Breaking News

சம்பந்தன் கைவிட்டாலும் நான் கைவிடமாட்டேன்-முதலமைச்சர் உறுதி

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஒற்றுமையை
எந்தவித காரணங்கொண்டும் இப்போது குழப்பக்கூடாது எனவும் அப்படிக் குழப்பினால் அது தென்னிலங்கைக்குச் சாதகமாகிவிடும் எனவும் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

நேற்று பத்திரிகையாளர்களை சந்தித்து அவர்களுக்கு தனது நிலைப்பாடு தொடர்பாக விளக்கமளிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அவரின் உரையில் தெரிவித்ததாவது,

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஒற்றுமையை எக்காரணங்கொண்டும் நாம் பலவீனப்படுத்தக்கூடாது. இந்தச் சந்தர்ப்பத்தில் அப்படிச் செய்தால் அது தென்னிலங்கை அரசுத் தரப்புக்கே வாய்ப்பாகி விடும்.

கூட்டமைப்புக்குள் இருக்கும் ஏனைய கட்சிகள்கூட தங்களுக்குள் முரண்பாடுகள் இருக்குமானால் உள்ளுக்குள் இருந்தே நிலைமையைத் திருத்தவேண்டும். அதைத் தவிர, வேறு மார்க்கம் இல்லை.

நான் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தனைச் சந்திப்பேன். மனம்விட்டுப் பேசுவேன். என் நிலைப்பாடுகளைத் தெளிவாக எடுத்துரைப்பேன். வடக்கு மாகாண சபை விடயங்களை அவருக்கு விவரமாக எடுத்துக்கூறுவேன்.

எமது தேர்தல் விஞ்ஞாபனத்தைச் சுமந்திரனும் சம்பந்தனும்தான் தயாரித்தார்கள். அந்த விஞ்ஞாபனத்தில்தான் நான் தேர்தலில் போட்டியிட்டேன். மக்கள் எனக்கு வாக்களித்தனர்.

அந்த விஞ்ஞாபனத்தில் தாயகம், சுயநிர்ணயம், இறைமை பற்றியெல்லாம் எழுத்தில் வடித்தவர்கள் அவர்கள்தான். ஆனால், தேர்தல் அறிக்கை என்ற பெயரில்தான் வெளியானது. நானும் அதற்குப் பொறுப்பு.

தேர்தல் விஞ்ஞாபனத்தில் கூறியவற்றை அவர்கள் கைவிட்டாலும் நான் விடமுடியாது. தாங்கள் கைவிடும்போது நானும் அவற்றைக் கைவிட வேண்டும் என அவர்கள் எதிர்பார்த்தால் அது தவறு. நான் அதற்கு இணங்கவே மாட்டேன்.

அது பற்றி சம்பந்தனுக்கு எடுத்துக் கூறுவேன். அவர் தென்னிலங்கையை அதிகம் நம்புகின்றார், நம்பி விட்டார் என நான் நினைக்கின்றேன். தெற்கின் ஏமாற்று வேலை குறித்து சம்பந்தனுக்கு எச்சரிப்பேன். எனக்குத் தென்னிலங்கைப் போக்குப் பற்றி நன்கு தெரியும்.

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜாவையும் அரவணைத்து, இணைத்துச் செயற்படுவதில் எனக்கு ஒன்றும் கஷ்டமில்லை.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, இலங்கைத் தமிழரசுக் கட்சி ஆகியவற்றின் பேச்சாளரான நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனுடன் இணைந்து செயற்படுவதுதான் சாத்தியமற்றது. அவருடன் சேர்ந்து பணியாற்றுவது கஷ்டமானது.

எங்கள் கொள்கைகளில் எங்கள் தேர்தல் விஞ்ஞாபனத்தில் நாம் மக்களுக்குக் கூறிய விடயங்களில் உறுதியாக நிற்கவேண்டும்.

ஒற்றுமையைத் தகர்த்து பழிச்சொல்லுக்கு நான் ஆளாக விரும்பவில்லை. ஒற்றுமையை நாம் கைவிட்டோமானால் அது தென்னிலங்கைக்கு மிக வாய்ப்பாகி விடும்.

வடக்கு மாகாண சபை ஊழல் விசாரணைகள் தொடர்பில் எனது நிலைப்பாடு உறுதியானது. அதனைச் சம்பந்தனுக்கு விளக்கி அவரையும் இணைத்துக் கூட்டாக நடவடிக்கை எடுப்போம். மாவை சேனாதிராஜாவுக்கும் அவை பற்றி விளங்கும் என்றார்.