சாளர் தெரிவித்தார்.

இன்று காலை சம்பவ இடத்துக்குச் செல்லும் சிறப்பு விசாரணைப் பிரிவு, பக்கசார்பற்ற விசாரணையை மேற்கொள்ளும் என்றும் அவர் கூறினார்.

அதேவேளை, துப்பாக்கிச் சூட்டை அடுத்து. ஏற்பட்டிருந்த பதற்றமான நிலை கட்டுப்பாட்டுக்குள் வந்திருப்பதாகவும், அங்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாகவும், சிறிலங்கா காவல்துறை பேச்சாளர் ருவான் குணசேகர தெரிவித்துள்ளார்.