காணாமல் ஆக்கப்படுவதில் இருந்து பாதுகாக்கும் சட்டமூலம் இன்று நாடாளுமன்றம் வராது?
பலவந்தமாக ஆட்களைக் காணாமல் போகச் செய்வதில் இருந்து பாதுகாக்கும் அனைத்துலக பிரகடன சட்டமூலம் இன்று சிறிலங்கா நாடாளுமன்றத்தில் விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்படும் வாய்ப்பு இல்லை என்று நாடாளுமன்ற உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
பலவந்தமாக ஆட்களைக் காணாமல் போகச் செய்வதில் இருந்து பாதுகாக்கும் அனைத்துலக பிரகடனத்தில் சிறிலங்கா 2015 ஆம் ஆண்டு டிசெம்பர் 10ஆம் நாள் கையெழுத்திட்டிருந்தது.
இது தொடர்பான சட்டமூலம் வர்த்தமானியில் வெளியிடப்பட்டு, இன்று நாடாளுமன்றத்தில் விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளத் தீர்மானிக்கப்பட்டிருந்தது.
எனினும், இந்த சட்டமூலத்தின் சில பிரிவுகள் தொடர்பாக எழுப்பப்பட்டுள்ள கரிசனைகளைக் கருத்தில் கொண்டே, இன்று இது நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படாது என்று உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
அதேவேளை, இந்த சட்டமூலம் ஆபத்தானது என்று முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ச சில நாட்களுக்கு முன்னர் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார்.
அத்துடன், கண்டியில் நேற்று நடந்த மகாநாயக்கர்கள் மற்றும் சங்க சபாக்களின் கூட்டத்திலும், இந்த சட்டமூலத்தை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிப்பதை தாமதப்படுத்துமாறும் கோரிக்கை விடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.