ஒற்றையாட்சிக்கு அப்பாற்பட்ட அரசியலமைப்பை அறிமுகப்படுத்த திட்டம் – மகிந்த குற்றச்சாட்டு
நாட்டில் ஒற்றையாட்சிக்கு அப்பாற்பட்ட ஒரு அரசியலமைப்பை அறிமுகப்படுத்த, தற்போதைய அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக, சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச குற்றம்சாட்டியுள்ளார்.
சீனக்குடா எண்ணெய்க் குதங்கள், துறைமுகம் என்பனவற்றை இந்தியாவுக்கு வழங்குவதற்கு எதிர்ப்புத் தெரிவித்தும், இந்தியாவுடனான எட்கா உடன்பாட்டுக்கு எதிர்ப்புத் தெரிவித்தும், திருகோணமலையில் நேற்று நடத்திய கூட்டு எதிரணியின் ஆர்ப்பாட்டத்தின் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
“ நாட்டின் எல்லா வளங்களும் வெளிநாடுகளுக்கு விற்கப்படுகின்றன. எட்கா போன்ற உடன்பாடுகளின் மூலம், நாட்டின் பொருளாதாரம் முழுமையாக வெளிநாட்டு சக்திகளின் கைகளில் ஒப்படைக்கப்படவுள்ளது.
தீவிரவாதிகளிடம் இருந்து நாட்டைப் பாதுகாத்த புலனாய்வுப் பிரிவினர், சிறைக்கம்பிகளுக்குப் பின்னால் அடைக்கப்படுகின்றனர்.
போர் வீரர்களை போர்க்குற்ற நீதிமன்றத்தில் நிறுத்துவதன் மூலம், தேசிய விரோத சக்திகளை சமாதானப்படுத்த முனைகிறது அரசாங்கம்.
அரசாங்கத்துக்கு எதிரான போராட்டம் நடக்காத நாள் ஒன்றே கிடையாது. மக்கள் வெறுப்படைந்துள்ளனர். அதிருப்தியை வெளிப்படுத்தும் மக்களை அடக்க அரசாங்கம் காவல்துறையை கட்டவிழ்த்து விடுகிறது.
பல தலைவர்கள் இன்னமும் எந்த முடிவையும் எடுக்காமல் உள்ளனர்.
அரசாங்கத்துக்கு என்று தனியான அல்லது ஒருமித்த பார்வை கிடையாது. மூன்று அமைச்சரவைப் பேச்சாளர்கள் இருக்கின்றனர். உலகிலேயே மூன்று அமைச்சரவைப் பேச்சாளர்களைக் கொண்ட ஒரே நாடு சிறிலங்கா தான்.
அவர்கள் மூவரும் ஒரே விவகாரம் தொடர்பாக மூன்று வெவ்வேறு கருத்துக்களை கூறுகின்றனர்.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
திருகோணமலை நகர சபை மைதானத்தில் நடந்த இந்தக் கூட்டத்தில், கூட்டு எதிரணியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலரும் கலந்து கொண்டனர்.