Breaking News

பிரிக்கப்படாத நாட்டுக்குள் உச்ச அதிகாரப்பகிர்வு – பிரதமர்



அரசியலமைப்பு மாற்றத்தின் மூலம், பிரிக்கப்படாத நாட்டுக்குள் கூடுதல் அதிகாரங்களைப் பகிர்ந்து கொள்வதற்கு அனைத்துக் கட்சிகளும் இணங்கியிருப்பதாகவும், புதிய அரசியலமைப்பை உருவாக்குவதா அல்லது தற்போதுள்ள அரசியலமைப்பில் மாற்றங்களைச் செய்வதா என்று இன்னமும் முடிவு செய்யப்படவில்லை என்றும் சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

அரசியலமைப்பு சபை செயலகம் கொழும்பில் நேற்று ஏற்பாடு செய்திருந்த அரசியலமைப்பு மறுசீரமைப்புக்கள் தொடர்பான மாநாட்டில் உரையாற்றும்போதே அவர் இவ்வாறு கூறினார்.

“தற்பொழுது நாம் முன்னெடுத்திருக்கும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு செயற்பாடு முற்றிலும் மாறுப்பட்டதாகும். அரசியலமைப்பு வரைவு நாடாளுமன்றத்துக்கு சமர்ப்பிக்கப்பட்டாலும், உச்சநீதிமன்றத்தின் முடிவுக்கு அமைய பொதுவாக்கெடுப்பின் மூலமே தீர்மானம் எடுக்கப்படும்.

அதாவது அரசியலமைப்பு மறுசீரமைப்பில் இறுதி முடிவை எடுப்பது நாட்டு மக்களே. சட்டத்தை அங்கீகரிக்கும் பொறுப்பு நாடாளுமன்றத்திடமே உள்ளது.

கலந்துரையாடி அரசியலமைப்பு வரைபொன்றை தயாரித்து அதனை நாடாளுமன்றத்துக்கு சமர்ப்பிப்பதே அரசியலமைப்பு சபையின் செயற்பாடாகும். இதற்கான செயற்பாடுகளிலேயே நாம் ஈடுபட்டுள்ளோம்.

அரசியலமைப்பு தொடர்பான விடயம் பொது மக்களிடம் வரவில்லையென்ற குற்றச்சாட்டு காணப்படுகிறது. இந்த விவகாரம் இன்னும் அரசியலமைப்பு சபைக்கு வரவில்லையென்பதாலேயே பொது மக்களின் நிலைப்பாடுகள் பெறப்படவில்லை.

அரசியலமைப்பு சபையின் நடவடிக்கைகளை முடிவுசெய்வது வழிநடத்தல் குழுவாகும். அத்துடன் அரசியலமைப்பு தொடர்பான அறிக்கையொன்றை வழிநடத்தல் குழு தயாரிக்கும்.

அரசியலமைப்பு தொடர்பான அறிக்கைக்கும், அரசியலமைப்பு வரைவுக்கும் இடையில் வித்தியாசங்கள் உள்ளன. அரசியலமைப்பு பற்றிய அறிக்கையை எவ்வாறு தயாரிப்பது என்பதிலேயே நாம் ஈடுபட்டுள்ளோம். வழிநடத்தல் குழு ஆறு உபகுழுக்களை நியமித்து அவற்றின் அறிக்கையை பெற்றிருந்தது.

தற்பொழுது இடைக்கால அறிக்கையொன்றை தயாரிக்கும் பணிகளில் வழிநடத்தல் குழு ஈடுபட்டுள்ளது.

ஜனவரி மாதத்தில் அறிக்கையை சமர்ப்பிக்க எதிர்பார்த்திருந்தபோதும், ஓகஸ்ட் மாத இறுதியில் வழிநடத்தல் குழுவின் இடைக்கால அறிக்கையை அரசியலமைப்பு சபைக்கு சமர்ப்பிக்க எதிர்பார்த்துள்ளோம்.

அனைத்துக் கட்சிகளின் பிரதிநிதிகளும் தமது கருத்துக்களை பரிமாறிக் கொள்வதற்கான தளமாக வழிநடத்தல் குழு அமைந்துள்ளது.

சில விடயங்களில் இணக்கப்பாடு ஏற்படவில்லை. சகல தரப்பின் கருத்துக்களையும் உள்ளடக்கியதாக இடைக்கால அறிக்கையை நாம் முதலில் சமர்ப்பிக்கவுள்ளோம்.

இடைக்கால அறிக்கையில் கொள்கையளவில் இணக்கப்பாடுகள் எட்டப்பட்டுள்ளன.

சபையில் பிரிவுகளை ஏற்படுத்தும் அறிக்கையை அனுப்ப நாம் விரும்பவில்லை. நாம் சமர்ப்பிக்கும் அறிக்கை குறித்து பொது மக்களின் கருத்துக்களையும் பெற்று அதனை சபையில் விவாதிக்க வேண்டும்.

இடைக்கால அறிக்கை பற்றி மக்களின் கருத்துக்களையும் பெற்று அதனை சபையில் விவாதித்த பின்னர் முழுமையான அறிக்கையை அரசியலமைப்பு சபையில் முன்வைத்து விவாதித்து அதனை நாடாளுமன்றத்துக்கு அனுப்ப எதிர்பார்த்துள்ளோம். அதனைத் தொடர்ந்து அரசியலமைப்பு வரைவு தயாரிக்கப்படும்.

அதிகாரப் பகிர்வு விடயத்தில் சில இணக்கப்பாடுகள் எட்டப்பட்டுள்ளன. நாடு பிரிக்கப்படக்கூடாது என்பதில் சலரும் இணங்கியுள்ளனர். மாகாணங்களுக்கு அதிகூடிய அதிகாரப்பகிர்வு வழங்குவது பற்றியும் ஆலோசனைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

அனைத்து அரசியல் கட்சிகளும் மாகாண நிர்வாகத்தில் அனுபவத்தைப் பெற்றுள்ளன. அதிகாரப் பகிர்வு விடயத்தில் முன்னர் இருந்த பிரிவுகள் தற்பொழுது இல்லை. ஒரேயொரு பிரிவு மாத்திரமே தற்பொழுது உள்ளது. அதாவது, முதலமைச்சர்களுக்கு அதிகமான அதிகாரங்கள் வழங்கப்பட வேண்டும் என்பது மாத்திரமே.

அரசியல் கட்சிகளுக்கிடையில் காணப்பட்ட பிரிவினை நீங்கி, மாகாண சபைகளுக்கும் மத்திய அரசாங்கத்துக்கும் இடையிலேயே பிரிவுகள் ஏற்பட்டுள்ளன. அதிகாரப் பகிர்வு தொடர்பில் பிரதான கட்சிகளுக்கிடையில் சந்திப்புக்கள் இடம்பெற்றுள்ளன.

பௌத்த மதத்தை அரசியலமைப்பிலிருந்து நீக்குவதற்கான எந்த யோசனைகளும் முன்வைக்கப்படவில்லை. அதேநேரம், ஏனைய மதத்தவர்களும் தங்களுடைய மதத்தை பின்பற்றுவதற்கான உரிமையை உறுதிப்படுத்தவும் யோசனைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

தேர்தல் முறை மாற்றம் தொடர்பில் முன்மொழிவுகளும் முன்வைக்கப்பட்டுள்ளன. இது தொடர்பிலும் இறுதி முடிவு எடுக்கப்படவில்லை.

மற்றுமொரு விடயம் அரசியலமைப்புத் திருத்தத்தின் ஊடாக வழங்கப்பட்ட நிறைவேற்று அதிகாரமாகும். இத்திருத்தத்தில் நிறைவேற்று ஜனாதிபதிக்கான அதிகாரங்கள், மாகாண சபைகளுக்கான அதிகாரம் உள்ளிட்ட விடயங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.

இது பற்றி விரிவான கலந்துரையாடல்கள் இடம்பெறுகின்றன. செனட் சபையொன்றை உருவாக்குவதற்கு சகலரும் இணங்கியுள்ளனர். எனினும், உறுப்பினர்கள் பற்றிய தீர்மானங்கள் எடுக்கப்படவில்லை.

அதேநேரம், அரசியலமைப்பை மேம்படுத்தும்போது பொது வாக்கெடுப்புக்குச் செல்லும் விடயங்களுக்குச் செல்வதா இல்லையா என்ற விடயமும் கலந்துரையாடப்படுகிறது என்றும் அவர் கூறினார்.