எஸ்-400 ரக ஏவுகணைகளை இந்தியாவிற்கு வழங்க ரஷியா அனுமதி
பிரதமர் மோடியின் ரஷ்ய பயணத்தை முன்னிட்டு, எஸ்-400 ரக ஏவுகணைகளை இந்தியாவிற்கு வழங்குவது குறித்து ரஷ்யாவுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.
இதில் 400 கி.மீ. தொலைவுக்குள் இருக்கும் எதிரியின் ஏவுகணை மற்றும் வான்வழி இலக்குகளை துல்லியமாக கண்டறிந்து தாக்கி அழிக்கும் எஸ்-400 ரக ஏவுகணைகளை இந்தியாவிற்காக வழங்குவது தொடர்பாக இந்தியா - ரஷியா பிரதிநிதிகள் இடையே நேற்று விவாதிக்கப்பட்டது.
அதன் முடிவில், எஸ்-400 ஏவுகணைகளை இந்தியாவிற்கு அளிப்பதற்கான தயாரிப்பு ஏற்பாடுகள் தொடங்கி நடைபெற்று வருவதாக ரஷ்ய துணை பிரதமர் டிமிட்ரி ரோகோகோசின் தெரிவித்துள்ளார்.
தயார் செய்யப்படும் ஏவுகணைகள் இந்தியாவிற்கு எப்போது அனுப்பி வைக்கப்படும் என்பது குறித்த அதிகாரப்பூர்வ தகவல் இல்லை. அதனை கணக்கிட முடியவில்லை என்றும் ரோகோகோசின் தெரிவித்தார்.
கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் கோவாவில் நடைபெற்ற பிரிக்ஸ் மாநாட்டின் போது இருநாடுகளுக்கு இடையே 18 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. அதில் ஏவுகணை தயாரிப்பு ஒப்பந்தமும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது. அதன்படி மூன்று வகையான ஏவுகணைகளை தாக்கி அழிக்கும் பாதுகாப்பு ஏவுகணையை தயாரிக்க ஒப்பந்தம் கையெழுத்தானது. ஒரே நேரத்தில் வேறுவேறு 36 எல்லைகளை குறிவைத்து தாக்கும் வல்லமை கொண்டது.