இனப்பிரச்சினைக்கான தீர்வு தமிழ் மக்களின் கருத்தை அறிய வேண்டும்
ஆட்சியாளர்கள் தாம் நினைத்தபடி தரு வதுதான் தீர்வு என்று யார் கருதினாலும் அது நாட்டின் எதிர்காலம் ஆரோக்கியமாக இல்லை என்பதையே எடுத்துக் காட்டும்.
அதேநேரம் இனப்பிரச்சினைக்கான தீர்வாக ஆட்சியாளர்கள் எதைத் தந்தாலும் அதை ஏற்பதுதான் இப்போது இருக்கின்ற சூழ் நிலை என்று தமிழ் அரசியல் தலைமை நினைத்தால் அது தமிழ் அரசியல் தலை மைக்கு பேராபத்தாக அமையும்.
ஆகையால் இனப் பிரச்சினைக்கான தீர்வு தமிழ் மக்களின் ஆகக்குறைந்த அபிலாசை களையாவது நிறைவேற்றுவதாக இருக்க வேண்டும்.
இதைவிடுத்து தமிழ் மக்கள் எங்களுக்கு வாக்களித்து விட்டனர். எனவே நாங்களே தமிழ் மக்களின் பிரதிநிதிகள். நாங்கள் ஏற்பதனை தமிழ் மக்கள் ஏற்பதாக கருத வேண்டும் என்ற எண்ணப்பாடு தமிழ் அரசியல் தலை மையிடம் இருக்குமாயின் அதனை மாற்றிக் கொள்வதே நல்லது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு தமிழ் மக் கள் வாக்களித்து அவர்களை பாராளுமன்றம் அனுப்பி வைத்தமைக்கு மிக ஆழமான காரணங்கள் உண்டு.அதாவது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகர னால் ஏற்பாடு செய்யப்பட்ட அரசியல் அமைப்பு.
விடுதலைப் புலிகளின் ஏற்பாட்டில் அவர் களின் ஆசீர்வாதத்துடன் அமைக்கப்பட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பால், விடுதலைப் புலிகளின் உச்சமான இலக்கை நிறைவேற்ற முடியாமல் விட்டாலும்,தமிழ் மக்களுக்கு கிடைக்க வேண்டிய ஆகக் குறைந்த உரிமைகளையாவது பெற்றுக் கொடுக்க பாடுபட வேண்டும்.
இதனை உறுதி செய்வதாக கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனம் உள்ளது என்ற நம்பிக்கையின் அடிப்படையில் தமிழ் மக்கள் தங்கள் வாக்குகளை கூட்டமைப்புக்கு வழங்கினர்.ஆனால் இப்போது கூட்டமைப்பு தமிழ் மக் களை மறந்து செயற்படுவதுபோல் தெரிகின்றது.
எந்தவிதமான உரிமைகளும் அதிகாரங் களும் இல்லாத தீர்வை கூட்டமைப்பின் தலைமை ஏற்றுக் கொள்ளுமாக இருந்தால்,அது இனப்பிரச்சினைக்கான தீர்வு முற்றுப் பெற்று விட்டதான ஒரு தோற்றப்பாட்டையே வெளிப்படுத்தும். உலக நாடுகளின் பார்வையும் அதுவாகவே இருக்கும்.
இதன்பின்னர் அரசு தந்த தீர்வு எந்த வித மான அதிகாரத்தையும் எமக்குத் தரவில்லை என்று தமிழ் மக்கள் கூறினால் அது உலக நாடுகளின் வெறுப்பை சம்பாதிப்பதாக இருக்கும்.
அதாவது இனப்பிரச்சினைக்கான தீர்வை தமிழ் அரசியல் தலைமையான கூட்டமைப்பு ஏற்றுக் கொண்டுள்ளது.ஆனால் இப்போது அதுவும் போதாது என்று தமிழ் மக்கள் கூறுகின்றனர். அப்படியானால் இதை தீர்வு தரப்படும் போதல்லவா கூறியிருக்க வேண்டும்.
தீர்வை பெற்றுவிட்டு பின்னர் அதிகாரம் போதாது என்று கூறுவது ஒரு குழப்பமான வேலை என்றும் தமிழ் மக்கள்தான் குழப் பத்தை ஏற்படுத்துகின்றனர் என்பதுமாக சர்வ தேச சமூகத்தின் நிலைப்பாடு அமையும்.
ஆகையால் எந்தத் தீர்வை பெறுவதாக இருந்தாலும் தமிழ் மக்களின் கருத்தை பொருத்தமான பொறிமுறையூடாக அறிய வேண்டும்.
இதை கூட்டமைப்பின் தலைமை செய்வது கட்டாயமானதாகும்.