மாற்றுத்தலைமை ஏற்படுத்தும் முடிவை பேரவையும் முதல்வர் விக்கியும் எடுக்கவேண்டும் – கஜேந்திரகுமார்
தமிழ்த்தேசிய கூட்டமைப்பு என்ன நோக்கத்திற்காக உருவாக்கப்பட்டதோ அதற்கு எதிரான வேலைகளையே செய்துவருவதால் அதற்கான மாற்றுத்தலைமையை ஏற்படுத்தும் முயற்சியை முதல்வர் விக்கியும் தமிழ் மக்கள் பேரவையும் அதன் கோரிக்கைகளை முழுமையாக ஏற்கும் ஈபிஆர்எல்எப் உம் அதற்கான முடிவுகளை எடுக்கவேண்டும் என கஜேந்திரகுமார் தெரிவித்துள்ளார்.
தொலைக்காட்சி விவாதம் ஒன்றில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் மேற்படி கருத்தை தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது:
தற்போது தமிழரசு கட்சியும் ரெலோவும் ஒன்றாக இணைந்துவிட்டன. புளொட் அங்கும் இல்லாமல் இங்கும் இல்லாமல் காட்டிக்கொள்கின்றது. எனவேதான் உறுதியானவர்களை உண்மைக்காக செயற்படவேண்டும் என்பவர்களை, உறுதியான முடிவை எடுக்கவேண்டும் எனக்கேட்கின்றோம்.
உறுதியானவர்கள் சொற்பமானதாக இருந்தாலும் அவர்களை இணைத்துக்கொண்டு எமது பணியை செய்யவேண்டும். அது கடினமாக இருக்கும். ஆனால் செய்யப்படவேண்டும் என்பதை அனைவரும் புரிந்துகொள்ளவேண்டும்.
உதாரணமாக ஜிஎஸ்பிளஸ் பிரச்சனையை பாருங்கள். எங்களுடைய கருத்துக்களை எங்கள் சார்பில் கூட்டமைப்பு எடுக்கின்றது. அதன் மூலம் மக்களுக்கு பாதகமான சூழலை ஏற்படுத்துகின்றது. அதற்கு அமைதியாக இருப்பதன் மூலம் நாமும் அதற்கு உடந்தையாகின்றோம்.
ஜிஎஸ்பி பிளஸ் வரிச்சலுகையில் சிறிதரனுடன் சென்ற குழுவினர் அதற்கு ஆதரவாக செயற்பட்டதாகவும் ஆனால் தான் தனியே அதனை செய்யாமல் தான் கற்கசென்ற வேலையை மட்டுமே செய்ததாகவும் சிறிதரன் சொல்கின்றார்.
அவரது வாதத்தை எடுத்துக்கொண்டால் கூட அந்த ஏனையவர்கள் அரசுக்கு ஆதரவாக ஜிஎஸ்பி பிளஸ் வரிச்சலுகை பெற்றுக்கொள்ள அதற்கான பரப்புரையை செய்தபோது சிறிதரன் அதற்கு எதிரான பரப்புரையை செய்தாரா? அங்கிருந்த புலம்பெயர்ந்த அமைப்புகள் அந்தப்பணியை செய்தபோது அதனோடு இணைந்து அதனை செய்தாரா என்பதை கவனிக்கவேண்டும்.
இவற்றை வைத்து பார்க்கும்போது சிறிதரன் திட்டமிடப்பட்ட முறையில் அரசின் செயற்பாடுகளுக்கான பணியில் பயன்படுத்தப்பட்டமை உறுதியான விடயம். அதனை யாரும் பொய்சொல்லி ஏமாற்றமுடியாது.
முன்னர் சிறிதரனை ஒரு தேசியவாதி என நம்பி அவருடன் கூட ஒரு பேச்சுவார்த்தை செய்தோம். கூட்டமைப்பின் ஏமாற்று அரசியலை விட்டு வாருங்கள் எனக்கேட்டோம். ஆனால் அவர் எம்பியாக வந்து அரசியல் செய்யவேண்டும் எனச்சொன்னார்.
அதனால் எமக்கு ஒரு ஆசனம் வந்தால்கூட அதனை அவருக்கு கொடுப்போம் என வாக்குறுதி கொடுத்திருந்தோம். ஆனால் அதனைக்கூட அவர் அப்போது அதனை ஏற்றுக்கொள்ளவில்லை.
மேலும் இரண்டு எழுகதமிழ் நிகழ்வுகளை நடத்திவிட்டு பேரவை தனது பணியை நிறுத்திவிட்டுள்ளது. பேரவை தனது பணியை தொடர்ந்து முன்னெடுக்கவேண்டும்.
– என்றார்.