சீமெந்து தொழிற்சாலை இயந்திரங்கள் திருட்டு – முன்னாள் இராணுவத் தளபதிகளுக்கு அழைப்பாணை
காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலை இயந்திரங்களை வெட்டி எடுத்து பழைய இரும்பாக விற்பனை செய்த மோசடி தொடர்பாக, சிறிலங்காவின் முன்னாள் இராணுவ அதிகாரிகளை, பாரிய மோசடிகள் மற்றும் ஊழல்கள் குறித்து விசாரிக்கும் அதிபர் ஆணைக்குழு விசாரணைக்கு அழைத்துள்ளது.
1990 ஆம் ஆண்டு போர் நடவடிக்கைகளால் கைவிடப்பட்டிருந்த காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலையில், இருந்த 600 தொன் எடையுள்ள இயந்திரங்களை, 2012-2013 காலப்பகுதியில் சீமெந்துக் கூட்டுத்தாபனத்தின் அனுமதியின்றி, பழைய இரும்புக்காக விற்பனை செய்யப்பட்ட மோசடி தொடர்பாக, பாரிய மோசடிகள் மற்றும் ஊழல்கள் குறித்து விசாரிக்கும் அதிபர் ஆணைக்குழு விசாரணை செய்து வருகிறது.
இந்த மோசடி தொடர்பாக ஏற்கனவே சிறிலங்காவின் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச மற்றும் முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் தயா ரத்நாயக்க ஆகியோரிடம் விசாரணை நடத்தப்பட்டது.
இந்த நிலையில், சிறிலங்காவின் முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் தயா ரத்நாயக்க, முன்னாள் யாழ். படைகளின் தலைமையக தளபதிகளான மேஜர் ஜெனரல் மகிந்த ஹத்துருசிங்க, மேஜர் ஜெனரல் உதய பெரேரா மற்றும் பாதுகாப்பு அமைச்சின் மேலதிக செயலராக முன்னர் பணியாற்றிய சிறிபால ஹெற்றியாராச்சி ஆகியோருக்கு பாரிய மோசடிகள் மற்றும் ஊழல்கள் குறித்து விசாரிக்கும் அதிபர் ஆணைக்குழு மீண்டும் அழைப்பாணை விடுத்துள்ளது.
வரும் 14ஆம் நாள் இவர்களை ஆணைக்குழு முன்பாக தோன்றுமாறு அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது