Breaking News

அனந்திக்கு எதிராக தமிழரசு கட்சி நடவடிக்கை எடுக்கும்?



“வட மாகாண மகளிர் விவகார அமைச்சர் அனந்தி சசிதரன் மீது, இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைமை நடவடிக்கை எடுக்க வேண்டும்” என, தமிழரசுக் கட்சியின் இளைஞர் அணிக் கூட்டத்தில், இளைஞர்கள் சிலர் கோரிக்கை விடுத்திருப்பதாகவும் அது தொடர்பாக ஆராய்ந்து வருவதாக, தமிழரசுக் கட்சியின் தலைமை கூறியிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. 

தமிழரசுக் கட்சியின் இளைஞர் அணி உறுப்பினர்களின் விசேட கலந்துரையாடல், யாழ். வீரசிங்கம் மண்டபத்தில் நேற்று (02) நடைபெற்றது. 

இந்தக் கலந்துரையாடலிலேயே மேற்படி கோரிக்கை விடுக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது. 
இந்தக் கலந்துரையாடலின்போது, வட மாகாணசபையின் பிரச்சினைகள் தொடர்பாக பேசவேண்டாம் என அறிவுறுத்தப்பட்ட நிலையிலும் இளைஞர் அணி உறுப்பினர் ஒருவர் எழுந்து, “மாகாண மகளிர் விவகார அமைச்சர் அனந்தி சசிதரன் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டதா?” எனக் கேள்வி எழுப்பினார். 

அதனைத் தொடர்ந்து, மாகாணசபை உறுப்பினர் ஒருவரும் எழுந்து, “தமிழரசுக் கட்சியின் சார்பில் மாகாண சபைக்குள் வந்த அனந்தி சசிதரன், கட்சியின் நிலைப்பாடுகள், கொள்கைகளை மீறி நடந்து கொள்ளும் நிலையில், அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை” எனக் கூறியதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. 

அதனைத் தொடர்ந்து கருத்துத் தெரிவித்த தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா, 
மாகாண அமைச்சர் அனந்தி சசிதரன் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அடுத்த கட்டமாக தமிழரசுக் கட்சியின் மாநாடுகள் நடைபெறவுள்ள நிலையில், கட்சியின் நிலைப்பாடுகள், கொள்கைகளுக்கு மாறாக செயற்பட்டிருக்கும் அனந்தி சசிதரன், முன்னாள் இளைஞர் அணித் தலைவர் சிவகரன், வாழ்நாள் பேராசிரியர் சி.க.சிற்றம்பலம் ஆகியோர் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டு, வெளிப்படையாக அறிவிக்கப்படும் என உறுதியளித்துள்ளதாகவும் அத்தகவல்கள் தெரிவிக்கின்றன.