Breaking News

எனது 15 வயது மகனின் எதிர்காலத்தை அழித்துவிட்டார்: கண்ணீருடன் தாய்

பயங்கரவாதி என அடையாளப்படுத்தி எனது கணவனை சிறையிலடைத்திருக்கும் நல்லாட்சி அரசாங்கம் எனது 15 வயது மகனை மேசன் தொழிலாளியாக மாற்றியிருக்கின்றது. 

இவ்வாறு தமிழ் அரசியல் கைதி ஒருவரின் மனைவி கண்ணீர்மல்க தெரிவித்துள்ளார். யாழ். ஊடக அமையத்தில் இன்றைய தினம் ஊடகவியலாளர்களை சந்தித்து கருத்துத் தெரிவிக்கும்போதே இவ்வாறு தெரிவித்துள்ளார். 2013.12.11ம் திகதி எனது கணவனை பயங்கரவாத குற்றத்தடுப்பு பொலிஸார் வவுனியாவில் கைது செய்யும்போது எனது கணவனை பயங்கரவாதி என அடையாளப்படுத்தியே கைது செய்தனர். கைது செய்யப்பட்டு 4 வருடங்களாகியும் எனது கணவன் மீது வழக்கு தொடரப்படவில்லை. குற்றச்சாட்டும் கூட சுமத்தப்படவில்லை.


இந்நிலையில் 4 பிள்ளைகளை கொண்ட குடும்பத்தை கொண்டு நடத்த இயலாத நிலையில் எனது 15 வயது மகன் மேசன் தொழில் செய்து குடும்பப் பாரத்தை சுமக்கின்றான். 

நல்லாட்சி என தம்மை தாமே கூறி கொள்ளும் இந்த அரசாங்கம் எனது கணவனை பயங்கரவாதி ஆக்கி சிறையில் அடைத்திருக்கிறது. அது போதாது என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனது நல்லாட்சியில் பாடசாலை சிறுவர்களுக்கு சிறப்பான எதிர்காலத்தினை பெற்றுக் கொடுப்பேன் என கூறி எனது 15 வயது மகனின் எதிர்காலத்தை அழித்து அவனை மேசன் தொழிலாளி ஆக செயற்படுத்தி வருகின்றார்.