Breaking News

மனோ கணேசன்- சுமந்திரன் கடும் வாக்குவாதம் – இடையில் நின்றது வழிநடத்தல் குழுக் கூட்டம்



சிறிலங்கா நாடாளுமன்றத்தில் நேற்று நடந்த அரசியலமைப்பு பேரவையின் வழிநடத்தல் குழுக் கூட்டத்தில் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனுக்கும், அமைச்சர் மனோ கணேசனுக்கும் இடையில் கடுமையான வாக்குவாதம் இடம்பெற்றுள்ளது.

இந்த வாக்குவாதத்தை, சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலையிட்டு அமைதிப்படுத்திய போதிலும், வழிநடத்தல் குழுவின் கூட்டம் இடையிலேயே நிறுத்தப்பட்டது.

அரசியலமைப்பு திருத்தம் தொடர்பான இடைக்கால அறிக்கை குறித்து விவாதிப்பதற்காக வழிநடத்தல் குழுவின் கூட்டம் நேற்று நாடாளுமன்ற வளாகத்தில் சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் இடம்பெற்றது.

இதன்போதே, அரசியலமைப்பு திருத்த முன்மொழிவுக்கு தமிழ்க் கட்சிகளின் இணங்கப்பாடு தொடர்பான விவகாரத்தில்,நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரனுக்கும், அமைச்சர் மனோ கணேசனுக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டது.

தமிழ்க் கட்சிகள் அரசியலமைப்பு சீர்திருத்தங்களுக்கு ஒப்புதல் அளித்து விட்டதாக, அமைச்சர் மனோ கணேசன் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் குற்றம்சாட்டினார்.

அதனை நிராகரித்த மனோ கணேசன், முன்மொழியப்பட்ட திருத்தங்களை தமிழ்க் கட்சிகள் எதிர்க்கவில்லை என்று கூறுவதில் தவறு இல்லை என்று வாதிட்டார்.

இந்த வாக்குவாதம் நீடித்த போது, இருவரையும் அமைதிப்படுத்த தலையீடு செய்த சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, இந்த விவகாரத்தை கூட்ட அறைக்கு வெளியே கலந்துரையாடி தீர்த்துக் கொள்ளுமாறும் ஆலோசனை கூறினார்.

இந்த வாக்குவாதத்தின் விளைவாக, வழிநடத்தல் குழுவின் கூட்டம் நேற்று இடையில் நிறுத்தப்பட்டதாக நாடாளுமன்ற வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இடைக்கால அறிக்கையை இறுதிப்படுத்துவதற்காக, வழிநடத்தல் குழு இன்றும் நாளையும் கூடவுள்ளது.