ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று தொடக்கம்
ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று தொடங்குகிறது.
ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியின் பதவிக்காலம் முடிவடைவதையொட்டி புதிய ஜனாதிபதியை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் ஜூலை 17-ந் தேதி நடக்கிறது. இந்தத் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று (புதன்கிழமை) தொடங்குகிறது. தேர்தல் நடத்தும் அதிகாரியாக பாராளுமன்ற செயலாளர் நியமிக்கப்பட்டுள்ளார்.
அந்தந்த மாநில சட்டசபை செயலாளர்கள், உதவி தேர்தல் நடத்தும் அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் சட்டசபை செயலாளர் (பொறுப்பு) க.பூபதி மற்றும் இணைச் செயலாளர் பி.பாலசுப்பிரமணியம் ஆகியோர் உதவி தேர்தல் நடத்தும் அதிகாரிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுகிறவர்கள் இவர்களில் ஒருவரிடம் வேட்புமனு தாக்கல் செய்ய வேண்டும். இந்த தேர்தலுக்கான டெபாசிட் தொகை ரூ.15 ஆயிரமாகும். பதிவாகும் வாக்குகளில் ஆறில் ஒரு பங்கு பெறுவோர் மட்டுமே டெபாசிட்டை திரும்பப் பெற முடியும்.
தேர்தலில் எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள், டெல்லி மேல்சபை உறுப்பினர்கள் ஆகியோர் வாக்களிக்கலாம். இவர்கள் வாக்களிப்பதற்கு சட்டசபை அருகே தனி இடம் ஒதுக்கப்படும். வாக்குச்சீட்டின் மூலம்தான் வாக்களிக்க முடியும்.
எம்.பி.க்களுக்கான வாக்குச்சீட்டின் நிறம் பச்சையாகவும், எம்.எல்.ஏ.க்களுக்கான வாக்குச்சீட்டின் நிறம் ‘பிங்க்’ ஆகவும் இருக்கும். வாக்கு செலுத்தும்போது உதவி தேவைப்பட்டால் அவர்களுடன் உதவி தேர்தல் நடத்தும் அதிகாரி மட்டுமே செல்ல முடியும். வேறு யாரும் அனுமதிக்கப்பட மாட்டார்கள்.
வாக்குச் சீட்டில், போட்டியிடும் வேட்பாளர்களின் பெயர் அச்சிடப்பட்டு இருக்கும். அதில் முதல் ஓட்டு யாருக்கு என்பதை குறிக்கும் வகையில், அவரின் பெயருக்கு அருகே ஒன்று என்று எண்ணால் எழுத வேண்டும். டிக் செய்யக் கூடாது.
இரண்டாவது ஓட்டு போட வேண்டுமானால் வேட்பாளர் பெயர் அருகே இரண்டு என்று எண்ணால் எழுத வேண்டும். உதவி தேர்தல் நடத்தும் அதிகாரி கொடுக்கும் பேனாவையே இதற்கு பயன்படுத்த வேண்டும்.
35 வயது நிறைவு பெற்ற இந்தியர் யார் வேண்டுமானாலும் இந்தப் பதவிக்கு போட்டியிடலாம். போட்டியிடுபவரின் வேட்புமனுவை, ஓட்டளிக்க தகுதியுடைய 50 பேர் (எம்.பி.க்கள் அல்லது எம்.எல்.ஏ.க்கள்) முன்மொழியவும், வேறு 50 பேர் வழிமொழியவும் வேண்டும்.
இன்று காலை 11 மணியில் இருந்து பிற்பகல் 3 மணி வரை வேட்புமனு தாக்கல் செய்யலாம். வேட்புமனு தாக்கலுக்கான கடைசி நாள் வருகிற 28-ந் தேதியாகும்.