வடக்கு மாகாண சபைத் தேர்! வடக்கு வீதியில்; சமா நடக்குது!
வடக்கு மாகாண சபையில் நடக்கின்ற நாடகங்களைப் பார்க்கும் போதெல்லாம் ஏன் தான் இப்படி என்று எண்ணத் தோன்றும்.
அந்தளவுக்கு அங்கு நடக்கின்ற விவகாரங்கள் படுமோசமாகி வருகின்றன.
வடக்கு மாகாணத்தில் செய்ய வேண்டிய எத்தனையோ விடயங்கள் இருக்கும் போது, அமைச்சர்கள் மீதான விசாரணை, அது தொடர்பான அறிக்கை, விவாதம் இப்படியே வடக்கு மாகாண சபையின் எஞ்சிய காலமும் முடியப் போகிறது.
வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் அவர்களின் தலையில் வீண் பிரச்சினைகளைச் சுமத்தி அவருக்குத் தொந்தரவு கொடுப்பதற்காக ஆரம்பித்த அமைச்சர்கள் மீதான குற்றச்சாட்டு; இப்போது விசாரணைக்குழுவின் அறிக்கையாகி, வடக்கு மாகாண சபையின் விவாதப் பொருளாகி இருப்பதைக் காண முடியும்.
இது ஒருபுறம் இருக்க, விசாரணை அறிக்கை வெளிவந்ததும், நாங்கள் அப்படி எதுவும் கேட்கவில்லை என்று கூறுகின்ற மாகாண சபை உறுப்பினர்களும் இருக்கவே செய்கின்றனர்.
குறித்த அமைச்சர்களின் பெயர்களைக் கூறி அவர்களின் செயற்பாடு தொடர்பில் விசாரணை நடத்த வேண்டும் எனக் கேட்டவர்கள் இப்போது, விசாரணைக்குழு அமைத்திருக்கத் தேவையில்லை என்று சொல்கின்றனர்.இவ்வாறு சொல்வதன் காரணம் விசாரணைக் குழுவை அமைக்கா விட்டால் முதலமைச்சர் மீது பழிசுமத்த முடியுமல்லவா?
விசாரணை அறிக்கை வந்து விட்ட பின்னர் இலங்கைத் தமிழரசுக் கட்சி கூடி சம்பந்தப்பட்ட அமைச்சர்கள் மீது என்ன நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை முதலமைச்சரிடமே விட்டு விடுவதாகத் தீர்மானித்துள்ளதாம்.
அப்படியாயின் இந்தத் தீர்மானத்தை முன்கூட்டியே எடுத்திருக்கலாம் அல்லவா! ஆரம்பத்திலேயே முதலமைச்சரிடம் இந்தப் பொறுப்பை விட்டிருந்தால் விசாரணைக்குழு, அதற்கான செலவு என்பன தவிர்க்கப்பட்டு ஆக்கபூர்வமான விடயங்கள் குறித்து வடக்கு மாகாண சபை கலந்துரையாடச் சந்தர்ப்பம் கிடைத்திருக்கும்.
இதைவிடுத்து எல்லாவற்றையும் போட்டுடைக்கும் வகையில் வடக்கு மாகாண சபையில் நடந்துவிட்டு,இப்போது நாங்கள் கேட்கவில்லை - நாங்கள் அப்படிக் கூறவில்லை என்ற கருத்துக்கள் தேவைதானா என்ன?
எதுவாயினும் வடக்கு மாகாண சபை உறுப்பினர்களே! உங்கள் தேர் வடக்கு வீதிக்கு வந்துவிட்டது. இருப்புக்கு வர நீண்ட நாள் எடுக்காது. ஆகையால் உங்களுக்குள் சமா வைப்பதை விடுத்து எஞ்சிய இடம் வரையாவது பயனுள்ள வாறு தேரை இழுத்து முடியுங்கள்.
உங்களை நம்பி தேர் இழுக்கும் பதவியைத் தந்த தமிழ் மக்களுக்கு இந்த உதவியையாவது செய்யுங்கள். இதைவிடுத்து விளக்கம், விசாரணை, அறிக்கை, விவாதம் இப்படியே போனால் சமா நல்லா இருக்கும்.ஆனால் மக்கள்தான் பாவங்கள் என்றாகிவிடுவர்.