Breaking News

சரணடைந்தோர், கைதுசெய்யப்பட்டோர் விபரங்களை வெளியிடுமாறு கட்டளை



போரின் இறுதிக்கட்டத்தில் சிறிலங்கா படையினரிடம் சரணடைந்தவர்கள் மற்றும், படையினரால் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்தவர்களின் பெயர் பட்டியலை வெளியிடுமாறு முப்படையினர் மற்றும் சிறிலங்கா காவல்துறையினருக்கு இன்று கட்டளையிடுவதாக சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன வாக்குறுதி அளித்துள்ளார்.

யாழ்ப்பாணத்துக்கு பயணம் மேற்கொண்டிருந்த சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன, வடக்கு மாகாண ஆளுனர் செயலகத்தில் நேற்று மாலை 4 மணியளவில், காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களின் பிரதிநிதிகள் மற்றும் சிவில் சமூகப் பிரதிநிதிகளை சந்தித்து கலந்துரையாடினார்.

இதன்போது, படையினரிடம் சரணடைந்தவர்களின் பட்டியல் மற்றும் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்தவர்களின் பட்டியல் போன்றவற்றை வெளியிட வேண்டும் என்பது உள்ளிட்ட 4 கோரிக்கைகள் சிறிலங்கா அதிபரிடம் முன்வைக்கப்பட்டன.

இதற்கு சிறிலங்கா அதிபர் இன்று நடக்கும் பாதுகாப்புச் சபைக் கூட்டத்தில், போரின் இறுதிக்கட்டத்தில் சிறிலங்கா படையினரிடம் சரணடைந்தவர்கள் மற்றும், படையினரால் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்தவர்களின் பெயர் பட்டியலை வெளியிடுமாறு சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு உத்தரவிடுவதாக சிறலங்கா அதிபர் உறுதியளித்துள்ளார்.