கிழக்கு மாகாணசபையின் ஆளுநராக லியனகே?
வணிகரும் கட்டாருக்கான இலங்கைத் தூதுவருமான ஏ.எஸ்.பி. லியனகே, கிழக்கு மாகாண சபையின் ஆளுநராகத் தெரிவாகுவார் என எதிர்பார்ப்பதாக, தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஜனாதிபதியின் செயலாளராக, கிழக்கு மாகாண சபையின் தற்போதைய ஆளுநர் ஒஸ்டின் பெர்ணான்டோ பதவியேற்கவுள்ள நிலையில், அங்கு ஏற்பட்டுள்ள வெற்றிடத்துக்கே, லியனகே நியமிக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கட்டாரில் தங்கியிருந்த லியனகே, ஜனாதிபதியைச் சந்திப்பதற்காக, இலங்கையை நேற்று வந்தடைந்தார். அவர், இவ்வாண்டு மார்ச்சிலேயே, கட்டாருக்கான தூதுவராக, ஜனாதிபதியால் நியமிக்கப்பட்டிருந்தார்.
முன்னர் கருத்துத் தெரிவித்திருந்த லியனகே, மாகாணமொன்றின் ஆளுநராகத் தன்னை நியமிக்கவே, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன விரும்பியதாகவும், ஆனால் வெற்றிடமேதும் காணப்படாத நிலையிலேயே, கட்டாருக்கான தூதுவராக நியமித்ததாகவும் கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.