யாழ்ப்பாணத்தில் ஐயாயிரம் ஏக்கருக்கும் மேற்பட்ட தனியார் காணிகள் படையினர் வசம்
யாழ் குடாநாட்டில் இன்னமும் ஐயாயிரம் ஏக்கருக்கும் மேற்பட்ட தனியார் காணிகள் ஸ்ரீலங்கா இராணுவம் உட்பட அரச படையினர் வசம் இருப்பதாக யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் நாகலிங்கம் வேதநாயகம் தெரிவித்துள்ளார்.
மயிலிட்டி மீன்பிடித் துறைமுக விடுவிப்பை அடுத்து நேற்றைய தினம் யாழ். மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற படை அதிகாரிகளுடனான தனியார் காணி விடுவிப்பு தொடர்பான கலந்துரையாடலின் பின்னரே மாவட்ட அரசாங்க அதிபர் இந்தத் தகவலைத் தெரிவித்தார்.
யாழ் குடாநாட்டில் தொடர்ந்தும் ஸ்ரீலங்கா இராணுவம் உட்பட அரச படையினர் வசம் இருக்கும் தனியார் காணிகளை விடுவிப்பது தொடர்பான கலந்துரையாடல் நேற்றைய தினம் மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது.
யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் நாகலிங்கம் வேதநாயகம் தலைமையில் நடைபெற்ற இந்தக் கலந்துரையாடலில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா, எம்.ஏ.சுமந்திரன் உட்பட மக்கள் பிரதிநிதிகள், அரச அதிகாரிகள் மற்றும் யாழ் குடாநாட்டின் முப்படைகளின் கட்டளைத் தளபதி உட்பட படை அதிகாரிகள் ஆகியோர் கலந்துகொண்டனர்.
இதேவேளை தனியார் காணிகளை விடுவிப்பது தொடர்பான படை அதிகாரிகளுடனான கலந்துரையாடலை மாதாந்தம் நடத்துவதற்கு இதன்போது இணக்கம் காணப்பட்டுள்ளதாக தெரிவித்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், அரச காணிகள் என தெரிவித்து படையினரால் தனியார் காணிகள் கையகப்படுத்தி வைக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.