Breaking News

முன்னாள் போராளிகளை நான் கொலை செய்யவில்லை;மஹிந்த அதிரடி அறிவிப்பு



ஸ்ரீலங்கா நாடாளுமன்றத்தில் நாளைய தினம் சமர்பிக்கப்படவுள்ள காணாமல் போனோர் தொடர்பில் பொறுப்புக்கூறும் சர்வதேச சாசன சட்டமூலத்தை ஒன்றிணைந்த எதிர்கட்சி வலுவாக எதிர்ப்பு தெரிவிக்கும் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

ஜெனீவாவுக்கு சென்று நாட்டைக் காட்டிக்கொடுத்த நல்லாட்சி அரசாங்கம், தற்போது ஸ்ரீலங்கா இராணுவத்தினரை சர்வதேசத்தின்முன் நிறுத்தி தண்டனை பெற்றுக் கொடுக்கவே இந்த சட்டமூலத்தை அரசாங்கம் கொண்டுவருவதாகவும் குறிப்பிட்டார்.

நல்லாட்சி அரசாங்கத்தை கவிழ்த்து ஆட்சியைக் கைப்பற்றும் நோக்கில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் தலைமையிலான ஒன்றிணைந்த எதிர்கட்சி ஏற்பாடு செய்த 4ஆவது மக்கள் கூட்டம் நேற்றைய தினம் திருகோணமலையில் நடைபெற்றது.

இதற்கு முன்னர் நுகேகொடை, மாத்தறை, இரத்தினபுரி ஆகிய பகுதிகளில் நடத்தப்பட்ட இந்தக் கூட்டம் முதன்முறையாக கிழக்கில் நடத்தப்பட்டுள்ளது.

இதில் கலந்துகொண்டு உரையாற்றிய முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச போர்க் குற்ற விசாரணைக்கு வெளிநாட்டில் வழக்கு தொடரப்பட்டால் அந்த விசாரணைக்கு சம்பந்தப்பட்டவரை நாடுகடத்தும் அதிகாரம் இந்த சட்டமூலத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளதாகக் கூறினார்.

“ஜெனீவாவுக்குச் சென்று இந்த நாட்டையும், இராணுவத்தினரையும் காட்டிக்கொடுத்தார்கள். இந்த நாட்டில் யுத்தம் இடம்பெற்றதை அறிவோம். பயங்கரவாதிகளுக்கு எதிராகவே யுத்தம் இடம்பெற்றது. அதேபோன்று யுத்தம் முடிந்த பின்னர் நல்லிணக்கத்தை ஏற்படுத்த 12500 முன்னாள் போராளிகளை புனர்வாழ்வு அளித்து விடுதலை செய்தோம். அவர்களை வைத்துக் கொண்டு கொலை செய்யவில்லை. ஆனால் இந்த அரசாங்கம் வேறொரு விம்பத்தை உலகத்திற்கு காட்ட முனைகிறது. வெளிநாட்டு நீதிபதிகளை கொண்டுவருகிறார்கள். வேறொரு நாட்டில் எமது இராணுவத்தினருக்கு எதிராக வழக்கு தொடர்ந்தால் அதற்கு இவர்களை அழைத்துக் கொண்டு செல்லும் புதிய சட்டமொன்றை கொண்டுவர முயற்சிக்கின்றனர். இதுவே பயங்கரமாகும். எமக்கெதிராக வெளிநாட்டில் வழக்கு தொடர்ந்தால் எம்மை நாடுகடத்தி வழக்கிற்கு முன்னிலைப்படுத்தவே அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருகிறது. நாளைய தினம் இந்த சட்டத்தை நாடாளுமன்றத்திற்கு சமர்பிக்கவுள்ளனர். எனவே இந்தச் சட்டமூலத்தை ஒன்றிணைந்த எதிர்க்கட்சி வலுவாக எதிர்க்கும் என்று தெரிவித்தார்.

இதேவேள மைத்திரி – ரணில் தலைமையிலான நல்லாட்சி அரசாங்கமே இன,மதங்களிடையே முறுகலை ஏற்படுத்தி வருவதாகவும், அதன் பின்னணியில் தான் செயற்படவில் எனவும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச குற்றம் சாட்டினார்.

“நல்லிணக்கம் எனக்கூறி இனவாதத்தை தூண்டி மதங்களுக்கு இடையே முறுகலை ஏற்படுத்துவது குறித்து நல்லாட்சி அரசாங்கவே பொறுப்புகூற வேண்டும். அரசாங்கத்தின் செல்லப் பிள்ளைகளே இதனை செய்கின்றன. ஆனால் எம்மீதே அதனை சுமத்த பார்க்கின்றனர். அதன் பின்னால் செயற்படுவது யார் என்பதுகுறித்த உண்மை நிலவரம் இன்று புலப்படுகிறது. எனவே மக்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். விவசாயிகளுக்கு கொடுக்கும் வதைகள் மக்களுக்கு ஏற்படும் நெருக்கடிகளை மறக்கடிக்கச் செய்யவே இனவாத, மதவாதத்தை தூண்டும் செயற்பாடுகளை அரசாங்கம் செய்கிறது. டெங்கு நோய் தலைவிரித்தாடுகிறது. அதிகாரிகள் கடந்த காலத்தில் வெள்ளை வானுக்கு பயந்தே பணிசெய்ததாக கூறுகிறார்கள். யார் அப்படி பயந்தது? அப்படியானால் இன்றைய காலத்தில் கறுப்பு டிபன்டர்களுக்கு பயந்தா அதிகாரிகள் வேலைசெய்கிறார்கள்?

இந்தக் கூட்டத்தில் தொடர்ந்தும் உரையாற்றிய முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச, எதிர்கட்சித் தலைவரும், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா. சம்பந்தன் மற்றும் கூட்டமைப்பின் ஏனைய உறுப்பினர்கள் தொடர்பிலும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச கடும் விமர்சனமொன்றையும் முன்வைத்தார்.

“அரசாங்கத்திற்கு பணிவிடை செய்யும் ஒருவருக்கே எதிர்கட்சித் தலைவருக்கு பதவியை வழங்கியிருக்கிறார்கள். எதிர்கட்சித் தலைவரும் அப்படியே, அவரது உதவியாளர்களான 16 பேரும் அப்படியே. ஏனைய 6 பேர் இருக்கின்றனர். அவர்களும் இணைந்து எதிர்கட்சித் தலைவர் தனது பணியை செய்வதில்லை. அதனை இவர்களுக்கே ஒப்படைத்திருக்கின்றார். ஆனால் எதிர்கட்சிப் பதவி ஒன்றிணைந்த எதிர்கட்சிக்கே ஒப்படைக்கப்பட்டுள்ளது.எதிர்கட்சித் தலைவர் பதவியை வெளிகொணர்வது நாங்களே. செயல்படுத்துவதும் நாங்களே” என்றார்.